தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மூத்தோருடன் சீனப் புத்தாண்டு கொண்டாட்டம்

2 mins read
59aeebfc-25d3-451b-af61-90b686b4fc85
கலந்துகொண்ட மூத்தோர், ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்களுடன், தஞ்சோங் பகார் நாடாளுமன்ற உறுப்பினரும், அடித்தள அமைப்புகளின் ஆலோசகருமான திருவாட்டி ஜோன் பெரேரா. - படம்: லாவண்யா வீரராகவன்

சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 100 மூத்தோர்கள் கலந்துகொண்ட சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்கு அருள்மிகு தெண்டாயுதபாணி கோவிலின் செட்டியார் கோவில் குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

கடந்த 2017ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் நடைபெற்று வரும் இந்தக் கொண்டாட்டம், 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதியன்று நடைபெற்றது.

இதில் ஹென்டர்சன், ராடின் மாஸ், தஞ்சோங் பகார், தியோங் பாரு பகுதிகளைச் சேர்ந்த மூத்தோர்கள் கலந்துகொண்டனர். தஞ்சோங் பகார் நாடாளுமன்ற உறுப்பினரும் அடித்தள அமைப்புகளின் ஆலோசகருமான திருவாட்டி ஜோன் பெரேரா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இந்தக் கொண்டாட்டத்தில், பங்கெடுத்த அனைத்து முதியோருக்கும் 50 வெள்ளிக்கான ‘அங் பாவ்’, பரிசுப் பொருள்கள் ஆகியவை வழங்கப்பட்டன.

சீனப் புத்தாண்டை வரவேற்கும் விதமாக செய்யப்படும் ‘லோஹேய்’, சிங்க நடனம், இந்திய நடனமான பரதநாட்டியம் உள்ளிட்ட அங்கங்களும் இடம்பெற்றன. தொடர்ந்து சிறப்பு விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

“சிங்கப்பூரில் பல இன சமுதாயமாக நாம் வாழ்கிறோம். அனைவரையும் உள்ளடக்கிய கொண்டாட்டம்தான் உண்மையானது. அதனை மனதில் கொண்டு சீனப் புத்தாண்டு, ஹஜ்ஜூப் பெருநாள், தீபாவளி என அனைத்தையும் கொண்டாட முயல்கிறோம். இவ்வாண்டு இதனை மூத்தோருடன் கொண்டாடுவது மகிழ்ச்சி,” என்று கூறினார் செட்டியார் கோவில் சங்கத் தலைவர், திரு. ராமசாமி, 64.

“சமூக அக்கறை, பொருளியல் தேவை உள்ள மூத்தோருடன் இணைந்து இவ்வாண்டு சீனப் புத்தாண்டைக் கொண்டாட முடிவு செய்தோம். கடந்த மூன்று மாதங்களாக இதற்கான திட்டமிடல் நடந்தது. இந்தக் கோவில் குழுவைச் சேர்ந்த பலரும் இந்த விழாவுக்காகத் தொண்டூழியம் புரிந்தனர். அவர்களது ஆதரவினால் இது சாத்தியமானது,” என மகிழ்வுடன் பகிர்ந்தார் செட்டியார் கோவில் சங்கச் செயலாளர் திரு சௌந்தரராஜன், 55.

இதில் கலந்துகொண்ட புக்கிட் மேரா பகுதியைச் சேர்ந்த ஜெயந்தி, 75, “வயதான காலத்தில் எனக்கும் என்னைப் போன்ற பலருக்கும் பல உடல்நலக் குறைபாடுகள் உள்ளன. எங்கள் சிரமங்களை மறந்து சிரித்து, கொண்டாடி மகிழ இதுபோன்ற கொண்டாட்டங்கள் உதவுகின்றன,” என்றார்.

குறிப்புச் சொற்கள்
சீனப் புத்தாண்டுகொண்டாட்டம்நாடாளுமன்ற உறுப்பினர்