கதை கதையாம் காரணமாம்

கதை கதையாம் காரணமாம்

1 of 2
படம்: நுஷா தக்‌ஷையினி
படம்: நுஷா தக்‌ஷையினி

18 Feb 2024 - 6:00 am

2 mins read

உன்னதமான கதைக்களம், சுவாரசியமான கதாபாத்திரங்கள் இடம்பெறும் கதைப் புத்தகங்கள் என்றால் 24 வயது நுஷா தக்‌ஷையினிக்கு மிகவும் பிடிக்கும்.

சிறு வயதிலிருந்தே கதைகளை அதிக ஆர்வத்துடன் நாடிய அவர், தானே சிறுகதைகளையும் கவிதைகளையும் படைக்கத் தொடங்கினார்.

“நான் எழுதிய கவிதைகளை ஒரு சிறுவர் நூலாகத் தொகுக்கலாம் என யோசனை கூறினார் என் துணைவர். வயதில் சற்று மூத்த சிறுவர்களுக்கு சிறுகதைகள் படைக்கவும் எனக்கு ஊக்கமளித்தார்,” என்கிறார் நுஷா தக்‌ஷையினி.

அந்தச் சிறுவிதை நுஷாவுக்கு ஓர் உந்துதலாக இருந்தது. கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பரில் ‘நுஷ் நுக்ஸ்’ எனும் புத்தகப் பதிப்பகம் சமூக ஊடகங்களில் அறிமுகமானது. மூன்று வாரங்களில் நுஷா, பல புத்தகங்களை வெற்றிகரமாக விற்பனைக்கு வெளியிட்டார்.

“இந்தப் பதிப்பகம் ஆறு மாத உழைப்பின் வடிவம். இதற்காக நாங்கள் நிறைய ஆராய்ச்சிகளை மேற்கொண்டோம்,” என்று புன்னைகையுடன் நினைவுகூர்ந்தார் நுஷா. 

பெரும்பாலும் சிறுவர்கள் படிக்கும் கதைப் புத்தகங்களில் பல கவர்ச்சியான, வண்ணமயமான ஓவியங்களைக் காணலாம். ‘நுஷ் நுக்ஸ்’ வெளியிட்ட புத்தகங்களின் சிறப்பு அம்சம், அதில் இடம்பெறும் ஓவியங்கள் அனைத்துமே நுஷாவின் கைவண்ணங்கள். 

“பொதுவாக நான் ஓவியம் தீட்டி வருமானம் ஈட்டுவதுண்டு. நான் எழுதிய சொற்களுக்கு ஏற்ற ஓவியங்களை வரைவது எனக்கு மிகுந்த கலைச் சுதந்திரத்தை அளித்துள்ளது,” என்கிறார் இவர்.

தற்போது பஃபல்லோ பல்கலைக்கழகத்தில் சமூகவியல் பட்டக் கல்வியை மேற்கொள்ளும் நுஷா, கதைகளின் மீதான காதலினால் எதிர்காலத்தில் ஓர் இலக்கியப் பேராசிரியராக விரும்புகிறார். 

“தொடர்ந்து என் துணைவருடன் ‘நுஷ் நுக்ஸ்’ பதிப்பகத்தை மேம்படுத்தி வளர்க்க வேண்டும் என்பது என் விருப்பம். கிடைத்த ஆதரவும் அங்கீகாரமும் ‘நுஷ் நுக்ஸ்’ பதிப்பகத்தின் வளர்ச்சிக்குக் கைகொடுக்கும் என்று திடமாக நம்புகிறேன்.

“ஏதேனும் ஒரு நல்ல யோசனை தோன்றினால் அதைச் செயலாக்க முற்படவேண்டும். நம் கதவைத் தட்டும் வாய்ப்புகள் குறைவாக இருப்பினும், வரும் நல்லனவற்றை இளையர்களான நாம் உடனே கைப்பற்ற வேண்டும்,” என்கிறார் நுஷா.

சிறுவர்களுக்கான நூல்களை எழுதுவது எளிதன்று. சின்னஞ்சிறிய உள்ளங்களின் கற்பனைத்திறனை வளர்க்க உதவுவது மட்டுமல்லாது, வாழ்வியல் நீதிகளைக் கதைகளின் வழி கற்பது சாத்தியமே என்பதற்கு எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறார் இந்த இளம் நூலாசிரியர்!

குறிப்புச் சொற்கள்