கனவுகளுக்கு உயிரூட்டிய சிங்கப்பூர் ஆகாயப் படை

கனவுகளுக்கு உயிரூட்டிய சிங்கப்பூர் ஆகாயப் படை

1 of 3
படம்: தற்காப்பு அமைச்சு
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
படம்: ரவி சிங்காரம்

25 Feb 2024 - 5:30 am

2 mins read

தொழில்நுட்பக் கல்விக்கழகத்தில் ஈராண்டுகள் வான்வெளி மின்னணுவியல் ‘நைடெக்’ படித்தபோது குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் உயர் ‘நைடெக்’, பலதுறைத் தொழிற்கல்லூரிப் படிப்புகளில் அவரால் அதே துறையில் தொடரமுடியவில்லை.

மின்னணுவியல் கட்டமைப்புப் படிப்புக்கு மாறவேண்டியிருந்தது. அதனால் அவரது கனவுகள் சிதைந்தன; சோர்ந்துபோனார்.

தேசிய சேவையில் சிங்கப்பூர் ஆகாயப் படைக்குத் தகுதிபெற்றபோதுதான் அவரது மனம் மீண்டும் பறக்கத் தொடங்கியது.

ஆகாயப்படைப் பயிற்சித் தளபத்தியத்தின் தலைசிறந்த வீரர், படைப்பிரிவின் தலைசிறந்த வீரர் விருதுகளையும் சென்ற ஆண்டுக்கான தேசிய தின அணிவகுப்பில் வான் சாகசக் காட்சியை ஆதரித்ததற்கான விருதையும் அவர் பெற்றார்.

இன்று, சிங்கப்பூர் விமானக் காட்சி 2024ல் பங்குபெறும் ‘எஃப்15-எஸ்ஜி’ விமானத்தின் குழு உறுப்பினராக நெஞ்சை நிமிர்த்தி நிற்கிறார் 2SG யோகேஸ்வரன், 26.

ஆகாயப் படைத் தொழில்நுட்பராக இவ்விமானத்திற்கு ஆயுதங்களைப் பொருத்தியவரும் இவர்தான்.

அதுமட்டுமன்றி, ‘எஃப்15-எஸ்ஜி’ உள்ளிட்ட நான்கு விமானங்களை சாங்கி கண்காட்சி மையத்திற்கு இரவில் வரிசையாக நகர்த்தவும் அவர் உதவினார்.

“பகலைவிட இரவில் விமானத்தை நகர்த்துவது மிகவும் கடினம். கைவிளக்குகளின் வெளிச்சத்தில் சுமார் ஒரு மணி நேரம் நகர்த்தினோம்.

“ஒவ்வொரு விமானத்தின் அகலமும் வெவ்வேறாக இருப்பதால் அது மேலும் கடினம். நடுவில் ஒரு பாலத்தையும் கடக்க வேண்டியிருந்தது.” என்றார் 2SG யோகேஸ்வரன்.

“
தேசிய சேவை, வான்வெளித் துறையில் எனக்கு நல்ல அடித்தளத்தை அமைத்துத் தந்துள்ளது.
2SG யோகேஸ்வரன், 26.

பொதுமக்களைக் கண்டு புத்துணர்ச்சி

இவ்வாண்டின் கண்காட்சியில் 2SG யோகேஸ்வரன் மக்களை வரவேற்று அவர்களது வினாக்களுக்கு விடையளித்துவருகிறார்.

சென்ற ஆண்டு சிங்கப்பூர் ஆகாயப் படை தனது 55வது ஆண்டு நிறைவுக்காக நடத்திய பொது வரவேற்பு விழாவிலும் அவர் பொதுமக்களுடன் உரையாடினார். அப்போது, மக்களின் முன்னிலையில் விமானத்தில் ஆயுதங்களைப் பொருத்தினார்.

“பொதுமக்கள் கேட்கும் கேள்விகள் நமக்குப் புதிய கண்ணோட்டங்களை வழங்குகின்றன. அதுவும் இக்காலச் சிறுவர்கள் பல விஷயங்களில் நம்மைவிட அதிகம் அறிந்துள்ளனர்.

“சிங்கப்பூரைத் தற்காக்க சிங்கப்பூர் ஆகாயப் படை ஆயத்தமாக இருக்கிறது என பொதுமக்களும் உணர்கின்றனர்,” என்றார் 2SG யோகேஸ்வரன்.

குறிப்புச் சொற்கள்