இவ்வாண்டுக்கான சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவின் ஒரு பகுதியாக ‘திடுக்கிடல் கவிதைகள்’ எனும் கவிதை வாசிப்பு கலந்துரையாடல் நிகழ்வு ஆசிய நாகரிக அரும்பொருளகத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 19) நடைபெற்றது.
எழுத்தாளர் பெருமாள் முருகன், பிச்சினிக்காடு இளங்கோ ஆகியோர் கலந்துகொண்டு தங்களைத் திடுக்கிடச் செய்த, தங்களிடம் தாக்கத்தை ஏற்படுத்திய கவிதைகளைப் பகிர்ந்தனர்.
தொடக்க உரையாற்றிய கவிஞர் இன்பா, “கவிதைகள் பெரும் மந்திர சக்தி கொண்டவை. அது ஒரு மாய மலர். கவிதைகள் நம்மை வசீகரிக்கவும் சிந்திக்கவும் அதிர்ச்சியடையவும் செய்கின்றன,” என்று பேசியதோடு கவிஞர் தேவதேவன், வெண்ணிலா ஆகியோரின் கவிதைகளைப் பகிர்ந்தார்.
தொடர்ந்து பேசிய எழுத்தாளர் பெருமாள் முருகன், ஒரு சராசரி மனிதனின் பார்வைக்கும் கவிஞனின் மாற்றுக்கோணம் உள்ள பார்வைக்குமான வேறுபாட்டைச் சுட்டிக்காட்டினார். விதிகளை மீறும் கவிஞர்களும் அவர்கள் முன்வைக்கும் சமூக பண்புநலன்கள் மீதான கேள்விகளும் அனைவரையும் திடுக்கிடச் செய்வதாகச் சொன்ன அவர், பட்டினப்பாலை, முத்தொள்ளாயிரம் தொடங்கி, நவீன கவிதைகள் வரை பலவற்றைப் பகிர்ந்தார்.
இந்நிகழ்வில் கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ, தாயுமானவன் மதிக்குமார், வெற்றிச் செல்வன், சங்கீதா, ஆகியோர் தங்களது சில படைப்புகளை வாசித்தனர். சிங்கப்பூர் கவிமாலை அமைப்பின் தலைவர் கவிஞர் இன்பா கவிதைகள் வாசித்ததோடு, இந்நிகழ்வை தொகுத்தும் வழங்கினார்.
சிங்கப்பூர் கவிமாலை அமைப்பின் கவிதைத் தொகுப்பான ‘அலை அலையாய்’ புத்தகத்தை இந்நிகழ்வில் வெளியிட்ட எழுத்தாளர் பெருமாள் முருகன், பின்னர் நடைபெற்ற கலந்துரையாடல் அங்கத்தில் பல்வேறு கவிஞர், வாசகர்களின் கேள்விகளுக்கு சுவைபட பதிலளித்தார்.

மேலும் இந்நிகழ்வில், கவிமாலை அமைப்பு வழங்கும் சிறந்த கவிதை நூலுக்கான விருதும் தங்கப் பதக்கமும் ‘கீதாரியின் உப்புக்கண்டம்’ எனும் தொகுப்புக்காக கவிஞர் வெற்றிச்செல்வன் ராஜேந்திரனுக்கு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட தொண்டூழியர் லிங்கனேசன், 30, “பெருமாள் முருகனின் ‘பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை’ என்னை மிகவும் ஈர்த்தது. அவரது உரையைக் கேட்பதற்காகவே இங்கு வந்தேன். அவரைச் சந்திப்பதில் மகிழ்ச்சி,” என்றார்.
தமிழ் வாசிப்பை நேசிக்கும் அபிராமசுந்தரி, 50, பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’ புத்தகத்தை விரும்பிப் படித்ததாலும் மற்றொரு நிகழ்வில் அவர் பேசியதை ரசித்ததாலும் மீண்டும் அவரது உரையைக் கேட்க வந்ததாகக் குறிப்பிட்டார்.