தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரர்கள் அதிகம் விரும்பும் உணவு வகைகள்

2 mins read
7d4b0d4c-bb67-4e98-a3fd-2230f4a82503
ஐஸ்கிரீம், இளநீர் பானங்கள், ஃபிரைட் ரைஸ் உள்ளிட்ட உணவு வகைகள் அதிகம் விரும்பப்படுகின்றன. - படம்: பிக்சாபே

சிங்கப்பூரர்கள் காலை, மதிய உணவை விட இரவு உணவுக்கு அதிகம் செலவிடுவதாக கிராப் நிறுவனம் நடத்திய அண்மைய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பெரும்பாலானோர் மதிய உணவையே அதிகம் வரவழைக்க விரும்பினாலும், இரவு உணவுக்காக அவர்கள் செலவிடுவதுதான் அதிகம். அதிலும் குறிப்பாக பர்கர், டிம்-சம் எனும் சீன உணவு ஆகியவை பிரபல தேர்வாக உள்ளதாக அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இவற்றுடன் பொறித்த சிக்கன், மாலா ஹாட் பாட், மெக்சிகன் உணவான புரிட்டோ ஆகியவை அதிகம் விரும்பப்படுவதாகத் தெரிய வருகிறது.

உணவுடன் சேர்த்து வாடிக்கையாளர்கள் கார்பனேற்றப்பட்ட பானங்களையும் வாங்குகின்றனர். அடுத்தபடியாக சாக்லேட், கேரமல் சுவையுடைய பானங்களும் விருப்பமானதாக உள்ளன.

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் வீட்டுக்கு உணவை அனுப்பிவைக்கும் சேவை அதிகரித்திருந்த நிலையில், தற்போது அந்தப் போக்கு குறைந்துள்ளது. செயலியில் உணவைத் தேர்வு செய்து கட்டணம் செலுத்திவிட்டு, உணவகத்துக்கு நேரடியாகச் சென்று அதைப் பெற்றுக்கொள்வதும் அங்கு அமர்ந்து உணவருந்துவதும் அதிகரித்துள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது.

பொதுவாக, திடீரெனக் குறிப்பிட்ட உணவைச் சுவைக்க வேண்டுமென்கிற ஆசை ஏற்பட்டாலோ வேலை பரபரப்புக்கு இடையில் உணவருந்தவோ அலுவலகத்தில் அனைவருடன் இணைந்து உணவருந்தவோ உணவை அனுப்பிவைக்கக் கோரும் போக்கு நிலவுகிறது.

ஆனால் விழாக்காலங்களின்போதும் குடும்பத்தினருடன் உணவருந்தவும் விரும்புவோர், உணவகங்களில் அமர்ந்து சாப்பிடவே விரும்புகின்றனர்.

மேலும், பர்கர் உணவு, சிங்கப்பூரர்களின் விருப்ப உணவுப் பட்டியலில் ஈராண்டுகளாக முதலிடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது. பானங்களைப் பொறுத்தவரை ‘பபுள் டீ’, மூலிகை தேநீர் அதிகம் தேடப்பட்டதாகவும் ஆய்வு கூறுகிறது.

குறிப்புச் சொற்கள்