வணிக வேட்டையைக் குறிவைக்கும் இளம் தொழில்முனைவர்கள்

2 mins read
ccf51741-951e-41dc-b065-9ecbea71aaf5
வணிக வேட்டை 2024 செயற்குழு உறுப்பினர்கள் - முன்வரிசையில் இடமிருந்து: ஹெலன் (செயல்திட்டத் தலைவர்), மூலா வெங்கடேஷ் அஷ்வினி (செயற்குழு உறுப்பினர்), கீர்த்தனா (செயல்திட்டத் தலைவர்), பின்வரிசையில் இடமிருந்து: செந்தில் ஆண்டியப்பன் (தமிழர் பேரவை இளையர் பிரிவு துணைத் தலைவர்), சுப்பிரமணியன் அழகப்பன் (செயல்திட்டத் தலைவர்). - படம்: தமிழர் பேரவை இளையர் பிரிவு

வேட்டையில் குறி எவ்வளவு முக்கியமோ, அந்த அளவிற்கு வணிகத்தில் இலக்கு முக்கியம்.

சரியான குறிவைத்து, வணிக உலகில் வெற்றிநடைபோட இளம் தொழில்முனைவர்களுக்குத் தூண்டுகோலாக அமைகிறது ‘வணிக வேட்டை 2024’.

இளையர்களால் இளையர்களுக்காக நடத்தப்படும் இப்போட்டி, கொவிட்-19 பரவலால் ஏற்பட்ட இடைவெளிக்குப் பிறகு இவ்வாண்டு மீண்டும் திரும்புகிறது.

தமிழர் பேரவை இளையர் பிரிவு, நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கிய மன்றம் (என்டியூ டிஎல்எஸ்) இணைந்து இளம் தொழில்முனைவர்களை ஊக்குவிக்க இப்போட்டிகளை நடத்துகின்றன.

இப்போட்டிக்கு 17 வயது முதல் 27 வயது வரையிலான இளையர்கள், தனி நபர்களாகவோ அதிகபட்சம் 5 பேர் கொண்ட குழுக்களாகவோ ஜனவரி 31 வரை http://tinyurl.com/Vanigavettai2024 இணையத்தளத்தில் பதிவுசெய்யலாம்.

ஜனவரி 28ஆம் தேதி தேநீர் கலந்துரையாடலுடன் தொடங்கும் வணிக வேட்டைப் பயணம், பிப்ரவரி முழுவதும் வார இறுதிப் பயிலரங்குகளுடன், மார்ச் 2ஆம் தேதி ஒரு கண்காட்சியுடன் நிறைவடையும்.

அக்கண்காட்சியில் இடம்பெறும் தொழில்முனைவுகளை நடுவர்கள் பார்வையிட்டு, வெற்றியாளர்களைத் தீர்மானிப்பார்கள்.

முதல் மூன்று நிலைகளில் வருவோருக்கு $2,000, $1,500, $1,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

அக்டோபர் 2023ல் சுமார் 25 இளையர்கள் அடங்கிய ஏற்பாட்டுக் குழுவினர் ஒன்றுகூடி, வணிக வேட்டை 2024க்குத் திட்டமிடத் தொடங்கினர்.

பதிவுகளை வரவேற்க ஏற்பாட்டுக் குழுவினர் சமூக ஊடகங்களைப் புத்தாக்கமாகக் கையாண்டு பல காணொளிகளைப் பதிவேற்றம் செய்துள்ளார்கள். அவற்றை @trcyouthwing மற்றும் @ntutls ‘இன்ஸ்டகிராம்’ தளங்களில் காணலாம்.

“பயிலரங்குகளின்மூலம் இளையர்கள் தம் வர்த்தகத் திறன்களை மேம்படுத்துவார்கள். மேலும், இளம் தொழில்முனைவர்களிடத்தில் தன்னிச்சையாக செயல்படும் துணிச்சலை வளர்க்கிறோம்,” என்றார் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கிய மன்றத் தலைவர் ம.சந்துருவேல், 23.

“வணிக வேட்டையில் பங்குபெறுவோர், மற்ற தொழில்முனைவர்களுடன் வலுவான உறவை ஏற்படுத்தி, தங்கள் இலக்குகளை அடைய புதிய வாய்ப்புகளை உருவாக்குவர்,” என்றார் தமிழர் பேரவை இளையர் பிரிவின் வணிக வேட்டைக் குழு உறுப்பினர் ஹேமேஷ் குமார், 21.

பங்குபெறுவோருக்கு மட்டுமல்ல, ஏற்பாடு செய்யும் இளையர்களுக்கும் இது சுவையான அனுபவமாக இருந்துள்ளது.

“இரு இளையர்க் குழுக்கள் இணைந்து ஏற்பாடு செய்வதால், எங்கள் பலதரப்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து, புத்தாக்க சிந்தனைகளை வழங்க வாய்ப்பளித்துள்ளது,” என்றார் தமிழர் பேரவை இளையர் பிரிவின் தலைவர் ஷெரீன் பேகம், 24.

“வணிக வேட்டை 2019ல் முதன்முறையாக நடந்தது. இவ்வாண்டு இரண்டாம் முறையாக நடக்கிறது. அதனால், பலவற்றையும் புதிதாகக் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. சவால்மிக்கது, ஆனால் மனநிறைவளிக்கிறது,” என்றார் ‘என்டியூ டிஎல்எஸ்’ வணிக வேட்டைக் குழு உறுப்பினர் மூலா வெங்கடேஷ் அஷ்வினி, 21.

தம் இலக்கை அடையும்வரை இந்த இளையர்கள் தம் அயரா உழைப்பைத் தொடர்கின்றனர். அவர்களுக்குத் துணைபுரிய பல தொழில்முனைவர்கள் நடுவர்களாகவும் ஆலோசகர்களாகவும் விரைந்துள்ளனர்.

‘வணிக வேட்டை 2024’ புதிய தொழில்முனைவுகளின் பிறப்பிடமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

குறிப்புச் சொற்கள்