சிங்கப்பூரில் இரண்டாவது முறையாக ‘ஆர்ட் எஸ்ஜி’ கலைக் கண்காட்சி

2 mins read
4115af74-98a1-497a-be1e-bcaeddee32f1
ஆர்ட் எஸ்ஜி கலைக் கண்காட்சி. - படம்: அனுஷா செல்வமணி
multi-img1 of 8

உலகின் முதன்மையான அனைத்துலகக் கலைக் கண்காட்சியான ‘ஆர்ட் எஸ்ஜி’ இரண்டாவது முறையாக சிங்கப்பூரில் இடம்பெறவுள்ளது.

33 நாடுகளைச் சேர்ந்த 114 கலைக்கூடங்கள், இம்முறை சிங்கப்பூரின் மரினா பே சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு மையத்தில் இடம்பெற இருக்கின்றன.

முதன்முறையாக பல நாடுகளைச் சேர்ந்த 39 கலைக்கூடங்கள் கண்காட்சியில் சேர்க்கப்பட்டுள்ளன. அனைத்துலகக் கலை அம்சங்களை தென்கிழக்கு ஆசியாவுக்குக் கொண்டுவரும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில் தொழில்நுட்பக் கூறுகளும் அடங்கியுள்ளன.

செயற்கை நுண்ணறிவு, மெய்நிகர், மிகைமெய்ப் படைப்பாக்கத்திறன் குறியீடு போன்றவற்றை கலைகளில் எதிர்பார்க்கலாம். கலைக் கண்காட்சியில் மூன்று முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

‘பலேட்ஃபோர்ம்’ அம்சத்தில் கலை நிறுவல்களும் பெரிய அளவிலான சிற்பங்களும் உள்ளன. ‘ஃபிலிம்’ அம்சத்தில், கலை, அறிவியல் அரும்பொருளகம் ஏற்பாடு செய்துள்ள இலவசத் திரையிடலைப் பார்வையாளர்கள் கண்டு மகிழலாம்.

இறுதியாக, ‘பெர்ஸ்பெக்ட்டிவ்ஸ்’ அம்சத்தில், பார்வையாளர்களின் சிந்தனையைத் தூண்டும் அளவிலான கலந்துரையாடல் நிகழ்வுகள் இடம்பெறும்.

சிங்கப்பூர்க் கலை வார நிகழ்ச்சிகளை முன்னிட்டு, சிங்கப்பூரின் காட்சிக் கலை நிறுவனங்கள், தனியார் அறநிறுவனங்கள் மற்றும் கலைக்கூடங்கள் ஒன்றிணைந்து பார்வையாளர்களைக் கவரும் வண்ணத்தில் கலைகளைக் காட்சிப்படுத்தவுள்ளன. 

‘தி ஆர்ட் அசெம்பிளி’ ஏற்பாடு செய்துள்ள இக்கண்காட்சி ஜனவரி 19ஆம் தேதியிலிருந்து 21ஆம் தேதிவரை இடம்பெறவுள்ளது. கண்காட்சி குறித்த கூடுதல் தகவல்களுக்கு https://artsg.com/about/the-fair/ என்ற இணையத்தளத்தை நாடலாம்.

இதனையொட்டி, கண்காட்சியின் இயக்குநர் ஷுயின் யாங் கூறுகையில், “பார்வையாளர்கள் சிங்கப்பூர் மற்றும் பல நாடுகளைச் சேர்ந்த புத்தாக்கக் கலை அம்சங்களை இந்தக் கண்காட்சியில் கண்டுகளிக்கலாம். அவர்களை ஈர்க்கும் மற்றொரு முயற்சியாக நாங்கள் கண்காட்சியில் பல திட்டங்களையும் சேர்த்துள்ளோம்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்