தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சமய நல்லிணக்கத்தை வளர்க்கும் இளம் தலைவர்கள்

3 mins read
84bc67bf-2115-4c01-9534-bfbba5911af4
‘ஹோப் இனிஷியேட்டிவ்’ கூட்டணியின் ‘சோவிங் கேர் டுகெதர்’ இயக்கத்தின்கீழ் பதவியேற்ற இளம் தலைவர்கள் மன்றத்தினர். - படம்: ரவி சிங்காரம்
multi-img1 of 3

சமூக சேவைவழி சமய நல்லிணக்கத்தை வளர்க்கும் செயல்திட்டங்களுக்கான தலைமைப் பொறுப்புகளுக்கு, டிசம்பர் 7ஆம் தேதி, 16 முதல் 40 வயது வரையிலான இளம் தலைவர்களை நியமித்தது ‘ஹோப் இனிஷியேட்டிவ்’ கூட்டணி.

அவர்களுக்குப் பதவியேற்புச் சான்றிதழ்களை வழங்கிச் சிறப்பித்தார் சிறப்பு விருந்தினரான துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்.

ஐந்தாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் ‘ஹோப் இனிஷியேட்டிவ்’ கூட்டணி, 250க்கும் மேற்பட்ட விருந்தினர்களோடு நடத்திய நன்கொடை இரவு விருந்தின் ஓர் அங்கமாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இக்கூட்டணியின் ‘சோவிங் கேர் டுகெதர்’ இயக்கத்தின்கீழ் செயல்படும் இளம் தலைவர்கள் மன்றத்தில் 11 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்து இளையர் கட்டமைப்புத் தலைவர் கார்த்திக் ராமசாமி அவர்களில் ஒருவர். இளையர்களின் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்தி, அவர்களைப் பல உன்னத காரியங்களில் ஈடுபடுத்த விரும்புவதாக அவர் கூறினார்.

“விரைவில் இளையர் வளர்ச்சிக்கான பல நல்ல திட்டங்களை வகுப்போம்,” என்று அவர் உறுதியளித்தார்.

‘தி ஏல்ஃபபெட்’ செயல்திட்டம்வழி குறைந்த வருமானக் குடும்பங்களின் சிறுவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தையும் அவர் ஊக்குவிக்கிறார்.

டிசம்பர் 7ஆம் தேதி பதவியேற்ற மற்றொருவர் முகமது ராஸித், 21. சிறுவயதிலிருந்தே சமூகத்திற்குத் தொண்டாற்றிவந்துள்ளார்.

இந்திய முஸ்லிம் சமூக சேவைச் சங்கம், இந்திய முஸ்லிம் இளையர்கள் பிரிவு, ‘ஹேஷ்பீஸ்’, சிண்டா இளையர் மன்றம், தமிழர் பேரவை, சிங்கைத் தமிழ்ச் சங்கம் போன்ற பல அமைப்புகளின்வழி சமய நல்லிணக்க, சமூக சேவை முயற்சிகளில் அவர் ஈடுபட்டு வந்துள்ளார்.

துணைப் பிரதமரிடமிருந்து பதவியேற்புச் சான்றிதழைப் பெற்ற முகமது ராஸித், 21.
துணைப் பிரதமரிடமிருந்து பதவியேற்புச் சான்றிதழைப் பெற்ற முகமது ராஸித், 21. - படம்: ‘ஹோப் இனிஷியேட்டிவ்’ கூட்டணி

அதனால் ‘ஹோப் இனிஷியேட்டிவ்’ அளித்த இவ்வாய்ப்பை அவர் மகிழ்ச்சியாக ஏற்றார்.

“உலகத்தை மாற்ற பல உத்திகள் உள்ளன. அவற்றை எவ்வாறு கையாளுகிறோம் என்பதைப் பொறுத்தே உலகில் நாம் ஏற்படுத்தும் தாக்கம் அமைகிறது,” என்றார் ராஸித்.

இந்த இளையர் மன்றத்தினர் ஏற்கெனவே ‘ஹோப் இனிஷியேட்டிவ்’வின் சமய நல்லிணக்க நடவடிக்கைகள் பலவற்றில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாண்டு நோன்பு மாதத்தின்போது, குறைந்த வருமானக் குடும்பங்களை (முஸ்லிம் அல்லாதோர் உட்பட) ‘ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன்’ சிங்கப்பூருக்கும் ‘ஹார்ட்பீட்@பிடோக்’கிற்கும் அழைத்துச் சென்று நோன்பு துறக்கும் ஏற்பாட்டில் உதவினர்.

நிகழ்ச்சியின் சிறப்பு அங்கங்கள்

நன்கொடை வாரத்தின் 7வது நாளை முன்னிட்டு, முன்மாதிரிப் பங்காளிகள், நன்கொடையாளர்களைப் பாராட்ட, முதன்முறையாக ‘டுகெதர் இன் இம்ப்ரூவிங் லைவ்ஸ்’ விருதுகள் வழங்கப்பட்டன.

அனைத்துலக வெளிநாட்டவர் மாதத்தை முன்னிட்டு, ‘ஏஜிடபுள்யூஓ’ எனும் வெளிநாட்டு ஊழியர் உதவிக்குழுவைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர்களின் பிரதிநிதியும் வெளிநாட்டு இல்லப் பணியாளரும் இணைந்து ‘டுகெதர் இன் சிங்கப்பூர்’ இயக்கத்தைத் தொடங்கிவைத்தனர்.

இவ்வியக்கத்தின்வழி, வெளிநாட்டு ஊழியர்களைப் பாராட்டும் பல நடவடிக்கைகள் இடம்பெறும்.

துணைப் பிரதமர் ஹெங் தமது உரையில், சிங்கப்பூரின் சமூகப் பிணைப்பை கட்டிக்காப்பதற்கான மூன்று உத்திகளாக சமய நல்லிணக்கத்தை வளர்த்தல், வெளிநாட்டு ஊழியர்கள் உட்பட சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் வலுப்படுத்துதல், சமூகச் சிந்தனை உடைய இளம் தலைவர்களைப் பேணுதல் ஆகியவற்றைச் சுட்டினார்.

கொவிட் தொற்றுக்காலத்தில் ‘ஹோப் இனிஷியேட்டிவ்’, 21,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கு, ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட உணவுகளையும் 1.2 மில்லியன் மதிப்புள்ள பொருள்களையும் வழங்கியதை எடுத்துக்கூறிய ‘ஹோப் இனிஷியேட்டிவ்’ கூட்டணித் தலைவர் ரெவரெண்ட் இசெகியல் டான், அன்பான நெஞ்சங்களால் எதிர்காலத்தில் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை உருவாக்க முடியும் என்றார்.

குறிப்புச் சொற்கள்