பக்தர்கள் பிரதோஷ வழிபாடு முடிந்தவுடன் வெளியேறி, முதல் கால வழிபாட்டிற்கு மீண்டும் வரிசையில் நின்று ஆலயத்திற்குள் வரவேண்டும்

மகா சிவராத்திரி 2024: கூட்ட நெரிசலைத் தவிர்க்கும்படி ஆலயம் அறிவுறுத்து

2 mins read
d2118deb-0164-4c79-88d1-6f0668c732e6
கேலாங் ஈஸ்ட் ஸ்ரீ சிவன் கோயில். - படம்: சாவ்பாவ்

கேலாங் ஈஸ்ட் அவென்யூ 2லுள்ள ஸ்ரீ சிவன் கோயிலில் இவ்வாண்டின் மகா சிவராத்திரி வழிபாடு, வெள்ளிக்கிழமை மார்ச் 8ஆம் தேதி இரவு 7 மணி முதல் மார்ச் 9ஆம் தேதி காலை 7 மணி வரை நடைபெற உள்ளது.

இம்முறை ஆலயத்திற்கு 20,000க்கும் மேற்பட்டவர்கள் வருகை புரிவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

மார்ச் 8ஆம் தேதி இரவு 8.30 மணி முதல் 11 மணி வரை கூட்ட நெரிசல் மிகுதியாக இருக்கக்கூடும் என்று தெரிவித்த ஸ்ரீ சிவன் கோயில் நிர்வாகம், இயன்றவரை அந்த நேரத்தைத் தவிர்ப்பது நல்லது எனப் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியது.

அன்றைய நாளில் நடைபெறும் பிரதோஷ வழிபாட்டில் கலந்துகொள்ளும் பக்தர்கள் அனைவரும் மாலை 5 மணிக்குள் ஆலயத்திலிருந்து வெளியேற வேண்டும். அதன் பின்னர் முதல் கால வழிபாட்டில் பங்கேற்க அவர்கள் மீண்டும் வரிசையில் சேரவேண்டும் என ஆலயம் கூறியது.

முதியோருக்கும் உடற்குறை உள்ளோருக்கும் நுழைவு வசதி

எம்ஆர்டி சேவையைப் பயன்படுத்தும் பக்தர்கள் பாயா லேபார் எம்ஆர்டி நிலையத்திலிருந்து நடந்து கோயிலின் எதிர்ப்புறம் அமையவுள்ள கூடாரத்தில் நுழைவுக்காகக் காத்திருக்கும்படி ஆலயம் கேட்டுக்கொண்டது.

கோயில், கூடாரம் ஆகிய இடங்களுக்குச் செல்வதற்குமுன் காலணிகளை அகற்ற வேண்டும். அவற்றைக் கோயில் எதிர்ப்புறத்தில் உள்ள திடலில், அதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் வைக்கலாம்.

நெரிசல் அதிகமாக உள்ள நேரத்தில் சிம் அவென்யூ வழியாக வரும் பக்தர்கள், ஆலயத்திற்குப் பக்கத்தில் இருக்கும் புத்த மடாலயத்திற்கு முன்னதாக திடலைச் சுற்றி அமைக்கப்படும் வரிசையில் சேரலாம்.

கேலாங் ஈஸ்ட் சென்ட்ரல் வழியாக வரும் பக்தர்கள், கேலாங் ஈஸ்ட் தொழிற்பேட்டை வழியாகச் செல்லத் தொடங்கும் வரிசையில் சேரலாம்.

ஆத்மலிங்கத்திற்குப் பக்கத்திலுள்ள நுழைவாயிலைப் பயன்படுத்தி, 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களும் உடற்குறை உள்ளோரும் கோயிலுக்குள் செல்லலாம்.

மேல் விவரங்களுக்கு www.heb.org.sg எனும் இணையத்தளத்தை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்
கோயில்