தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

2024ல் வெளிநாடு செல்ல உற்சாகம்; திட்டமிட ஆர்வமின்மை

2 mins read
93f4086d-0cda-4c1f-b006-b11967fed306
பல மாதங்களுக்கு முன்பே விமானப் பயணச்சீட்டுகளை வாங்கினால், சலுகைகள் கிடைக்கும் என்பத்தைத் தெரிந்தும் சிங்கப்பூரர்கள் தாமதிக்கிறார்கள். -  படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 

வெளியூர்ப் பயணங்களை அடுத்த ஆண்டு மேற்கொள்ள சிங்கப்பூரர்கள் உற்சாகமாக இருந்தாலும் அதுகுறித்து திட்டமிடுவதில் அவர்களுக்கு விருப்பமில்லை.

சிங்கப்பூரர்கள் பயணம் மேற்கொள்வதில் அதிக நாட்டம் உள்ளவர்களாக இருந்தாலும் அவற்றுக்குத் திட்டமிடுவதில் தயக்கம் காட்டுகிறார்கள். ‘ஜெட்ஸ்டார் ஏஷியா’ அண்மையில் நடத்திய கருத்தாய்வில் 60% மக்கள் 2024ஆம் ஆண்டிற்கான பயணங்களுக்கு இன்னும் திட்டமிடவில்லை என்று கண்டுபிடிக்கப்பட்டது.

பல மாதங்களுக்கு முன்பே விமானப் பயணச்சீட்டுகளை வாங்கினால், சலுகைகள் கிடைக்கும் என்பதை அறிந்திருந்தும் சிங்கப்பூரர்கள் தாமதிக்கிறார்கள். ஒரு மாதத்திற்கு முன்பு வரை காத்திருந்து பயணச்சீட்டுகளை வாங்குகிறார்கள். இதனால், இரண்டு மடங்கு செலவு செய்யும் கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டுவிடுகிறது.

சிங்கப்பூரர்கள் பலருக்குக் கும்பலாகப் பயணம் செய்வதில் அதிக விருப்பம். ஆனால், குழுவாகப் பயணம் செய்யத் திட்டமிடும்போது அது செயல்படாமல் போய்விடுகிறது. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றில் ஒவ்வொருவருக்கும் உள்ள தனிப்பட்ட பயண விருப்பங்கள், முடிவுகள் எடுக்க முடியாமல் தடுமாறுதல் போன்றவை காரணங்களாக இருக்கின்றன.

இச்சவால்களை எதிர்கொள்ள ஜெட்ஸ்டார் ஏஷியா, எட்டு பிரபல பயண இடங்களைப் பயணிகளுக்கு வகுத்துள்ளது. பேங்காக், ஹைகோ, மணிலா, ஒகினாவா, பினாங்கு, புக்கெட், சுரபாயா மற்றும் வுஸி போன்றவை அந்த இடங்களில் அடங்கும்.

சிங்கப்பூரர்கள் இந்தப் பிரபல பயண இடங்களிலிருந்து ஏதேனும் ஒன்றை அவர்களது அடுத்தடுத்த பயணங்களுக்குத் தேர்ந்தெடுக்கலாம்.

புக்கெட், பாலி, ஹைகோ, கோலாலம்பூர் போன்ற இடங்களுக்குச் செல்பவர்கள் 2024ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை பெரும் சலுகைகளைப் பெறலாம். கோலாலம்பூருக்கு ஒருவழி பயணத்தை மேற்கொள்ள கட்டணங்கள் குறைந்த அளவாக $68க்கு வழங்கப்படும்.

வெளியூர் பயணங்களுக்கு எளிமையாகத் திட்டமிடத் தங்கள் வாடிக்கையாளர்களை மனதில்கொண்டு இச்சலுகைகளை வழங்குகிறது என்றும் பயணிகள் அடுத்த ஆண்டிற்கான பயணங்களை தடுமாற்றம் இல்லாமல் தொடங்குவதற்கு உதவுகிறது என்றும் குவாண்டாஸ், ஜெட்ஸ்டார் ஏர்வேசின் ஆசியாவுக்கான விளம்பர நேரடி விற்பனைப் பிரிவின் வட்டார மேலாளர் பெலின்டா ஆலன் கூறுகிறார்.

‘சிராங்கூன் ஏர் டிராவல் பிரைவெட் லிமிடெட்’ என்ற பயண நிறுவணம், பயணிகள் பெரும்பாலும் மலேசியா, இந்தோனீசியா போன்ற நாடுகளுக்குச் செல்கிறார்கள் என்றும் பயணிகள் சுற்றுப்பயணத் தொகுப்புத் திட்டங்களுக்கு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பதிவு செய்கின்றனர் என்றும் கூறுகிறது.

குறிப்புச் சொற்கள்