சிங்கப்பூரில் தியாகராஜர் ஆராதனை

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர், தென்னிந்திய இசைக்கு ஆற்றியுள்ள மாபெரும் பங்கைப் போற்றும் வகையில் 177வது ஆராதனை, திருவையாற்றில் இந்தியாவின் புகழ்பெற்ற இசைக் கலைஞர்களின் பங்கேற்புடன் ஜனவரி 30ஆம் தேதி நடைபெறுகிறது.

அதை முன்னிட்டு, உலகத்தின் பல நாடுகளிலும் சிங்கப்பூர் உட்பட கர்நாடக இசைக் கலைஞர்கள் ஆராதனைகளை நடத்திவருகின்றனர்.

அவ்வகையில் சிங்கப்பூர் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலின் பிஜிபி மண்டபத்தில் சனிக்கிழமை ஜனவரி 20ஆம் தேதி காலை 10 முதல் 11.30 மணி வரை, பிரம்மசபா அமைப்பின் ஏற்பாட்டில், சுமார் 110 இசை ஆர்வலர்களின் பங்கேற்புடன் தியாகராஜர் ஆராதனை நடைபெற்றது.

அதில் தியாகராஜரின் பஞ்சரத்தினக் கிருதிகளை ஏறக்குறைய 45 கலைஞர்கள் இசைத்தனர்.

ஆராதனையைச் சிறிய அளவில் வீட்டிலேயே தொடங்கி, 2019 முதல் பொதுமக்களையும் வரவேற்று ஆண்டுதோறும் நடத்திவருவதாகக் கூறினார் பிரம்மசபா செயற்குழு உறுப்பினரும் மிருதங்க ஆசிரியருமான முத்து சுப்ரமணியன்.

“என் தந்தையார் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக தியாகராஜருக்கு சமர்ப்பணமாக ஆராதனைகளை இந்தியாவில் நடத்தினார். அவரைத் தொடர்ந்து அவ்வழக்கத்தைச் சிங்கப்பூரிலும் கடைப்பிடித்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லவேண்டும் என்பதற்காக இங்கும் அறிமுகப்படுத்தினோம்,” என்றார் அவர்.

13 முதல் 60 வயது வரை, மூன்று தலைமுறை இசைக் கலைஞர்களும் ஒன்றிணைந்து பங்குபெற்றதில் அவர் பெருமகிழ்ச்சியடைந்தார்.

முந்திய ஆண்டுகளில் ஆராதனையில் கலந்துகொண்டு பாடிய அவருடைய மகள் ஸ்ரீரஞ்சனி முத்து சுப்பிரமணியன் இவ்வாண்டு வயலின் வாசித்தார்.

குடும்பமாக தம் மாணவர்களுடன் பங்குபெற்றதில் ஆராதனையில் பங்குபெற்ற ‘சேதஸ்’ (CHETHAS) கலைக்கூட நிறுவனர்கள் மற்றும் இசை ஆசிரியர்களான வைஷ்ணவி - ஆனந்த் இணையர் பெருமகிழ்ச்சி தெரிவித்தனர்.

“நானும் என் மகளும் பாடினோம். என் கணவர் வயலின் வாசித்தார். என் மகன் மிருதங்கம் வாசித்தார். எங்கள் ஆறு மாணவர்களும் பங்குபெற்றனர். அனைவரும் ஒன்றாக இசைத்தது ஒரு தெய்வீக உணர்வை ஏற்படுத்தியது,” என்றார் வைஷ்ணவி.

இதைத் தொடர்ந்து ‘சேதஸ்’ கலைக்கூடமும் தம் மாணவர்களுக்கு தியாகராஜர் ஆராதனையை ஏற்பாடு செய்யவிருப்பதாக அவர் கூறினார்.

அவருடன் ஆராதனையில் பாடினார் சிங்கப்பூர்க் கலைப்பள்ளி வயலின் ஆசிரியை ஸ்ரீவித்யா ஸ்ரீராம். அவர் வீட்டிலும் வாய்ப்பாட்டு, வயலின் சொல்லிக் கொடுத்தபோதிலும், இவ்விழாவுக்காக தன் வகுப்புகளை ஒத்திவைத்தார். ஒவ்வோர் ஆண்டும் அவர் தவறாமல் இந்நிகழ்வில் கலந்துகொள்கிறார்.

“இது சிறப்பாக ஏற்பாடு செய்யப்படுவதால் மீண்டும் மீண்டும் வரவேண்டும் என்ற உந்துதல் எனக்கு ஏற்படுகிறது. திருவையாறு சென்று பாடிய அரிய அனுபவத்தையும் நினைவுகூர எனக்கு வாய்ப்பளித்தது,” என்றார் ஸ்ரீவித்யா. அவரது ஆறு மாணவர்களும் ஆராதனையில் பங்குபெற்றனர்.

தியாகராஜர் ஆராதனையில் பாடிய ஸ்ரீவித்யா ஸ்ரீராம் (முன்வரிசையில் இடமிருந்து இரண்டாவது), வைஷ்ணவி ஆனந்த் (முன்வரிசையில் இடமிருந்து மூன்றாவது). படம்: சிவா

“அனைவரும் சேர்ந்து பயிற்சி செய்திருக்காவிட்டாலும், தியாகராஜ கிருதிகள் தலைமுறை தலைமுறையாக மாறாமல் சொல்லிக் கொடுக்கப்பட்டு வருவதால் வயதுப் பிரிவுகளைத் தாண்டியும் கலைஞர்களால் ஒன்றாகப் பாட முடிந்தது,” என்றார் பிரம்மசபா செயலாளர் ராம சுப்ரமணியன்.

சிங்கப்பூரில் ஏறத்தாழ 20 ஆண்டுகளாக இயங்கிவரும் பிரம்மசபா, சொற்பொழிவுகளையும் பஜனைகளையும் நடத்திவருவதாக அவர் கூறினார்.

ஆராதனைக்கு முன்பு ஒரு மணி நேர பஜனையும் இடம்பெற்றது. ஆராதனையின் முக்கிய தருணங்களைக் காண http://tinyurl.com/thyagarajaaradhana2024 இணையத்தளத்தை நாடலாம்.

தியாகராஜர் சமாதி அடைந்த திருவையாற்றில் பிரம்மாண்டமாக, இந்தியாவின் முன்னணி கர்நாடக இசைக் கலைஞர்களின் பங்கேற்புடன் ஆண்டுதோறும் நடைபெறும் தியாகராஜர் ஆராதனை. படம்: இணையம்
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!