தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முதியோர், வசதிகுறைந்த குடும்பங்களுக்கு 8,000க்கும் மேற்பட்ட பராமரிப்புப் பைகள்

2 mins read
9565efae-a1d6-48f0-a232-147d8554c851
பராமரிப்புப் பை வழங்குதலை அதிகாரபூர்வமாகத் தொடங்கிவைக்கும் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி . - படம்: சமூக உண்டியல்
multi-img1 of 3

சீனப் புத்தாண்டை முன்னிட்டு சனிக்கிழமை ஜனவரி 27ஆம் தேதி 1,300க்கும் மேற்பட்ட தொண்டூழியர்கள் சிங்கப்பூர் முழுவதும், 21 தொகுதிகளில் வசிக்கும் முதியோருக்கும் உதவி தேவைப்படும் குடும்பங்களுக்கும் 8,000க்கும் மேற்பட்ட பராமரிப்புப் பைகளை வழங்கினர்.

ஆண்டுதோறும் நடைபெறும் ‘சமூக உண்டியல் ஃபூ டாய்’ (Fú Dài) எனும் இந்நிகழ்ச்சியில் சென்ற ஆண்டைவிடக் கூடுதலாக இரு தொகுதிகளுக்கு இவ்வாண்டு அடித்தள ஆலோசகர்களும் நிறுவனத் தொண்டூழியர்களும் பராமரிப்புப் பைகளை வழங்கினர்.

தெம்பனிஸ், குவீன்ஸ்டவுன், பொங்கோல், நீ சூன், ஜூரோங் வெஸ்ட் போன்ற தொகுதிகளுக்கு அவர்கள் சென்றனர்.

‘டிமென்ஷியா சிங்கப்பூர்’, ‘பர்டாபிஸ்’ கல்வி, நல நிலையம். ஃபெய் இயூ சமூக சேவைகள் போன்று சமூக உண்டியல் அமைப்பு ஆதரிக்கும் சமூக சேவை அமைப்புகளின் சேவையைப் பெறுபவர்களுக்கும் உதவி தேவைப்படுவோருக்கும் பைகள் வழங்கப்பட்டன.

வீட்டுச் செலவுகளைக் குறைக்கும் நோக்கிலும் சீனப் புத்தாண்டு மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளும் நோக்கிலும் வழங்கப்பட்ட அப்பைகளில் அரிசி, சமையல் எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருள்களும் ‘குக்கீஸ்’ போன்ற உணவுப்பொருள்களும் அடங்கியிருந்தன.

இம்மாபெரும் நிகழ்ச்சிக்கு, சமூக உண்டியலும் ‘ஹார்ட்வார்மர்ஸ்’ எனும் தொண்டூழியக் குழுவும், 40க்கும் மேற்பட்ட அமைப்புகளையும் தனிநபர்களையும் திரட்டி, நன்கொடை, பராமரிப்புப் பைத் தயாரிப்பு மற்றும் விநியோகப் பணிகளில் ஈடுபடுத்தின.

துணைப் பிரதமரும் பொருளியல் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான ஹெங் சுவீ கியட் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியை சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சரும் சுகாதார இரண்டாம் அமைச்சருமான மசகோஸ் ஸுல்கிஃப்லி வழிநடத்தினார்.

“பத்தாண்டுகளுக்கும் மேலாக ‘சமூக உண்டியல் ஃபூ டாய்’, ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டூழியர்கள் சமூகத்திற்கு அர்த்தமுள்ள வகையில் சேவையாற்றும் தளமாக அமைந்துள்ளது.”

“முன்னேறும் சிங்கப்பூர் திட்டத்தின்கீழ் இடம்பெறும் இம்முயற்சி, சமூகத்தில் ஒருவரையொருவர் அன்போடு கவனிக்க வழிவகுக்கிறது.” என்றார் சமூக உண்டியல் அமைப்பின் தலைவர் சியூ சூடாட்.

சிங்கப்பூர் மக்கள்தொகை மூப்படைந்துவருவதால் (2030க்குள் நான்கு சிங்கப்பூரர்களில் ஒருவர் 65 வயதுக்கும் மேற்பட்டவராக இருப்பார்) சமூக உண்டியல், உதவி தேவைப்படும் முதியோருக்கும் அவர்களைப் பார்த்துக் கொள்பவர்களுக்கும் 28 பராமரிப்புத் திட்டங்களை வழங்குகிறது. 45 குடும்பச் சேவை நிலையங்களில் உள்ள சேவைகள், திட்டங்களுக்கு நிதியாதரவும் கொடுக்கிறது.

குறிப்புச் சொற்கள்