பல ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் கேரள மாநிலத்திலிருந்து சிங்கப்பூருக்கு இடம்பெயர்ந்த மலையாளி சமுதாயத்தினர் சிங்கப்பூரின் இந்திய மக்கள்தொகையில் இரண்டாவது பெரிய எண்ணிக்கையில் உள்ளனர்.
அவர்களின் கலாசாரத்தையும் அடையாளத்தையும் நினைவுகூர்ந்து ஆவணப்படுத்தும் நோக்கில் இந்திய மரபுடைமை நிலையம் ‘எண்டே வீடு’ எனும் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்து வருகிறது.
மலையாள கலாசாரத்தில் முக்கியக் கூறாக இருப்பது அச்சமுதாயத்தை சேர்ந்த பெண்கள் விரும்பி அணியும் பாரம்பரிய கசவு சேலை. ஒவ்வொரு மலையாளப் பெண்ணின் வீட்டிலும் கசவு சேலை கண்டிப்பாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
மலையாளிகள் கொண்டாடும் ஓணம் பண்டிகையில் தொடங்கி, திருமணத்துக்கு மணப்பெண் அணியும் சேலை வரை, அனைத்து முக்கிய விழா காலங்களிலும் கசவு சேலை அக்கலாசாரத்தின் குறிப்பிடத்தக்க அடையாளமாக பழங்காலந்தொட்டே இருந்து வருகிறது.
இந்நிலையில், உள்ளூர் ஆடை வடிவமைப்பாளரும் ‘ஸ்டைல்மார்ட் பிரைடல்’ கடையின் படைப்பாக்கத்திறன் இயக்குநருமான கவிதா துளசிதாஸ் இந்திய மரபுடைமை நிலையம் ஏற்பாடு செய்யும் கண்காட்சிக்காக தனது தனித்துவமிக்க வடிவமைப்புகள் கொண்ட கேரள கசவு சேலைகளை காட்சிப்படுத்தவுள்ளார்.
நவீன போக்கிற்கேற்ப பாரம்பரிய கசவு சேலையை மாற்றியமைத்து, இளம்பெண்கள் விரும்பி அணியக்கூடும் வடிவில் அவர் சேலைகளை வடிவமைத்துள்ளார். தன் தந்தை மலையாளி என்று பகிர்ந்துகொண்ட கவிதா, கசவு சேலைகளுக்கு சிறுவயதிலிருந்தே அறிமுகமானவர்.

“கசவு சேலைகளை வடிவமைக்கும்போது நான் முதலில் அவை நவீன பாணியில் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். இக்காலத்துப் பெண்கள் தயக்கமின்றி தங்களின் மூதாதையர்கள் அணிந்த கசவு சேலைகளை அணிய வேண்டும். கசவு சேலைகள் காலப்போக்கில் பல பரிமாணங்கள் எடுத்துள்ளன. அதனால், மாறுபட்ட வடிவில் இந்தக் கண்காட்சிக்காக சேலைகளை வடிவமைத்துள்ளேன்.” என்று கவிதா கூறினார்.
நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் காட்சிப்படுத்தப்பட இருக்கும் கவிதாவின் கசவு சேலைகளில் அழகு ராணிகள் கண்காட்சியின் தொடக்க விழாவில் நடைபெறவிருக்கும் ஆடை அலங்கார நிகழ்வில் பவனி வருவதை காணலாம்.
கசவு சேலைகளின் அழகு முழுமை பெற, உள்ளூர் ஒப்பனையாளர் காயத்திரி மேனன் ஆடை அலங்கார நிகழ்வுக்காக அழகு ராணிகளை அழகுபடுத்தவுள்ளார். கசவு சேலைகளுக்கு ஏற்றவாறு பாரம்பரிய மலையாளப் பெண் அடையாளம் குறிக்கும் ஒப்பனைப் போக்கை அவர் சேர்க்கவுள்ளார்.
இதுபோல மலையாள சமுதாயத்தினரின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் பற்பல அம்சங்கள் கண்காட்சியில் இடம்பெறவுள்ளன. கண்காட்சி இம்மாதம் 25ஆம் தேதி தொடங்கவுள்ளது.