தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விழாக்கோலம் பூணத் தயாராகும் சிங்கே ஊர்வலம் 2024

3 mins read
aad8f778-b182-4e9d-80b2-16e393533033
சிங்கே ஊர்வலத்தில் கலைஞர்கள். - படம்: டினேஷ் குமார்
multi-img1 of 4

இம்மாத இறுதியில் எஃப்1 கட்டடத்தில் இடம்பெறும் சிங்கே ஊர்வலத்தில் ஆரவாரத்திற்குச் சற்றும் பஞ்சமிருக்காது.

மக்கள் கழகம் ஏற்பாடு செய்துள்ள இந்த ஊர்வலத்தில் சிங்கப்பூரின் பன்முக கலாசாரத்தை வெளிப்படுத்தும் வண்ணம், 3,500 கலைஞர்கள் பங்கேற்று கலைவிருந்து படைக்கவுள்ளனர்.

சமூக உணர்வைப் பறைசாற்றும் விழாவான சிங்கே ஊர்வலத்தில், இவ்வாண்டு அதிகமான பள்ளி மாணவர்களும் வெவ்வேறு சமூக மன்றங்களைச் சேர்ந்த முதிய உறுப்பினர்களும் பங்கேற்க உள்ளனர்.

இதனைச் சாத்தியமாக்க 2,500 தொண்டூழியர்கள் கைகோத்துள்ளனர்.

இந்த ஆண்டு சிங்கே ஊர்வலத்தின் கருப்பொருள் மலர்கள். சிங்கப்பூரின் வளமான மரபைச் சித்திரிக்கும் வகையில், கலைஞர்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஆடைகளை அணிந்து காட்சி தருவர்.

முதன்முறையாக இவ்வாண்டு ஊர்வலம் 230 மீட்டர் நீளத்திற்கு, வண்ண வண்ணக் காட்சிகளால் ஒளிரும். 32,000 பார்வையாளர்கள் அமர்ந்தபடியே ரசிக்கும் வகையில் ஊர்வலம் நீண்ட நாட்களாக திட்டமிட்ட பின் அரங்கேறுகிறது.

சிங்கே ஊர்வலத்தில் 23வது ஆண்டாகப் பங்கேற்கும் சுரேந்திரன் ராஜேந்திரன், 38, இவ்வாண்டு ஊர்வலத்தில் நடன இயக்குநராகப் பங்களிக்கிறார்.

ஆறாண்டுகளுக்கும் மேலாக சிங்கே ஊர்வலத்தில் நடனங்களை இயக்கி வரும் சுரேந்திரன், சிங்கே ஊர்வலம் பலதரப்பு மக்களைச் சந்திக்கும் ஓர் அற்புதமான தளமாக விளங்கி வருவதாகக் குறிப்பிட்டார்.

இவ்வாண்டு ஊர்வலத்தில் பல்லின நடனப் பிரிவில் முதன்முறையாக யுரேசியர் நடனப் பிரிவை இவர் இயக்கியுள்ளார். 24 ஆண்டுகளாக ‘மணிமாறன் கிரியேஷன்ஸ்’ எனும் நடனக் குழுவில் உறுப்பினராக இருக்கும் இவருக்கு யுரேசியர் நடனத்தை இயக்கியது கடினமாக இருந்தது.

“பொதுவாக சிங்கே என்று வந்துவிட்டால் நான் இந்திய நடனத்தைத்தான் அதிகம் இயக்குவேன். இம்முறை அது மாறியுள்ளது. 60க்கும் மேற்பட்ட நடனமணிகளுக்கு யுரேசியர் நடன அசைவுகளை கற்றுத்தந்து, அவர்கள் அதைச் சிறப்பாக செயல்படுத்த வைக்க வேண்டிய பொறுப்பு எனக்குள்ளது,” என்று சுரேந்திரன் சொன்னார்.

நடனமணிகளுக்கு ஒப்பனை செய்யும் சுரேந்திரன்.
நடனமணிகளுக்கு ஒப்பனை செய்யும் சுரேந்திரன். - படம்: அனுஷா செல்வமணி

யுரேசிய நடனம் என்பதால் அதில் மேற்கத்தியத் தாக்கம் இடம்பெற வேண்டும். அதனால், கருப்பொருளுக்கு ஏற்றவாறு ஆடைகளையும் மலர்களையும் தாம் தேர்ந்தெடுத்துள்ளதாக சுரேந்திரன் சொன்னார்.

“பாயின்செட்டியா எனப்படும் கிறிஸ்துமஸ் மலர்களை நான் தேர்ந்தெடுத்துள்ளேன். கருப்பொருளுக்கு அது பொருத்தமாக இருக்கும். மேலும், ஒப்பனை முழுமை பெற போர்ச்சுகீசியத் தாக்கம் கொண்ட இதர அலங்காரங்களையும் நாங்கள் சேர்த்துள்ளோம்,” என்றும் அவர் பகிர்ந்துகொண்டார்.

ஊர்வலத்தின் முதல் நடன அங்கத்திற்கும் இணை நடன இயக்குநராக இருக்கும் சுரேந்திரன், சிங்கே ஊர்வலத்தில் பல கலாசாரங்களைச் சேர்ந்த மக்களுடன் கைகோப்பது ஊர்வலத்தில் தனக்குப் பிடித்தமானது என்றார்.

பாரம்பரிய நடனமணி மல்லிகாவுக்கு, 51, இது எட்டாவது சிங்கே ஊர்வல அனுபவம்.

முந்திய ஆண்டுகளைப் போல் இராது, இம்முறை அதிகமான கலாசாரப் பின்புலங்களிலிருந்து வரும் மக்களுடன் ஒன்றிணைய முடிந்ததாக மல்லிகா கூறினார்.

நடனமணி மல்லிகா.
நடனமணி மல்லிகா. - படம்: டினேஷ் குமார்

“எனக்கு இவ்வாண்டு சிங்கே ஊர்வலம் வித்தியாசமான அனுபவம். வெளிநாட்டிலிருந்து வந்த கலைஞர்களுடன் நான் உரையாடினேன். எனக்கு சிங்கே ஊர்வலத்தில் மிகவும் பிடித்தது, நிகழ்வின் முத்தாய்ப்பாக இருக்கும் வாணவேடிக்கைதான்,” என்று முகமலரச் சொன்னார் இந்த நடனமணி. பல்லினக் கூட்ட நடனப் பிரிவில் இந்திய நடனப் பிரிவில் இவர் ஆடவுள்ளார்.

கடந்த ஏழாண்டுகளாக சிங்கே ஊர்வலத்தில் தொண்டூழியப் பணிகளில் ஈடுபட்டு வரும் கதிரித்தம்பி ராமகிருஷ்ணன், 74, இதுபோல எட்டு நிறுவனங்களில் தொண்டூழியராக உள்ளார்.

தொண்டூழியர் கதிரித்தம்பி ராமகிருஷ்ணன்.
தொண்டூழியர் கதிரித்தம்பி ராமகிருஷ்ணன். - படம்: டினேஷ் குமார்

தமிழ் மக்களுடன் இணைந்து நடவடிக்கைகளில் ஈடுபடுவது மனத்திற்கு இன்பமூட்டுவதாக ராமகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

“ஒவ்வோர் ஆண்டும் எனக்கு சிங்கே ஊர்வலம் புதிய அனுபவங்களை அள்ளித் தரும். ஊர்வலத்துக்கு வருபவர்களுக்கு அன்பளிப்புப் பைகளை நான் வழங்கவுள்ளேன்,” என்றார் இவர்.

ஆங்கிலோ சீனத் தொடக்கக் கல்லூரி முதலாமாண்டு மாணவி ஆதிரா துரைக்குமார், 16, சிங்கே ஊர்வலத்தில் பங்கேற்கவிருப்பது இது நான்காம் முறை.

ஆதிரா துரைக்குமார்.
ஆதிரா துரைக்குமார். - படம்: அனுஷா செல்வமணி

தொடக்க அங்கத்திலும், இறுதி அங்கத்திலும் நடனமாடவுள்ள ஆதிரா, “சிங்கே ஊர்வலம் எனக்கு பலதரப்பட்ட மனிதர்களைச் சந்திப்பதற்கான தளமாகத் திகழ்கிறது. நான் முன்பு பாரம்பரிய நடனத்தைக் கற்று வந்தேன். இப்போது நான் சிங்கே ஊர்வலத்தில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறேன். கருப்பொருள் மலர்கள் என்பதால், அவற்றைத் தழுவும் ஆடைகளை அணிய ஆர்வமாக உள்ளேன்,” என்றார்.

தொடக்கப் பள்ளியில் பயின்றபோது இந்தியத் தோழியின் ஊக்கத்தால் இந்திய நடனக் குழுவில் சேர்ந்த இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த டேனியலா ஸ்ட்ரெங்கேர், 12, “எனக்கு இந்திய நடனத்தின் நுணுக்கங்கள் மிகவும் பிடிக்கும்,” என்று சொன்னார். சிங்கே ஊர்வலத்தில் இந்திய நடனப் பிரிவில் டேனியலாவைக் காணலாம்.

டேனியலா ஸ்ட்ரெங்கேர்.
டேனியலா ஸ்ட்ரெங்கேர். - படம்: அனுஷா செல்வமணி

சிங்கே ஊர்வலத்தைப் பற்றிய மேல் விவரங்களுக்கு http://www.chingay.gov.sg/ இணையத்தளத்தை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்