மனநலம் காக்க மாற்று சிகிச்சை வழிகள்

மனநலம் பேணுவதற்கு நோயாளிகள் வழக்கமாக உளவியலாளர்களை அணுகுவது வழக்கம்.

ஆனால், மாறிவரும் நவீனச் சூழலில் சிலர் தங்கள் மனநலம் காக்க மருத்துவ உதவியை நாட விரும்புவதில்லை. நண்பர்களும் குடும்ப உறுப்பினர்களும் தங்களைக் குறைத்து மதிப்பிட்டு விடுவார்கள் எனும் அச்சம் அவர்களை மாற்று சிகிச்சை முறைகளை நாட வழி வகுக்கிறது. சிங்கப்பூரில் அவ்வாறு மாற்று சிகிச்சை முறைகளைப் பின்பற்றி சேவை வழங்கும் சிலரைச் சந்தித்துத் தகவலறிந்தது தமிழ் முரசு.

புதுமையான பாணியில் ரெய்கி சிகிச்சை

புகழ்பெற்ற ஜப்பானிய குணப்படுத்தும் சிகிச்சை முறையான ‘ரெய்கி ஹீலிங்’ அண்மையில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. வெளிநாடுகளில் சில மருத்துவர்கள் தங்கள் சிகிச்சையில் ரெய்கி முறையைச் சேர்த்துக் கொள்வதாகத் தகவல்கள் கூறுகின்றன.

கடந்த எட்டு ஆண்டுகளாகத் தன்னை நாடி வருவோருக்கு இந்த வித்தியாசமான சிகிச்சை முறையைப் பின்பற்றி சேவை வழங்குகிறார் உளவியல் சிகிச்சையாளரும் ரெய்கி ஆசிரியருமான எக்‌ஷார் ஜேசு மில்ட்டன், 36.

“ரெய்கி ஹீலிங் என்பது, சுருங்கச் சொன்னால், பிரபஞ்ச சக்தியைப் பயிற்சியாளர் தன் உள்ளங்கைக்கு ஈர்த்து, அதன் பின் வாடிக்கையாளரின் சிரமத்தை போக்க உணர்வுபூர்வமாக அவர்களைக் குணப்படுத்த முடியும்,” என்று விளக்கினார் எக்‌ஷார்.

கேட்பதற்கு நம்பும்படி இல்லாவிட்டாலும் இந்த சிகிச்சை முறை மூலம் தானே பயனடைந்ததாகக் கூறும் எக்‌ஷார் மற்றவர்களும் அதேபோல் நலம்பெற உதவுவதாகக் கூறினார்.

முன்னர், மன உளைச்சலாலும் மனத்தெளிவில்லாமலும் சிரமப்பட்டார் இவர். எதேச்சையாகக் கேள்விப்பட்ட ரெய்கி ஹீலிங் சிகிச்சை முறையைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள சிங்கப்பூர் ரெய்கி நிலைய இணையத்தளத்தை அலசி ஆராய்ந்தார்.

தொடக்கத்தில் அவருக்கு இருந்த அவநம்பிக்கை, மூன்று நாள் ரெய்கி பயிலரங்கின் முடிவில் முற்றிலும் மாறியது.

நிலையத்தின் நிறுவனரும் ரெய்கி பயிற்றுவிப்பாளருமான எலைன் ஹேமில்டன் கிரண்டி பயிலரங்கை நடத்திய விதம், எக்‌ஷாருவை ரெய்கி உலகத்துக்கு கவர்ந்திழுத்தது.

பயிலரங்கில் ரெய்கி சிகிச்சை முறையைப் பயிற்சி செய்து பார்க்க வாய்ப்புக் கிட்டிய எக்‌ஷாருக்கு அதன்மேல் நாட்டம் தலைதூக்கியது. அவர் ரெய்கி சிகிச்சை முறையை முழுமையாகக் கற்றுத் தேர்ந்தார்.

ரெய்கி சிகிச்சை அமர்வின்போது ஒருவர் ரெய்கி மெத்தையில் கண்களை மூடிக்கொண்டு உடலைத் தளர்த்திக்கொள்ள வேண்டும். ஏறக்குறைய ஒரு மணி நேரத்திற்கு, அவர் உடலின் வெவ்வேறு பகுதிகளுக்கு பிரபஞ்ச சக்தியை ஈர்த்து அனுப்புவார் பயிற்றுவிப்பாளர்.

அதன் பிறகு உடலில் ஒரு வகையான குளிர்ச்சி அல்லது கூசும் உணர்ச்சி அவருக்கு ஏற்படும் என்று கூறும் எக்‌ஷார், ரெய்கி சிகிச்சை மேற்கொண்ட பிறகு அதன் பலன் சில நாள்களுக்கு நீடிக்கும் என்றார்.

எக்‌ஷார் அண்மைக் காலமாக வியப்பூட்டும் வகையில் விலங்குகளுக்கும், குறிப்பாக வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளுக்கும் இந்த சிகிச்சையை மேற்கொள்கிறார்.

மருத்துவர் மைதிலி பாண்டியனின் செல்ல நாய் நோய்வாய்ப்பட்டிருந்தபோது எக்‌ஷாரின் உதவி அவருக்குத் தேவைப்பட்டது.

எக்‌ஷாரின் தாயாருக்கு ஏற்கெனவே அறிமுகமான அவர், “எனது செல்லப் பிராணிக்கு ஒட்டுண்ணித் தொற்று ஏற்பட்டதால் அதன் உடல் எடை வெகுவாகக் குறைந்தது. எக்‌ஷாரின் ரெய்கி சிகிச்சை அமர்வு மூலம் எனது செல்லப் பிராணி எதிர்நோக்கிய துன்பத்தை அறிய முடிந்தது. அதற்கு மருத்துவர் பரிந்துரைத்த மருந்து பிடிக்கவில்லை என்பதையும் அதற்கு எங்கும் வலி ஏற்படவில்லை என்றும் தெரிந்து கொண்டேன்,” என்றார்.

குடும்பத் தொழிலாக உருவெடுத்த பூக்குளியல்

நான்கு தலைமுறைகளாகத் தன் குடும்பப் பாரம்பரியத்தைக் கட்டிக்காக்கும் விதத்தில் வாடிக்கையாளர்களுக்குப் புதுமையான முறையில் பூக்குளியல் எனும் குணப்படுத்தும் சிகிச்சை முறையைக் கொண்டுசேர்க்கிறார் 55 வயது ஸ்ரீகந்தன் பாலகிருஷ்ணன். தனது தாத்தாவுக்குப் பிறகு தொழிலை முன்னெடுத்துச் செல்லும் ஸ்ரீகந்தன் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக இதில் ஈடுபட்டு வருகிறார்.

வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் மனநலம் பாதிக்கப்பட்ட காரணத்திற்காகத் தன்னை நாடி வருவதாகக் கூறும் ஸ்ரீகந்தன் சிங்கப்பூரில் சிறுவர்களும்கூட மனஉளைச்சலுக்கு ஆளாவதாக வருந்தினார்.

‘சக்தி கன்சல்டன்சி’ எனும் தனது நிறுவனத்தில் 14 ஆண்டுகளாகப் பலதரப்பட்ட சேவைகளை வழங்கிவரும் ஸ்ரீகந்தன், வாடிக்கையாளர்களின் மனநலத்தைப் பாதுகாப்பதற்கு பூக்குளியல் சேவையை வழங்குகிறார். குடும்பப் பிரச்சினையால் ஏற்படும் மனஉளைச்சல், பணிச் சுமை, பள்ளியில் ஏற்படும் மனஉளைச்சல், மனத்தெளிவின்றிக் காணப்படுவது போன்ற சிரமங்களை இவரின் பூக்குளியல் சிகிச்சை நிவர்த்தி செய்கிறது.

பலகாலமாக ராணுவத்தில் பணிபுரிந்த பிறகு வாகனமோட்டும் பயிற்சி வழங்கி வந்தார் ஸ்ரீகந்தன். மற்றவர் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகத் தற்போது பூக்குளியல் சிகிச்சையில் ஈடுபட்டு வருகிறார்.

தொழிலில் ஆழமான ஈடுபாடுகொள்ள வேண்டும் என்பதற்காக ஸ்ரீகந்தன் பல நாடுகளைச் சேர்ந்த குணப்படுத்துபவர்களிடமிருந்து தொழில் நுணுக்கங்களைக் கற்றுத்தேர்ந்தார். இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஆறு ஆண்டுகள் தங்கியிருந்து ஆன்மீகத்தைக் கற்றுத் தேர்ந்தார். சிங்கப்பூர் திரும்பியதும் இந்தோனீசியா, மியன்மார், தாய்லாந்து போன்ற நாடுகளுக்குச் சென்று அவற்றின் கலாசாரத்தை அறிந்துகொண்டபின் 2009ல் நிறுவனத்தைத் தொடங்கினார்.

மனித உடலில் 60 விழுக்காடு தண்ணீர்தான். தண்ணீர் அதிக குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது என்று கூறும் ஸ்ரீகந்தன் அதில் மூலிகைப் பொருள்களைச் சேர்க்கும்போது மாற்றம் உடனடியாகத் தென்படும் என்றார். வழக்கமாக சந்தைகளில் கிடைக்கும் ரோஜாப் பூக்கள், எலுமிச்சைப் பழங்கள், வேப்பிலை போன்றவற்றுடன் தாமே தயாரித்த மூலிகைகளைக் கலந்து பூக்குளியலுக்குத் தயார் செய்கிறார்.

தொடக்கத்தில் காரியத் தடைகள், வாழ்க்கையில் தோல்வி, தூக்கமின்மை ஆகிய சிக்கல்களால் பாதிக்கப்பட்ட ஸ்ரீகந்தன் தானே பூக்குளியல் சிகிச்சை மூலம் மாற்றத்தை உணர்ந்ததால் அதனால் பிறரும் பயன்பெற வேண்டுமென்ற உந்துதலுடன் இச்சேவையை வழங்குகிறார்.

“ஒன்றரை மணி நேரப் பூக்குளியல் அமர்வில் ஒருவர் உட்கார்ந்த நிலையில் அவர்மீது, சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட பூக்குளியல் கலவை நீர் ஊற்றப்படும். நீர் ஊற்றப்படும்போது அவர் மாறுபட்ட உணர்ச்சிகளை உணரலாம். சிலர் புத்துணர்ச்சியோடு இருப்பார்கள். ஒரு சிலருக்கு அவர்களின் உடலிலிருந்து ஏதோ ஒன்று விலகியது போன்ற உணர்வு ஏற்பட்டு சோர்வுடன் காணப்படலாம். சிலர் அன்றிரவு நிம்மதியாக உறங்குவார்கள்,” என்றார் ஸ்ரீகந்தன்.

இந்த சிகிச்சையை நம்பிக்கையுடன் மேற்கொண்டால்தான் பலனடைய முடியும் என்றார் ஸ்ரீகந்தன். ஒரு நாளுக்கு 18 வாடிக்கையாளர்கள் வரை சேவை வழங்கும் ஸ்ரீகந்தன், பூக்குளியல் ஒரு மாற்று சிகிச்சை முறையே தவிர அது ஒருவரின் வாழ்வில் நேரும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் தளம் இல்லை என்பதை வலியுறுத்தினார்.

அறிதுயில் சிகிச்சையின் விந்தை

துணிவின்றி தடுமாற்றத்தோடு பேசுவது, மனிதர்களைச் சந்திக்க அச்சப்படுவது, தனக்குள் பல அச்ச நிகழ்வுகளை புதைத்து வைப்பது போன்றவற்றால் குணசேகரன் சந்திரசேகர், 38, மிகவும் சிரமப்பட்டார்.

12 ஆண்டுகள் சிங்கப்பூர் ஆகாயப் படையில் சேவையாற்றிய அவர் வாழ்வில் சந்தித்த தடுமாற்றங்களின் காரணமாக ஒருமுறை ‘ஹிப்னோதெரபிஸ்ட்’ எனும் அறிதுயில் சிகிச்சையாளர் ஒருவரைப் பார்க்கச் சென்றார். ஏற்கெனவே மாற்று சிகிச்சை முறைகள்மீது ஆர்வம் கொண்டிருந்த குணசேகரன் அவை குறித்து ஆராய்ந்து வந்தார்.

சிகிச்சையாளரிடம் சென்ற பிறகு தனது நடத்தையில் சிறிய மாற்றங்கள் தென்படவே, பிறருக்கும் இந்தச் சேவையை வழங்கும் உந்துதல் அவருக்கு ஏற்பட்டது. 2016ல் ஆகாயப் படை வேலையைக் கைவிட்ட அவர், மூன்று ஆண்டுகள் அறிதுயில் சிகிச்சையில் பயிற்சி மேற்கொண்டு 2019ல் அச்சேவையை வழங்கும் நிறுவனத்தைத் தொடங்கினார்.

ஆகாயப் படையில் நிரந்தரமான வேலையை விட்டபோது குணசேகரன் சொந்தத் தொழிலில் எவ்வளவு தூரம் வெற்றிபெற முடியும் என்று பலரின் விமர்சனங்களுக்கு ஆளானார். இருந்தபோதிலும் அவர் மனநலன், உறவுகளில் பிரச்சினை போன்ற சிக்கல்களால் அலைக்கழிக்கப்படுவோர்க்கு அறிதுயில் சிகிச்சை மூலம் உதவிக்கரம் நீட்டுகிறார்.

‘பாத்லைட் நிலையத்தில்’ அறிதுயில் சிகிச்சைப் பயிற்சி மேற்கொண்ட குணசேகரன் பொதுமக்களிடையே இந்த சிகிச்சை முறை குறித்து மிகத் தவறான கருத்து நிலவுவதாக எண்ணினார்.

திரைப்படங்களில் காண்பதுபோல் அறிதுயில் என்பது, சிகிச்சையாளர் வாடிக்கையாளரை ஒரே பார்வையில் வசியம் செய்வதன்று என்று கூறும் குணசேகரன், சிகிச்சையாளர் வாடிக்கையாளரின் ஆழ்மனத்தைப் புரிந்துகொண்டு அதைச் சீரான நிலைக்குக் கொண்டு வரலாம் என்றார்.

முதல் முறையாக தன்னை நாடி வருவோரிடம் குணசேகரன் அவர்கள் எதிர்நோக்கும் துன்பத்தை அறிந்துகொண்டு, தன்னால் அதற்கு நிவாரணம் அளிக்க முடியுமா என்பதை மதிப்பிடுகிறார். தன்னால் முடியாது என்று கருதினால் மருத்துவரைக் காண்பதே சிறந்தது என்று வாடிக்கையாளரிடம் பரிந்துரைக்கிறார்.

வாடிக்கையாளரிடம் முதலில் நல்லுறவை வளர்த்து கொள்வது தன்னுடைய பணிக்கு முக்கியம் என்கிறார் குணசேகரன். அதையடுத்து அவர்களின் ஆழ்மனத்தையும் உணர்ச்சிகளையும் இவர் புரிந்துகொள்கிறார். சிறிது நேர அமர்வில் வாடிக்கையாளரை நன்கு தளர வைத்து தியானத்தையும் பயிற்றுவிக்கிறார். ஓசிடி எனும் மனநோய்ப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவரைக் கையாண்ட குணசேகரன் சிலருக்கு ஒரே அமர்வில் நிவாரணம் கிடைத்தாலும் அது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தாது என்றார்.

வாரம் இரண்டிலிருந்து மூன்று வாடிக்கையாளர்கள் வரை சந்திக்கும் இவர் ஆக இளைய வாடிக்கையாளராக எட்டு வயது சிறுவனுக்கு அறிதுயில் சிகிச்சை அளித்துள்ளார். இச்சிகிச்சையை நாட வயது வரம்பு இல்லையென்ற அவர் உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் அமைந்துள்ள ‘எஸ்விபிடிரைப்’ எனும் அறிதுயில் சிகிச்சை வழங்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

உள்ளூர்க் கலைஞர் நரேன், குணசேகரனின் வாடிக்கையாளர்களில் ஒருவர். அவரின் அறிதுயில் சிகிச்சை அமர்வுகளுக்குச் சென்ற நரேன், “குணசேகரன் அறிதுயில் சிகிச்சை மூலம் என்னிடம் உணர்வுபூர்வமான மாற்றங்களையும் கண்ணுக்குப் புலப்படும் மாற்றங்களையும் ஏற்படுத்தியுள்ளார். மனக்கவலை, பீதி அடையும் போக்கு போன்றவற்றால் பாதிக்கப்பட்டோர் குணசேகரிடம் வரவேண்டும்,” என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!