‘விலைமதிப்புள்ள அன்பளிப்பைவிட விலைமதிப்பற்ற அன்பே மேல்’

2 mins read
தங்கள் அன்பர் தின வழக்கங்களையும் எதிர்பார்ப்புகளையும் பகிர்ந்த சிங்கப்பூர் அன்பர்கள்
4dd121b4-ed49-4111-84b6-db45e0e0abc4
தன் கணவரிடமிருந்து பெற்ற வாழ்த்து அட்டையுடன் கூடிய அழகான பூங்கொத்து, ஐஸ்வரியாவின் முகத்தில் புன்னகையையும் புதுப்பொலிவையும் வரவழைத்தது. - படம்: ச ஐஸ்வரியா

‘அன்பர் தினம்’ என்பது மேற்கத்திய நாடுகளிலிருந்து வந்திருந்தாலும் சிங்கப்பூரிலும் அன்பர்களால் வெகுவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

கணவரால் பூரிப்பு

திருமணமாகி ஐந்தாண்டுகளான நிலையில், 28 வயது ச ஐஸ்வரியாவிற்கு வேலையிடத்தில் ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அவருடைய கணவர் டிலீப் குமார், அவருக்கு வாழ்த்து அட்டையுடன் கூடிய அழகான பூங்கொத்தை அனுப்பியிருந்தார்.

“அவருடைய பரிசு என் மனத்தைத் தொட்டது,” என்று உற்சாகம் ததும்பக் கூறினார் ஐஸ்வரியா.

“நாங்கள் காதலிக்கத் தொடங்கியதிலிருந்து ஒவ்வோர் அன்பர் தினத்தன்றும், ‘நீ என் அன்பராக இருப்பாயா?’ என அவர் கேட்பாரென எதிர்பார்ப்பேன்,” என்றார் ஐஸ்வரியா. அவருடைய கணவரும் அதை மனத்திற்கொண்டு இன்றுவரை கடைப்பிடித்து வருகிறார்.

அன்பர் தினத்திற்கு முதல்நாள் ‘கேலன்டைன்ஸ்’ தினத்தையும் கொண்டாடுவதாகக் கூறும் ஐஸ்வரியா, பெண்களின் நட்பைக் கொண்டாடும் இந்த நாளில் தன் தோழிகளுக்கு அன்பளிப்புகளை வழங்குகிறார்.

‘வாழ்த்து அட்டையையே விரும்புவேன்’

கணவர் வினோத்துக்கு சஞ்சனா வழங்கிய அன்பளிப்பும் (இடது),  தன் மனைவிக்கு வினோத் வழங்கிய அன்பு மலர்களும்
கணவர் வினோத்துக்கு சஞ்சனா வழங்கிய அன்பளிப்பும் (இடது), தன் மனைவிக்கு வினோத் வழங்கிய அன்பு மலர்களும் - படங்கள்: சஞ்சனா குமார் அமுது

மருத்துவர்களான வினோத் - சஞ்சனா தம்பதியினரால் வேலையின் காரணமாக அன்பர் தினத்தை ஒன்றாகக் கொண்டாட முடியவில்லை.

எனினும், ஒருவருக்கொருவர் பூக்களையும் சாக்லெட்டுகளையும் அனுப்பி, அன்பைப் பரிமாறிக்கொண்டனர்.

“விலையுயர்ந்த பரிசுகளைவிட மனந்திறந்து எழுதிய வாழ்த்து அட்டையையே நான் அதிகம் விரும்புவேன். வினோத்துக்கும் அது தெரியும்,” என்றார் சஞ்சனா, 29.

‘அனுதினமும் அன்பர் தினமே’

சென்ற ஆகஸ்ட் மாதம், திருமணத்திற்குப் பின்பு பாலி சென்ற நவீன் - வனிதா இளந்தம்பதியினர்.
சென்ற ஆகஸ்ட் மாதம், திருமணத்திற்குப் பின்பு பாலி சென்ற நவீன் - வனிதா இளந்தம்பதியினர். - படம்: நவீன்

அடிக்கடி இரவு உணவுக்கு வெளியே செல்வதால் அன்பர் தினத்திற்கென வெளியே செல்லும் பழக்கம் இல்லை என்றார் நவீன். இவ்வாண்டு பாரம்பரியத் திருமணமும் நடக்கவுள்ளதால் பணத்தைச் சேமித்து வருவதாகக் கூறினார் அவர்.

தங்களுக்குள் காதல் பூத்து, அடுத்த ஆண்டுடன் பத்தாண்டு நிறைவுறுவதால், தாங்கள் இருவரும் சேர்ந்து 2025 அன்பர் தினத்தைப் பெரிய அளவில் கொண்டாடவுள்ளதாகக் கூறினார் நவீன்.

காதல் பயணத்தைத் தாண்டிய அன்புப் பயணங்கள்

“என் காதலருடன் மகிழ்வுடன் நேரம் செலவிடுவதும் மெழுகுவத்தி வெளிச்சத்தில் இரவு உணவு உண்பதுமே எனக்குச் சிறந்த அன்பர் தினப் பரிசுகள். அன்பர் தினத்தன்று மலேசியா, பாலி போன்ற இடங்களுக்குச் செல்வதும் எனக்குப் பிடிக்கும்,” என்றார் அனுஷா செல்வமணி, 26.

அன்பர் தினத்துக்கு மலேசியா, பாலி போன்ற இடங்களுக்குச் செல்கிறார் அனுஷா செல்வமணி, 26.
அன்பர் தினத்துக்கு மலேசியா, பாலி போன்ற இடங்களுக்குச் செல்கிறார் அனுஷா செல்வமணி, 26. - படம்: நொமேடிக் மேட்
குறிப்புச் சொற்கள்