தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இக்கால இளையர்களின் மனநலத்திற்கு உதவும் அக்கால உத்திகள்

3 mins read
b1c14dcf-68de-4da0-9b42-de2bc1691ec4
ஜாலான் புசார் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் வான் ரிஸால், மனநல ஆலோசகர்கள் நஸ்ரின் ஷா, தேவன் ஆகியோருடன் ‘ஐஎம்யூத்’ இளையர் அணி, ‘எம்கியூப் ஜாலான் புசார்’ அமைப்பு. - படம்: ஐஎம்யூத்
multi-img1 of 3

முந்தைய தலைமுறையினர் தம் மனநலத்தைப் பேணப் பயன்படுத்திய உத்தியான, எண்ணங்களைக் கைப்பட எழுதுதலை இன்றைய இளையர்களுக்கு அறிமுகப்படுத்தியது இளையர்களால் நடத்தப்பட்ட மனநலப் பயிலரங்கு.

‘உங்கள் மனம் முக்கியம்’ என்ற தலைப்பில், சனிக்கிழமை ஜனவரி 27ஆம் தேதி, ‘ஐஎம்யூத்’ எனும் இந்திய முஸ்லிம் இளையர் அணி, ‘எம்கியூப்’ ஜாலான் புசார் அமைப்பு ஆகியவை இணைந்து கொளம் ஆயர் சமூக நிலையத்தில் இந்நிகழ்ச்சியை வழங்கின.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக ஜாலான் புசார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் வான் ரிஸால் கலந்துகொண்டார்.

“மனநலத்தை மேம்படுத்த நாம் பயன்படுத்தும் உத்திகள் மிக முக்கியம். இன்றைய கைத்தொலைபேசிகள் நம் மனநலத்தை ஆராய உதவுகின்றன. அது நல்லதுதான். எனினும், நம் எண்ணங்களைக் கைப்பட எழுதுவதே மனநல மேம்பாட்டிற்குத் தலைசிறந்த வழியாகக் கருதுகிறேன்,” என்றார் டாக்டர் ரிஸால்.

நிகழ்ச்சியின் முதல் அங்கமாக, ‘ஐஎம்யூத்’ இளையர்கள் சொந்தமாக செய்த ‘பிங்கோ’ அட்டை விளையாட்டு இடம்பெற்றது.

‘உங்களுக்குப் பிடித்த உணவு எது?’ என மேலோட்டமான கேள்விகளிலிருந்து ‘உங்கள் வாழ்வில் மிகப் பெரிய சோதனை என்ன?’ போன்ற ஆழமான கேள்விகள்மூலம் இளையர்களால் ஒருவரையொருவர் நன்றாகப் புரிந்துகொள்ள முடிந்தது.

“எல்லாரும் ஆர்வத்துடன் விளையாடினர். சுவாரசியமான கேள்வி பதில்களால் ஒருமித்த கருத்து உடையவர்களை அடையாளங்காண முடிந்தது. தாங்கள் இப்பயணத்தில் தனியாகச் செல்லவில்லை என ஆறுதலும் அடைந்தனர்,” என்று செயல்திட்டத் தலைவர்கள் ஃபாஹிரா, 19, சமீன், 21, இருவரும் கூறினர்.

அதைத் தொடர்ந்து, இளையர்கள் தம் எண்ணங்களைக் கைப்பட எழுதும் பயிலரங்கு நடைபெற்றது.

இளையர்கள் தம் எண்ணங்களைக் கைப்பட எழுதும் பயிலரங்கு.
இளையர்கள் தம் எண்ணங்களைக் கைப்பட எழுதும் பயிலரங்கு. - படம்: ரவி சிங்காரம்

தம்மையே ஆராய்தல், குறிக்கோள் வகுத்தல், மனத்தில் இருப்பதை அப்படியே எழுதுதல் என மூன்று பாகங்களாகப் பிரித்து, அவற்றை அன்றாட வாழ்வில் எவ்வாறு பயன்படுத்துவது என இளையர்கள் கற்றுக்கொண்டனர்.

நிகழ்ச்சியின் முக்கிய அங்கமாக, டாக்டர் ரிஸாலுடன் ‘மென்டல் ஆக்ட்’ நிர்வாக இயக்குநர் மற்றும் குடும்பச் சேவை நிலைய சமூகச் சேவையாளர் தேவன், ‘ஹார்ட்ஸ்.குவெஸ்ட்’ மனநல ஆலோசகர் நஸ்ரின் ஷா ஆகியோர் மனநலம் பற்றிய கலந்துரையாடலில் பங்கேற்றனர். அக்கலந்துரையாடலை ‘ஐஎம்யூத்’ துணைத் தலைவர் ராஷிதா வழிநடத்தினார்.

மனநலம் பற்றிய கலந்துரையாடலில் ஜாலான் புசார் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் வான் ரிஸால், மனநல ஆலோசகர்கள் நஸ்ரின் ஷா, தேவன் ஆகியோர் பங்குபெற்றனர்.
மனநலம் பற்றிய கலந்துரையாடலில் ஜாலான் புசார் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் வான் ரிஸால், மனநல ஆலோசகர்கள் நஸ்ரின் ஷா, தேவன் ஆகியோர் பங்குபெற்றனர். - படம்: ரவி சிங்காரம்
யாராவது சோர்வடைந்து காணப்பட்டால், எதைச் செய்யவேண்டும் என அறிவுறுத்தாமல், ‘உங்கள் பிரச்சினையைப் பற்றிப் பேச விரும்புகிறீர்களா? நான் செவிசாய்க்கலாமா?’ போன்ற கேள்விகளை நீங்கள் கேட்டால் அவருக்கு ஊக்குவிப்பாக இருக்கும்.
தேவன், ‘மென்டல் ஆக்ட்’ நிர்வாக இயக்குநர்

மனநலத்துக்கும் மனநோய்க்கும் இடையே உள்ள வேறுபாடு, மனநலத்தைப் பற்றிப் பகிர்ந்துகொள்வதற்கு சுமுகமான சூழலை உருவாக்குதல் போன்றவை குறித்து கலந்துரையாடலில் பேசப்பட்டன.

“இளையர்களிடத்தில் மனநலம் பற்றிய விழிப்புணர்வு பெரிதும் உள்ளது. ஆனால், எங்கு சென்று உதவி நாடுவது என்பது அவர்களுக்கு அவ்வளவாகத் தெரிவதில்லை. அதுவும் இந்தியர்களிடத்தில் மனநலப் பிரச்சினைகள் அதிகமாகவே இருக்கின்றன,” என்றார் திரு தேவன்.

“இக்காலத்தில் மனநலம் மிக முக்கியம். ஆனால், இந்தியச் சமூகங்களில், இந்திய முஸ்லிம்கள் உட்பட, இதுபற்றி அவ்வளவாக பேசப்படுவதில்லை. அதனால், மனநலம் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க இந்நிகழ்ச்சியை நடத்தினோம்,” என்றார் இந்நிகழ்ச்சியின் செயல்திட்ட ஆலோசகர் நூரைமி, 24.

வெவ்வேறு இனங்களிலிருந்து கிட்டத்தட்ட 40 இளையர்கள் பங்குபெற்றதில் அவர் மகிழ்ச்சியும் தெரிவித்தார்.

“இந்நிகழ்ச்சியின் மூலம் மனநலம் பற்றி எனக்கு ஏற்பட்ட விழிப்புணர்வு, எனக்கும் என் சுற்றத்தாருக்கும் பயன் அளிக்கும்,” என்றார் ‘ஐஎம்யூத்’ உறுப்பினரும் இந்நிகழ்ச்சிக்கு உதவியாளருமான முஹம்மது நவ்ஃபல் சாலிஹ், 27.

குறிப்புச் சொற்கள்