அவான்ட் நாடகக் குழுவின் ‘ராசி’ நகைச்சுவை நாடகம்

அவான்ட் நாடகக் குழுவின் ‘ராசி’ நகைச்சுவை நாடகம்

2 mins read
fb4e97ac-5511-4dc2-91c1-a69b826c8783
அவான்ட் நாடகக் குழுவின் ‘ராசி’ நகைச்சுவை நாடகம். - படம்: அவான்ட் நாடகக்குழு

சிங்கப்பூரில் புதிதாக வீடு வாங்குவதை மையப்படுத்தி ‘ராசி’ எனும் புதிய நகைச்சுவை நாடகத்தை அவான்ட் நாடகக்குழு அரங்கேற்றவுள்ளது. இம்மாதம் 14, 15, 16 தேதிகளில் ஸ்டாம்ஃபோர்ட் ஆர்ட்ஸ் சென்டரில் இரவு 8 மணிக்கு இந்த நாடகம் அரங்கேற்றப்படும்.

இந்த நாடகத்திற்கான திரைக்கதை, இயக்குநர் பொறுப்புகளை அவான்ட் நாட­கக்­கு­ழு­வின் தலைவர் திரு க.செல்வநாதன் ஏற்றுள்ளார். இந்த நாடகத்தின் கதையை எழுதியுள்ளார் உமையாள் திரு.   

“கேளிக்கையை மையமாக வைத்து டிசம்பர் மாத விடுமுறையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் விதமாக இந்த நாடகத்தை அரங்கேற்றவுள்ளோம். புதிதாக வீடு வாங்கும் அனுபவங்கள், அதில் சந்திக்கும் பிரச்சினைகள் ஆகியவற்றை நகைச்சுவைப் பின்னணியில் உருவாக்கியுள்ளோம்,” என்று கூறினார் திரு செல்வநாதன். 

“ஒரு வீட்டில் நினைவுகளும் பல்வேறு உணர்வுகளும் புதைந்திருக்கும். அந்த முக்கியத்துவத்தை இந்த நாடகம் பிரதிபலிக்கும். பார்வையாளர்கள் நாடகத்தின் இடையே நடிகர்களுடன் உரையாடுவதற்கான ஓர் அங்கத்தையும் ஏற்பாடு செய்துள்ளோம்,” என்று இவர் தெரிவித்தார்.  

இந்த நாடகத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் தொலைக்காட்சித் தயாரிப்பாளரான மஞ்சுளா பாலகிருஷ்ணன், 44.

“கடந்த 24 ஆண்டுகளாக தொலைக்காட்சித் துறையில் பணியாற்றினாலும் முதல்முறையாக நாடகத்தின் பிரதான வேடத்தில் நடிக்கிறேன். நாடகத்தை ஆரம்பம் முதல் இறுதி வரை பார்வையாளர்கள் விழுந்து விழுந்து சிரிக்கும் வண்ணம் உருவாக்கியுள்ளோம். இந்த டிசம்பர் மாத விடுமுறைக்கு இந்த நாடகம் ஒரு நல்ல நகைச்சுவை விருந்தாக அமைந்திடும்,” என்று இவர் கூறினார். 

குடும்பத்துடன் பார்க்கக்கூடிய நகைச்சுவைப் படைப்பான இந்த நாடகத்தை, ஏழு வயதுக்கு மேற்பட்ட பார்வையாளர்கள் பார்க்கலாம் என்றும் இவர் தெரிவித்தார். 

இந்த நாடகத்திற்கான நுழைவுச்சீட்டுகளை avantraasi.eventbrite.sg இணையப்பக்கத்தைப் பெறலாம். 

குறிப்புச் சொற்கள்