தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சீனப் புத்தாண்டை முன்னிட்டு பேருந்து ஓட்டுநர்களுக்குப் பாராட்டுமழை

2 mins read
469157d3-969a-4ebc-9134-5cb686a70b72
பேருந்து ஓட்டுநர்களுக்கு அன்பளிப்புப் பைகள் வழங்கிய செம்பவாங் ‘இண்டரேக்ட்’ குழுத் தொண்டூழியர் செந்தில் ஈஸ்வர் (நடுவில்). - படம்: ஏஜிடபுள்யுஓ
multi-img1 of 3

சீனப் புத்தாண்டு பொது விடுமுறையிலும் பேருந்து ஓட்டி பொதுமக்களை உரிய இடங்களுக்கு நேரத்தோடு கொண்டுசெல்வோருக்கு நன்றி தெரிவிக்கும் நோக்கில், சனிக்கிழமை பிப்ரவரி 10ஆம் தேதியன்று, 300 ‘எஸ்பிஎஸ் டிரான்சிட்’ பேருந்து ஓட்டுநர்களுக்கு அன்பளிப்புப் பைகள் வழங்கப்பட்டன.

காலை 8 மணிக்கு ஹவ்காங் பேருந்து முனையத்திலும் காலை 9 மணிக்கு யூனோஸ் பேருந்து முனையத்திலும் இம்முயற்சி நடைபெற்றது.

‘ஏஜிடபுள்யுஓ’ எனும் வெளிநாட்டு ஊழியர் உதவிக்குழு முதன்முறையாக ஏற்பாடு செய்த இம்முயற்சியில் செம்பவாங் ‘இண்டரேக்ட்’ குழுவின் தொண்டூழியர்கள் பங்குபெற்றனர்.

சீனப் புத்தாண்டு என்றாலும், மற்ற இனப் பேருந்து ஓட்டுநர்களுக்கும் அன்பளிப்புப் பைகள் வழங்கப்பட்டன.

அவற்றில் இரண்டு ஆரஞ்சுகள், கடல்நாகக் காகித ஒரிகாமி, காகித அதிர்ஷ்ட குக்கீகள் ஆகியவை இருந்தன.

தொண்டூழியர்களின் கடல்நாக ஒரிகாமி.
தொண்டூழியர்களின் கடல்நாக ஒரிகாமி. - படம்: ஏஜிடபுள்யுஓ

பிப்ரவரி 7ஆம் தேதியன்று தன் சமூக வலைத்தளங்களில் ‘ஏஜிடபுள்யுஓ’, பொதுமக்களைப் பேருந்து ஓட்டுநர்களுக்காக பாராட்டுகளை எழுதியனுப்ப வரவேற்றிருந்தது. இப்பாராட்டுகள் காகித அதிர்ஷ்ட குக்கீகளில் அச்சிடப்பட்டன.

ஒரிகாமியைச் செய்யவும் அன்பளிப்புப் பைகளைத் தயாரிக்கவும் தொண்டூழியர்கள் வெள்ளிக்கிழமையன்று ஒன்றுகூடியிருந்தனர்.

“பேருந்து ஓட்டுநர்கள் எவ்வாறு வேகத்துடன் குறுகிய இடைவேளைகளில் தங்கள் பணிகளை நிறைவேற்றுகின்றனர் என்பதை நேரில் கண்டு புரிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்தது.

“அவர்களைக் கையில் பிடிப்பதே அரிதாக இருந்தது,” எனக் கூறினார் ‘ஏஜிடபுள்யுஓ’வை வழிநடத்தும் ‘ஹோப் இனிஷியேட்டிவ் அலையன்ஸ்’ அமைப்பின் செயல்பாட்டு ஒருங்கிணைப்பாளர் ஃபாவ்சி.

பேருந்து ஓட்டுநர்களுக்குப் போதுமான அளவு பாராட்டுகள் - குறிப்பாக இணையத்தில் - வழங்கப்படுவதில்லை. 
செம்பவாங் ‘இண்டரேக்ட்’ குழுத் தொண்டூழியர் செந்தில் ஈஸ்வர்

“நல்ல அனுபவமாக இருந்தது. இந்தியராக சீனப் புத்தாண்டு முயற்சியில் பங்குபெற்றதில் மகிழ்கிறேன்,” என்றார் செம்பவாங் ‘இண்டரேக்ட்’ குழுத் தொண்டூழியர் செந்தில் ஈஸ்வர்.

ஆண்டர்சன்-சிராங்கூன் தொடக்கக் கல்லூரியில் ‘ஏ’ நிலைத் தேர்வுகளை முடித்துள்ள அவர் இம்முயற்சியில் முதன்முறையாக ஈடுபட்டார்.

தொண்டூழியப் பணியில் ஈடுபடும் செந்தில் ஈஸ்வர்.
தொண்டூழியப் பணியில் ஈடுபடும் செந்தில் ஈஸ்வர். - படம்: ஏஜிடபுள்யுஓ
குறிப்புச் சொற்கள்