வேலையிடத்தில் தொண்டூழியக் கலாசாரத்தை வளர்த்த மேகனுக்கு பாராட்டு

வேலையிடத்தில் தொண்டூழியக் கலாசாரத்தை வளர்த்த மேகனுக்கு பாராட்டு

2 mins read
7ed3f005-3b99-4958-b607-fd28f23cdd94
தொண்டூழியப் பணியில் மேகன் ஃபெர்னாண்டஸ், 33 (வலது). - (படம்: புருடென்ஷியல் / மேகன் ஃபெர்னாண்டஸ்)

அடித்தளத்தில் தனிநபர்கள் பலர் சொந்த நேரத்தில் தொண்டூழியம் செய்ய முடிவது பாராட்டத்தக்கது.

ஆனால், நீண்ட நேரம் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு தொண்டூழியம் செய்யும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருவது வேலையிடங்களின் பொறுப்பு என்கிறார் அதிபர் மாளிகையில் கெளரவிக்கப்பட்ட மேகன் ஃபெர்னாண்டஸ், 33.

2018 முதல் புருடென்ஷியல் காப்புறுதி நிறுவனத்தில் பணிபுரிந்த திருவாட்டி ஃபெர்னாண்டஸ், ஈராண்டுகளுக்கு முன்னர் சமூக முதலீட்டு அணியின் தலைவராகப் பொறுப்பேற்றார். தொண்டூழியத்தின்மீது பற்றுள்ளவராகத் திகழும் திருவாட்டி மேகன், அதனைத் தாம் செய்யும் வேலையுடன் இணைத்துகொள்ள முடிந்ததை நினைத்து மகிழ்கிறார்.

அதிபர் தர்மன் சண்முகரத்னத்தை இம்மாதம் 7ஆம் தேதி சந்தித்து உறவாடிய 160 பேரில் மேகனும் ஒருவர். தேசிய தொண்டூழிய, கொடைவாளர் நிலையம், தேசிய சமூக சேவை மன்றம், கலாசார, சமூக, விளையாட்டுத்துறை அமைச்சின் ‘எஸ்ஜி கேர்ஸ்’ அலுவலகம் ஆகியவை இந்தத் தொண்டூழியர்களின் முயற்சிகளைக் கொண்டாடுகிறது.

அதிபர் தர்மனுடன் கலந்துறவாடுவதற்கான வாய்ப்பும் இந்தத் தொண்டூழியர்களுக்குக் கிட்டியது. ‘சும்மா கொடுங்கள்’ (ஜஸ்ட் கிவ் லா) என்ற கருப்பொருளுடன் நடந்தேறிய இந்நிகழ்ச்சி, தனிநபர்களையும் சமூக அமைப்புகளையும் ஊக்குவிக்க முனைகிறது.

சுகாதாரம், கல்வி உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த சமூகப் பணித்திட்டங்களை உருவாக்கி 1,300 பணியாளர்களைத் தொண்டூழியர்களாக ஈடுபடுத்துவது திருவாட்டி மேகனின் பொறுப்பு.

“சமூக முதலீடு என்பது பணத்தை மட்டுமன்றி, மனிதவளத்தையும் நற்செயல்களில் செலுத்துவதாகும்,” என்று அவர் கூறினார்.

இந்தியாவின் பெங்களூரில் பிறந்த மேகன், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கப்பூருக்கு வந்தார். கொங்கணி இவரது தாய்மொழி. நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் தொடர்புத்துறையில் முதுநிலைப் பட்டம் பெற்ற அவர், அத்திறனைத் தொண்டூழியப் பயிற்சிக்காகப் பயன்படுத்தினார்.

தொண்டூழியம் செய்வதற்கான வாய்ப்புகளை நிறுவனம் வழங்குவதுடன் அதற்கான செயல்பாட்டைச் சரியாக நிர்வகிக்க வேண்டும் என்கிறார் திருவாட்டி மேகன்.

“தொண்டூழியத்தின்மீது நிறுவனத் தலைவர் ஆர்வம் காட்டுவதை ஊழியர்கள் கண்கூடாகக் காணவேண்டும். அப்படிச் செய்வதால் தொண்டூழியம் செய்வதற்கான கலாசாரம் நிறுவனத்தில் உருவாகும்,” என்று அவர் கூறினார்.

நிறுவனத்தில் கலாசார மாற்றத்தை ஏற்படுத்துவது எளிதன்று எனத் திருவாட்டி மேகன் குறிப்பிட்டார். சில நேரங்களில் இத்தகை மாற்றங்களை உண்டாக்குவதற்கு பல ஆண்டுகள் எடுக்கலாம் என்றும் அவர் சுட்டினார்.

“இருந்தபோதும், நீடித்த தாக்கத்தை உண்டாக்க முயற்சிகள் தொடரவேண்டும். சிறிய மாற்றங்களை வெற்றிகரமாகச் செய்வதிலிருந்து ஒட்டுமொத்த உருமாற்றத்தைத் தொடங்கலாம்,” என்று அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்