தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நவீன சிறுகதைகளைப் புரிந்துகொள்வது குறித்து மலேசிய எழுத்தாளர் நவீன்

3 mins read
8a1aaba3-5ef3-4763-97fd-67f9e3d06bbe
மலேசிய எழுத்தாளர் ம.நவீன் (நடுவில்) சிறுகதைகளைப் புரிந்துகொள்ளுதல் பற்றிய சுவாரசியமான உரையாடலை வழிநடத்தினார். படத்தில் அவருடன் சிறுகதை ஆர்வலர்கள் அஷ்ரப் (இடது), சாய்பாலாஜி. - படம்: ரவி சிங்காரம்

சமகால தமிழ்ப் புனைவுலகில் பரவலாக கவனம் பெற்ற மலேசிய எழுத்தாளர் ம.நவீன், நவீன சிறுகதைகளைப் புரிந்துகொள்வதற்கான உத்திகளை, சனிக்கிழமை ஜனவரி 27ஆம் தேதி காலை 10 முதல் 11.30 மணி வரை தேசிய நூலக வாரிய கட்டடத்தில் நடைபெற்ற உரையாடலில் பகிர்ந்துகொண்டார்.

அவரது கருத்துக்களைக் கேட்க வயதுப் பிரிவுகளையும் தாண்டி வாசகர்களும் எழுத்தாளர்களும் கலந்துகொண்டனர்.

நவீன சிறுகதைகள் என்றால் என்ன என முதலில் வரையறுத்தார் ம. நவீன்.

மன்னர்கள், செல்வந்தர்கள் பற்றி பேசிக்கொண்டிருந்த இலக்கியம் அச்சு ஊடகங்களாலும் சமத்தர கல்வியாலும் எப்போது பல்வேறு தரப்பட்ட மக்களிடமிருந்து வெளிபட்டு பல்வேறு விதமான வாழ்க்கைகளையும் மனிதர்களையும் பேசத்தொடங்கியதோ அப்போதே தமிழில் நவீன இலக்கியம் தோற்றம் கண்டுவிட்டது என்றார்.

முன்னதாக நவீன சிறுகதைகளை வாசிக்கும் ஒருவருக்கு இருக்கும் தடையை அவர் விளக்கினார்.

“ஒரு சிறுகதையை வாசிக்கும்போது நாம் ஏற்கெனவே கொண்டுள்ள நம்பிக்கைகளையும் விழுமியங்களையும் கொண்டு அக்கதையை அளவிடக்கூடாது. தான் நம்பும் ஒழுக்கம் இதில் இல்லை.

“எனவே இதில் உள்ள கதாமாந்தர்கள் ஒழுக்கமானவர்களாக மாற வேண்டும் என ஒரு வாசகர் வருந்துவாரேயானால் அவருக்கு ஒரு கதை திறக்கவே இல்லை எனப்பொருள். அவரவருக்கு சில நியாயங்களும் தனிப்பட்ட வாழ்க்கைமுறைகளும் இருக்கும். அதை மனதில் கொண்டுதான் சிறுகதையை அணுகவேண்டும்,” என்றார்.

தொடர்ந்து பல்வேறு சிறுகதைகள் வழி உதாரணம் கூறிய ம.நவீன் எழுத்தாளர் சு.வேணுகோபாலின் ‘உள்ளிருந்து உடற்றும் பசி’ சிறுகதையை விவாதப்பொருளாக முன்வைத்தார். தியாகம் எனப்படுவது தியாகம் மட்டுமா? எனும் கேள்வியை ஒட்டி இக்கதை விவாதிக்கப்பட்டது.

“ஒரு கடலின் உக்கிரமான சிறுதுளி மூலம் முழுக் கடலையும் புரிந்துகொள்ள வைப்பது நவீன சிறுகதை,” என்று கூறிய அவர், இரு நாடுகளுக்கிடையே உள்ள கலவரத்தின் கொடூரத்துடன் நேரடியாகத் தொடர்பில்லாத ஒரு குழந்தையின் மரணத்தைச் சொல்லும் குல்சாரின் ராவி நதி எனும் சிறுகதை மூலமும் மாண்டோவின் ‘திற’ சிறுகதை மூலமும் அதனைப் புரிய வைத்தார்.

ம.நவீன் தன் உரையில் பிரபஞ்சனின் ‘அப்பாவின் வேஷ்டி’, கி.ராஜநாராயணனின் ‘கோமதி’, ‘கன்னிமை’, சுந்தர ராமசாமியின் ‘விகாசம்’ போன்ற சிறுகதைகளையும் அலசி ஆராய்ந்தார். இந்தக் கதைகளைக் கூடுதலாக அறியும் முறை குறித்து நவீன் தன் விளக்கத்தின் மூலம் விரிவாக விளக்கினார்.

இரண்டாவது ஆண்டு தேசிய சேவையாளராகப் பணியாற்றும் சாய்பாலாஜி, 21, சமீபத்தில்தான் சிறுகதைகள் படிக்கத் தொடங்கியுள்ளதால் இக்கலந்துரையாடல் பெருமளவில் தனக்கு உதவியதாகக் கூறினார்.

“எழுத்தாளர்களின் பலதரப்பட்ட எண்ணங்களைத் தெரிந்துகொள்ள வந்தேன். திறந்த மனப்பான்மையுடன் சிறுகதையை அணுகக் கற்றுக்கொண்டேன்,” என்றார் சாய்பாலாஜி.

“மாணவர்கள் இதைப் பற்றிக் கற்றுக்கொண்டால் சிறப்பாக இருக்கும். வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்த, அறிவு விசாலமடைய, இதுபோன்ற கதை ஆய்வு உதவும்,” என்றார் கலந்துகொண்ட தமிழாசிரியை மீனாட்சி சபாபதி.

“ம.நவீன் உரையாடலை மிக அழகாக வழிநடத்தினார். கதையைப் பற்றிச் சொல்லி, அவர் அனைவரிடமும் கருத்து கேட்டபோது, நாங்கள் கூறியதையும் தாண்டி ஓர் ஆழ்ந்த பார்வையில் அக்கதையைக் கண்ணோட்டமிடத் தூண்டினார்.

“இனி நான் படிக்கும் கதைகளை அவ்வாறு பார்ப்பேன். கதையின் உச்சத்தைப் புரிந்துகொள்ளும் அளவிற்கு இது ஒரு வழிகாட்டுதலாக இருந்தது,” என்றார் தேசிய கல்விக் கழகத்தில் மாணவ தமிழாசிரியராகப் பயின்றுவரும் கவிதை, சிறுகதை ஆர்வலர் அஷ்ரப்.

எழுத்தாளர் நவீன் மற்ற எழுத்தாளர்களுடன் மாதாமாதம் இம்போன்ற அமர்வுகளை மலேசியாவில் நடத்திவருகிறார்.

ஞாயிறு ஜனவரி 28ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு தேசிய நூலக வாரிய கட்டடத்தின் முதல் அடித்தளத்தில் அவரது 17வது நூலும் 3வது நாவலுமான ‘தாரா’, மற்றும் சக மலேசிய எழுத்தாளர் அ.பாண்டியனின் ‘கரிப்புத் துளிகள்’ நாவல் - இரண்டும் குறித்து கலந்துரையாடல் நிகழவுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 28) மாலை 4.30 மணிக்கு தேசிய நூலக வாரியக் கட்டடத்தின் அடித்தளம் 1ல் நவீனின் 17வது நூலும் மூன்றாவது நாவலுமான ‘தாரா’ மற்றும் மலேசிய எழுத்தாளர் அ.பாண்டியனின் ‘கரிப்புத் துளிகள்’ நாவல் ஆகியவை குறித்துக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 28) மாலை 4.30 மணிக்கு தேசிய நூலக வாரியக் கட்டடத்தின் அடித்தளம் 1ல் நவீனின் 17வது நூலும் மூன்றாவது நாவலுமான ‘தாரா’ மற்றும் மலேசிய எழுத்தாளர் அ.பாண்டியனின் ‘கரிப்புத் துளிகள்’ நாவல் ஆகியவை குறித்துக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. - படம்: வாசகர் வட்டம், தேசிய நூலக வாரியம்
குறிப்புச் சொற்கள்