தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாலின சமத்துவம் குறித்து சிங்கப்பூர் இளையரின் எதிர்பார்ப்புகள்

2 mins read
4401b166-04c9-46b0-91f9-e2cf2622c65f
சிங்கப்பூர் ஆண்கள், பாலின சமத்துவம் என்பது பெண்களின் பிரச்சினை மட்டும் இல்லை என்று கருத்து கூறியுள்ளனர். - படம்: இணையம்

சிங்கப்பூரின் ‘ஜென்-ஸி’ இளையர் மத்தியில் பாலின சமத்துவம் குறித்த எதிர்பார்ப்புகள் கூடியுள்ளதாகவும் சமத்துவம் ஏற்படும் நிலையை நோக்கிச் செல்ல அவர்கள் முற்படுவதாகவும் அண்மைய ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.

பெண்களுக்கான பிரத்யேக ‘டேட்டிங்’ இணையத்தளத்தை நடத்தும் ‘பம்பள்’ நிறுவனம், உறவுகள், குடும்பம், பணியிடம் உள்ளிட்டவற்றில் பாலின சமத்துவத்தின் தற்போதைய நிலை, முழுமையான பாலின சமத்துவத்தை அடைவதற்கான தடைகள் ஆகியவற்றைப் புரிந்துகொள்ள 1,000 சிங்கப்பூரர்களிடம் ஆய்வு நடத்தியது.

இந்த ஆய்வின் முடிவில், ஜென்-ஸி எனும் 1997க்குப் பின் பிறந்த இளையர்கள், பாலின சமத்துவத்தின் மீது தங்களுக்கு முந்திய தலைமுறையினரான ‘மில்லேனியல்சை’விட அதிக எதிர்பார்ப்பைக் கொண்டுள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணியிடங்களில் தலைமைத்துவப் பதவிக்கான தேர்வுகளில் பாலின சமத்துவம் இருப்பதாக பத்தில் ஆறு மில்லேனியல் இளையர்கள் கருதும் நிலையில், பத்தில் ஐந்து ஜென்-ஸி இளையர்கள் மட்டுமே இதனை ஒப்புக்கொள்கிறார்கள்.

தொடர்ந்து, குழந்தைகள், வீட்டுப் பராமரிப்புப் பணிகளில் இருபாலினரின் பங்கும் சமமாக இருப்பதாக 44 விழுக்காடு மில்லேனியல் இளையர்கள் கருத்து தெரிவித்த நிலையில், 29 விழுக்காடு ஜென்-ஸி இளையர்கள் மட்டுமே இக்கருத்திற்கு உடன்படுகின்றனர்.

எனினும், தங்களது பணியிட வளர்ச்சியுடன், குடும்பப் பொறுப்புகளையும் கூடுதலாகச் சமாளிக்க, பெண்கள் அதிக சவால்களை எதிர்கொள்கிறார்கள் என்பதை இரு தலைமுறையினரும் ஒப்புக்கொள்கின்றனர்.

இந்த ஆய்வின் முடிவில், ஆண் பெண் என இருபாலாருக்கும் இருவேறு கருத்துகள் இருப்பதும் தெரியவருகிறது. பணியிடங்களில் வளர்ச்சி பெறவும், தலைமைப் பதவியை அடையவும் ஆண்களுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக ஏறத்தாழ 60 விழுக்காடு பெண்களும், இரு பாலினத்தவருக்கும் சமமான வாய்ப்புகள் கிடைப்பதாக ஏறத்தாழ 60 விழுக்காடு ஆண்களும் கருதுகின்றனர்.

வேலை வாழ்க்கைச் சமநிலைக்கான சவால்களை இரு பாலினத்தவரும் சந்திப்பதாகப் பத்தில் ஐந்து ஆண்கள் சொல்லும் நிலையில், பெண்களுக்குச் சவால்கள் அதிகமிருப்பதாக பத்தில் ஏழு பெண்கள் சொல்கின்றனர்.

மேலும், குடும்பப் பொறுப்புகளில் இரு பாலினத்தவரும் சமமாகக் கவனம் செலுத்துவதாக ஆய்வில் பங்கேற்ற ஆண்களில் 50 விழுக்காட்டினரும், பெண்கள் அதிகம் கவனம் செலுத்துவதாக 70 விழுக்காடு பெண்களும் கூறுகின்றனர்.

ஆண்கள்தான் வீட்டுக்கான வருமானம் ஈட்ட வேண்டும் என்கின்ற நிலை மாறியுள்ளதாகச் சொல்வதோடு, 86 விழுக்காடு ஆண்கள், உயர் பதவிகளில் இருக்கும், நல்ல வருமானம் கொண்ட பெண்களை மணப்பதை விரும்புவதாகவும் இந்த ஆய்வு முடிவு கோடிட்டுக் காட்டுகிறது.

பெரும்பாலான ஆண்கள், இருபாலினத்தவரும் நிதி நிர்வாகம் குறித்த விழிப்புணர்வோடு இருக்கவேண்டும் என்றும், பெண்கள் தங்களது உடல்நிலையில் தாக்கமேற்படுத்தும் எந்த முடிவையும் தாங்களே எடுக்க வேண்டுமெனவும் கருதுவதாக இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் முடிவு சிங்கப்பூரர்கள் பாலின சமத்துவத்தை நோக்கிச் சரியான பாதையில் நடைபோடுவதாகவும், நிதி நிர்வாகம், திருமணம், குழந்தைகள், பணியிட வளர்ச்சி என அனைத்திலும் சமமான வாய்ப்புகளை இருவரும் பெறுவதாகவும் பெரும்பாலானோர் கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டுகிறது.

சமூகக் கட்டமைப்பின் முக்கியத் தேவை முழுமையான பாலின சமத்துவம்தான் எனப் பத்தில் ஏழு பேர் கருதும் நிலையில், சிங்கப்பூர் பாலின சமத்துவத்தை எட்டிவிட்டதாகப் பத்தில் மூவர் நம்புகின்றனர்.

குறிப்புச் சொற்கள்