சென்னையில் மா. அன்பழகனின் ‘செம்பியன் திருமேனி’ நாவல் வெளியீடு

2 mins read
a8ef6eb2-035a-438b-8ecd-36d7587f45a0
(இடமிருந்து) தங்கர்பச்சான், நூலாசிரியர் மா. அன்பழகன், நடிகர் சிவக்குமார், சொற்பொழிவாளர் ஜெகத் கஸ்பர். - படம்: மா. அன்பழகன்

மதுரைத் தமிழ்ச் சங்கம், திருவாரூர்த் தமிழ்ச் சங்கம், நெய்வேலி தாய் ராசி தொலைக்காட்சி நிறுவனங்களின் சார்பாக அறிமுகம் கண்டபின்,  இறுதியாக, டிசம்பர் 3ஆம் தேதியன்று மாலை 5.30 மணியளவில் சென்னை கவிக்கோ மன்றத்தில் பிரபல திரைப்பட நடிகர் சிவகுமார் தலைமையில் சிங்கப்பூர் எழுத்தாளர் மா. அன்பழகனின் சரித்திரப் புனைவு நூலாகிய “செம்பியன் திருமேனி“ அறிமுகம் கண்டது. சிவக்குமார் நூலை வெளியிட்டு அறிமுகப்படுத்த, பிரபல திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் பெற்றுக்கொண்டார்.

நூலை  வெளியிட்டுப் பேசிய நடிகர் சிவக்குமார், “நான் கதாநாயகனாக நடித்த பாதபூஜை படத்தின் தயாரிப்பாளர் அன்பழகன்.  எதிரொலி, நவக்கிரகம் ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றி இருக்கிறோம். நான் நூறு படங்களை நடித்து முடித்தவுடன் அன்பழகன் உட்பட அனைத்துத் தயாரிப்பாளர்களுக்கும் எம்ஜிஆர் கரங்களால் நினைவுச் சின்னம் கொடுத்து என் நன்றியைத் தெரிவித்துக்கொண்டேன்.

கோயமுத்தூரில் நடந்த என் திருமணத்தில் கலந்துகொண்டவர். எல்லாவற்றுக்கும் மேலாக என் குருநாதர்  கே. பாலசந்தர் அவர்களிடம் 15 படங்களுக்கு உதவியாளராகப் பணிபுரிந்திருக்கிறார் திரு அன்பழகன். ஓர் இயக்குநராக விளங்கவேண்டிய அன்பழகன் கதாசிரியராகி இன்னும் எழுதிக்கொண்டிருக்கிறார்,” என்று சொல்லி தனக்கும் நூலாசிரியருக்கும் உள்ள உறவை எடுத்துரைத்தார். 

சிங்கப்பூர் என்றால் எனக்கு அன்பழகன் நினைவுதான் வரும் என்று பேசினார் முதல் நூலைப் பெற்றுக்கொண்ட இயக்குநர் தங்கர்பச்சான். சிங்கப்பூர்த் தமிழாசிரியர் அர்ச்சுனன், தமக்கு இந்நூலுக்கு அணிந்துரை கொடுக்கும் வாய்ப்பு எவ்வாறு கிட்டியது என்று பகிர்ந்துகொண்டார். பிரபல பேச்சாளர் சாரதா நம்பி ஆரூரன் நகைச்சுவை ததும்பப் பேசி அரங்கிலிருந்தோருக்கு மகிழ்வூட்டினார்.

அருட்தந்தை ஜெகத் கஸ்பர் விரிவான திறனாய்வுரை ஆற்றினார். இறுதியில் நூலாசிரியர் அன்பழகன் ஏற்புரை வழங்கி எல்லோருக்கும் நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்திகள்