ஆசிய பசிபிக் பகுதியைச் சேர்ந்த இந்தத் தலைமுறை இளையர்களில் ஏறத்தாழ 64 விழுக்காட்டினர் இவ்வாண்டில் சுற்றுப்பயணத்திற்கு அதிகம் செலவிடத் தயாராக இருப்பதாக ‘குளூக்’ எனும் சுற்றுலா முன்பதிவு நிறுவனம் நடத்திய அண்மைய ஆய்வு தெரிவிக்கிறது.
குறிப்பாக, இளையர்களில் பாதிப்பேர் தங்கள் வருமானத்தில் பாதியைக்கூட விடுமுறையைக் கழிக்க செலவிடத் தயாராக இருப்பதாக அந்த ஆய்வு கூறியுள்ளது.
இளையர்கள், அனுபவங்களை விலைமதிப்பற்றதாகக் கருதுகின்றனர் எனச் சொல்லும் இந்த ஆய்வு, பத்தில் ஒன்பது இளையர்கள், தங்கள் நண்பர்கள், உறவினர்கள், மனத்திற்கு நெருக்கமானவர்களுடன் விடுமுறைப் பயணங்களை மேற்கொள்ள விரும்புவதாகவும் கூறுகிறது.
ஏறத்தாழ 80 விழுக்காட்டினர் சமூக ஊடகங்களில் பகிரப்படும் பரிந்துரைகள், விமர்சனங்களை அடிப்படையாகக்கொண்டு, சுற்றுலாப் பயண முடிவுகளை மேற்கொள்வதாகவும், ஐந்தில் மூன்று பேர் சாகசங்கள் அடங்கிய பயணங்களை மேற்கொள்ள ஆசைப்படுவதாகவும் ஆய்வில் பங்கேற்ற இளையர்கள் தெரிவித்துள்ளனர்.
பணவீக்கமும், விலைவாசி உயர்வும் ஒருபுறமிருந்தாலும், புதிய உறவு இணைப்புகளையும், நினைவுகளையும் உருவாக்கும் பயணங்களுக்காக அவர்கள் செலவிடத் தயங்குவதில்லை என்கிறது ஆய்வு முடிவு.
குறிப்பாக, பெருந்தொற்று ஏற்படுத்திய தனிமையும் மின்னிலக்கமயமும், பொழுதைக் கூடிக் கழிக்க வேண்டும் என இளையர்களை ஏங்க வைத்துள்ளதாகத் தெரிகிறது.
சுற்றுப்பயணம் மேற்கொள்பவர்களில் 69 விழுக்காட்டினர், விமானம் ஏறும் முன்பே அங்குள்ள முக்கிய இடங்களுக்கும் நிகழ்வுகளுக்கும் முன்பதிவு செய்வதாகவும் தெரிவிக்கிறது இந்த ஆய்வு.
இயற்கை சார்ந்த அல்லது வெளிப்புற அனுபவங்களை 59 விழுக்காட்டினர் விரும்புவதாகவும், கேளிக்கைப் பூங்காக்கள், அரும்பொருளகங்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் இளையர்களின் அடுத்தடுத்த விருப்பத் தெரிவாகவும் இருக்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
மில்லேனியல் இளையர்கள் (1981 முதல் 1996க்கு இடையில் பிறந்தவர்கள்) தங்கள் இணையுடனும், ஜென் ஜீ தலைமுறை இளையர்கள் (1997 முதல் 2012க்குள் பிறந்தவர்கள்) தங்கள் குடும்பத்தினர், நண்பர்களுடன் சுற்றுலா செல்ல விரும்புவதாகவும் அந்த ஆய்வு முடிவு சுட்டிக்காட்டுகிறது.
சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங், தைவான், பிலிப்பீன்ஸ், தாய்லாந்து, வியட்னாம், தென்கொரியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா, இந்தோனீசியா ஆகிய நாடுகளை சேர்ந்த 2,600 பேர் பங்கேற்ற இந்த ஆய்வின் மூலம், 65 விழுக்காட்டினர் நீண்ட பயணங்களைவிட, அடிக்கடி மேற்கொள்ளும் குறுகிய பயணங்களை அதிகம் விரும்புவ தாகத் தெரியவந்துள்ளது.
குறிப்பாக, சிங்கப்பூரர்கள் பயணம் செய்ய விரும்பும் முதல் மூன்று இடங்கள் ஜப்பான், மலேசியா, தென்கொரியா எனவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
இன்ஸ்டகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிரப்படும் இடுகைகளில் ஈர்க்கப்பட்டு பயணங்கள் மேற்கொள்ளும் பலரும், தங்கள் பயணத்தையும் சமூக ஊடகங்களில் பகிர விரும்புகின்றனர். தங்கள் அனுபவத்தைப் பிறருடன் பகிர ஒரு பெருவாய்ப்பாக அதனை இளையர்கள் கருதுகின்றனர்.
சாகசங்கள், கலாசார அனுபவங்களைத் தாண்டி, சுற்றுப்பயணத் தெரிவில் தட்பவெப்பமும் பெரும்பங்கு வகிப்பதாகத் தெரிகிறது. குறிப்பாக, சிங்கப்பூர், இந்தியா, தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் குளிர்காலத்தையும், மலேசிய, இந்தோனீசியப் பயணிகள் வசந்த காலத்தையும், ஆஸ்திரேலிய, பிலிப்பீன்ஸ் பகுதியைச் சேர்ந்தவர்கள் கோடை வெப்பத்தையும் விரும்புகின்றனர்.
அத்தகைய தட்பவெட்பமுள்ள நாடுகளையும், நேரத்தையும் பொறுத்து, அவர்கள் தங்கள் விடுமுறையை அமைத்துக்கொள்வதாகவும் இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.