உயிர்களைக் காத்து உணர்வுகளை வளர்ப்பவர்

2 mins read
8c67c2eb-2e33-4366-9352-03d4bb3f8e21
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த கேப்டன் கங்காதேவி, 37. - படம்: சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை

ஈசூனில் உள்ள ஓர் அடுக்குமாடி வீட்டில் தீச்சம்பவம் நேர்ந்தபோது தாயாரும் மகளும் தனித்தனி அறைகளில் அலறும் சத்தம், இன்றும் இந்தத் தீயணைப்பு அதிகாரியின் காதுகளில் ஒலிக்கிறது.

இந்தச் சம்பவம், தம் 17 ஆண்டு பணிக்காலத்தில் மறக்க முடியாத ஒன்று என்று கூறுகிறார் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த கேப்டன் கங்காதேவி, 37.

“மகளைக் காப்பாற்றும்படி அந்தத் தாயார் ஓலமிட்டதை நான் கேட்டேன். அவரை மீட்க சில அதிகாரிகள் சென்றனர். நான் வேறு சிலருடன் மகளைக் காப்பாற்றச் சென்றேன்,” என்று திருவாட்டி கங்காதேவி கூறினார்.

“தொட்டி ஒன்றைப் பிடித்துக்கொண்டு அந்தச் சிறுமி தேம்பி தேம்பி அழுததை கேப்டன் கங்காதேவி நினைவுகூர்ந்தார். பதற்றத்தில் இருந்த அந்தச் சிறுமி முதலில் என்னிடம் வரத் தயங்கினார்.

“ஒருவழியாக அவளை அமைதிப்படுத்தி, பாதுகாப்பாக வெளியேற்றினேன். தன் தாயாரைக் கண்டதும் அவரை ஆரத் தழுவிய காட்சி என் நினைவிலிருந்து என்றுமே நீங்காது,” என்றார் திருவாட்டி கங்காதேவி.

இப்படி பல நெகிழ்வான அனுபவங்களின் மூலம் தம் வேலையின் மேன்மையைப் பிறர் அறிவதாக இவர் கூறினார்.

சிறுவயதில் துறுதுறுவென விளையாடிய தன்னை படிக்கும்படி தன் பெற்றோர் வற்புறுத்தியதை நினைவுகூர்ந்த அவர், “இருந்தபோதும், நான் விளையாடுவதை அவர்கள் நிறுத்தச் சொல்லவில்லை,” என்றார்.

தொடக்கநிலை ஆறாம் வகுப்பில் இவர் 18 வயதுக்கும் குறைவான பெண்களுக்கான காற்பந்துக் குழுவில் சேர்ந்தார். வார நாள்களில் படிப்பிலும் விளையாட்டிலும் கவனம் செலுத்தி வந்த இவருக்கு நேர விரயம் என்ற பேச்சுக்கே இடமில்லை. வார இறுதி நாள்களில் குடும்பத்தினருடன் சமூகச் சேவையில் ஈடுபடுகிறார்.

விளையாட்டு, நல நிர்வாகப் பாடத்தில் பட்டயம் பெற்ற திருவாட்டி கங்கா, 2006ஆம் ஆண்டில் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையில் முழுநேரமாகப் பணியாற்றினார். நாள் முழுவதும் அலுவலகத்திற்குள் அமர்ந்து செய்யும் வேலைகளைத் தவிர்க்க தம் தாயார் அறிவுறுத்தியதைப் பின்பற்றியது இவருக்குப் பலனளித்தது.

ஒரே பயிற்சி வகுப்பை மேற்கொண்டபோது தம் வருங்கால கணவரை வேலையிடத்திலேயே சந்தித்த திருவாட்டி கங்காதேவி, 2009ல் அவரைத் திருமணம் செய்துகொண்டார்.

அவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஒரு மகளுக்கு 13 வயது, மற்றொருவருக்கு 11 வயது.

“குடும்பத்தைப் பார்த்துக்கொண்டே நான் இந்த வேலையைச் செய்வது குறித்து அவர்கள் பெருமைப்படுகின்றனர்,” என்று மகிழ்ச்சியுடன் கூறினார் திருவாட்டி கங்காதேவி.

குறிப்புச் சொற்கள்