தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புதிய பாணியில் மீண்டும் உணவுத் திருவிழா

2 mins read
2ed6cbcc-3284-4eab-9772-23e3adae5e4b
உணவுத் திருவிழாவிற்கு வருவோர்க்கு ஆப்பம் வழங்கவிருக்கும் தள்ளுவண்டி. - படம்: அனுஷா செல்வமணி
multi-img1 of 3

‘ஒவ்வொரு மசாலாவுக்கும் ஒரு கதை உள்ளது’ என்ற கருப்பொருளோடு மாபெரும் இந்திய உணவுத் திருவிழா மீண்டும் நடைபெறவிருக்கிறது. .

கொவிட்-19 கட்டுப்பாடுகளால் மூவாண்டுகளாகத் தள்ளிப்போன அந்தத் திருவிழா இம்முறை பல புதிய அம்சங்களுடன் நடைபெறவுள்ளது.

இந்திய உணவுகளின் பாணி, அவற்றின் கலாசாரப் பின்புலம் ஆகியவற்றை ஒட்டி நடைபெறவிருக்கும் திருவிழாவில் இசை, கலை, நடனம், உணவு குறித்த உரையாடல்கள் போன்றவை முக்கிய அங்கம் வகிக்கவுள்ளன.

சுற்றுப்பயணிகள் உட்பட அனைத்து வயதினரையும் 14 நாள்களுக்கு கவரவிருக்கும் இத்திருவிழாவில் ஐந்து சுவாரசியமான உணவு வகைகளை மக்கள் எதிர்பார்க்கலாம்.

சமையற்கலை வல்லுநர்களின் உணவு வகைகள், தனித்துவமிக்க இனிப்பு வகைகள், அன்றாடம் மக்கள் விரும்பி உண்ணும் தின்பண்டங்கள் ஆகியவை அந்த உணவு வகைகளில் கிடைக்கும்.

பொதுமக்கள் சுவைத்துப் பார்க்க விரும்பும் உணவு வகைகள் திருவிழாவில் அமைக்கப்படவிருக்கும் தள்ளுவண்டிகளில் கிடைக்கும்.

அத்துடன், சிங்கப்பூரில் அருகிவரும் பாம்பாட்டிகள், கிளி சோதிடம் சொல்வோர் போன்றோரின் தொழில் சிறப்பை விளக்கிக் கூறும் வகையில், சிங்கப்பூரின் கடைசிப் பாம்பாட்டி யூசுஃப் காசிம் குறிப்பிட்ட சில நாள்களில் நிகழ்ச்சி படைக்கவுள்ளார்.

சிங்கப்பூரின் கடைசி கிளி சோதிடர் ராஜு திருவிழாவின் இறுதி நாள்வரை பங்கேற்பார்.

பொதுமக்களுக்கான நடவடிக்கைகள் பட்டியலில் பலவிதமான நடவடிக்கைகள் இம்முறை சேர்க்கப்பட்டுள்ளன.

லிட்டில் இந்தியாவின் தேக்கா நிலையத்தைச் சுற்றி உணவுத் தடம், ஆயுர்வேதப் பயிலரங்குகள், தமிழகத்தைச் சேர்ந்த நாட்டுப்புறக் கலைஞர்களின் நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்ச்சிகள் காத்துக்கொண்டிருக்கின்றன.

சிறுவர்கள் அவர்களுக்குப் பிடித்த வகையில் இந்தியப் பாரம்பரிய பாத்திரங்களை வைத்து விளையாடும் வாய்ப்பும் உள்ளது.

இந்தியா, ஜப்பான், இந்தோனீசியா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த சமையல் வல்லுநர்கள் தங்கள் சமையல் திறனை வெளிப்படுத்த அனைத்துலக சமையற்காரர்கள் போட்டியில் மோதவுள்ளனர்.

சிங்கப்பூர் இந்திய உணவகங்கள் சங்கம் ஏற்பாடு செய்யும் இந்தத் திருவிழாவில் மேலுமொரு புதிய அங்கமாக கின்னஸ் உலகச் சாதனைக்கான பரோட்டா புரட்டிப்போடும் போட்டி நடைபெறவுள்ளது. ஆகப் பெரிய வடிவில் பரோட்டாவைப் புரட்டிபோடுபவரின் பெயர் சாதனைப் பட்டியலில் சேரும்.

நவம்பர் 27ஆம் தேதி தொடங்கவிருக்கும் உணவுத் திருவிழா டிசம்பர் 10ஆம் தேதி நிறைவுபெறும்.

லிட்டில் இந்தியாவில் அமைந்துள்ள பர்ச் சாலையில், காலை 10 முதல் இரவு 10 மணி வரை பொதுமக்கள் இத்திருவிழாவில் கலந்துகொள்ளலாம். அனுமதி இலவசம்.

உணவுத் திருவிழாவின் அதிகாரபூர்வத் தொடக்க விழா டிசம்பர் 1ஆம் தேதி மாலை நடைபெறும்.

கூடுதல் தகவல்களுக்கு https://www.greatindianfoodfestival.com/ இணையத்தளத்தை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்