ஓடிடியில் காண அண்மைய சிறந்த தேர்வுகள்

2 mins read
bb86ec4d-60b0-45cf-a0f8-5d30ac22ebae
பல்வேறு ஓடிடி தளங்களிலும் தமிழ் மட்டுமின்றி பல மொழி குறுந்தொடர்கள் வெளியாகி இளையர்களை ஈர்த்து வருகின்றன. - படம்: லாவண்யா வீரராகவன்

திரையரங்கில் சென்று படம் பார்க்கும் ரசிகர்களைப் போலவே, விடுமுறை நாள்களிலும் வார இறுதிகளிலும் தரமான படங்கள், குறுந்தொடர்களைத் தேர்ந்தெடுத்து ஓடிடி தளங்களில் பார்க்கும் ஒரு ரசிகர் பட்டாளம் உருவாகியிருக்கிறது.

அவர்களை மகிழ்விக்க எல்லா மொழிகளிலும் தொடர்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. பிரபல நட்சத்திரங்கள், இயக்குநர்களும் கூட பிரத்யேகமாக ஓடிடி தளங்களுக்கான படங்களையும் குறுந்தொடர்களையும் படைக்கத் தொடங்கியுள்ளனர்.

சேரனின் ‘ஜர்னி’

தேசிய விருது பெற்ற பிரபல இயக்குநர் சேரனின் முதல் இணையத் தொடரான ‘ஜர்னி’, சோனி லைவ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ஒரு பெரிய நிறுவனத்தில் இருக்கும் ஒரே இடத்திற்காக விண்ணப்பிக்கும் ஐந்து தகுதியுடைய நபர்களையும் அவர்களின் வாழ்க்கையையும் மையமாகக் கொண்டு இத்தொடர் படைக்கப்பட்டுள்ளது.

ஒன்பது அத்தியாயங்கள் கொண்ட இத்தொடரில் சரத்குமார், பிரசன்னா, பிக் பாஸ் வெற்றியாளர் ஆரி அர்ஜுனன், கலையரசன், ஜெயபிரகாஷ், இளவரசு, வேல ராமமூர்த்தி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சமூக கருத்துகள், நவீன கதைக்களம், ஊக்கமளிக்கும் படைப்பை விரும்புபவர்களுக்கு இது நல்ல தேர்வு.

கூசே முனிசாமி வீரப்பன்

வீரப்பன் கதை குறித்து முன்னரே ஆவணப்பட பாணியில் ஒரு குறுந்தொடர் வெளிவந்திருந்த நிலையில், வீரப்பனின் நேரடி வீடியோ வாக்குமூலங்களை மையமாக வைத்து மற்றொரு தொடரான கூசே முனுசாமி வீரப்பன் வெளியாகியுள்ளது.

ஜி5 தளத்தில் வெளியாகியுள்ள இத்தொடர், வீரப்பனின் இளமைக்கால வாழ்க்கை, அவரின் தனிப்பட்ட குணங்கள், பழங்குடி மக்களின் வேட்டை, வாழ்வியல் எனப் பலவற்றைக் காட்சிப்படுத்தியுள்ளது.

இயக்குநர் சரத் ஜோதி இயக்கத்தில் ஆறு அத்தியாயங்களுடன் வெளிவந்துள்ள இத்தொடர், ஒரு சுவாரசியமான திரை அனுபவத்தை உறுதி செய்கின்றது. ஆவணப்பட விரும்பிகளுக்கான சிறந்த தேர்வு இது.

பேரில்லூர் பிரீமியர் லீக்

மலையாளத்தில் எடுக்கப்பட்டு தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகியிருக்கும் பேரில்லூர் பிரீமியர் லீக் யதார்த்தமான சுவாரசியமான கதைக்களமாக அமைந்துள்ளது.

பிரவீன் சந்திரன் இயக்கியிருக்கும் இத்தொடர், ஏழு அத்தியாயங்களுடன் வெளிவந்துள்ளது. படித்து முனைவர் பட்டம் பெற விழையும் கதாநாயகி, வேறு வழியின்றி அரசியலுக்குத் தள்ளப்பட, அதிலிருந்து வெளிவர எத்தனிக்கும் அவரது பயணத்தை சுவாரசியமாகச் சொல்லும் இத்தொடர் கலகலப்பான கிராமத்து பாணி கதைகளை விரும்புபவர்களுக்கு சிறந்த தேர்வு.

இது தவிர ‘அன்னபூரணி’, ‘பார்க்கிங்’, 6 கொலை வழக்குகள் சுமத்தப்பட்ட ஜோலி ஜோசப் எனும் பெண்ணின் கதையைப் பேசும் ‘கறி அண்டு சையனைடு’ ஆகியவை ரசிகர்கள் மத்தியில் பெயர் பெற்றுள்ளன.

குறிப்புச் சொற்கள்