‘தவிக்கிறேன்’: கைதியின் இறுதி நிமிடங்கள்

‘தவிக்கிறேன்’ காணொளிச் சுவரொட்டி. படம்: ‘தவிக்கிறேன்’ குழு

தூக்குத் தண்டனையை எதிர்நோக்கும் கைதியின் கடைசி நிமிடங்களில் அவருக்கும் அவருடைய மனைவி, மகளுக்கும் இடையே நடக்கும் கடைசி உரையாடலைச் சித்திரிக்கிறது, புதிதாக வெளியான ‘தவிக்கிறேன்’ எனும் தமிழ் இசைக் காணொளி.

பிப்ரவரி 16ஆம் தேதி ‘யூடியூபில்’ (www.youtube.com/@threesixzero) வெளியான இந்த ஆறு நிமிடக் காணொளி, இரு வாரங்களில் 82,000க்கும் மேற்பட்ட பார்வைகளையும் கிட்டத்தட்ட 1,000 விருப்பக் குறிகளையும் பெற்றுள்ளது.

அதற்கு முன்னர் வெளியான நாலரை நிமிட முன்னோட்டக் காணொளியும் (www.tinyurl.com/thavikiren) இரு வாரங்களில் 63,000க்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது.

“தவறு செய்யவிருப்பவர்கள் இப்பாடலைக் கண்டு, தம் செயல்களால் குடும்பம் எவ்வாறு பாதிப்படையும் என்பதைச் சிந்திக்கவேண்டும். சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த விரும்புகிறேன்.

“மன்னிப்பு, செய்த தவற்றுக்குப் பரிகாரம், மனிதநேயம் குறித்த அர்த்தமுள்ள கலந்துரையாடல்களுக்கும் இது வழிவகுக்கும்,” என்றார், இக்காணொளியின் இசை, வரிகள், திரைக்கதை, இயக்கம் ஆகியவற்றின் பின்னணியில் உள்ள சிங்கப்பூர்க் கலைஞர் ஏ ஆர் சாய், 36.

இதுதான் அவரது முதல் வெற்றிகரமான கலைப் படைப்பு. இதற்கு முன்பு, ஈராண்டுகளில் அவர் மும்முறை முன்பணம் செலுத்தி குறும்படங்கள், இசைக் காணொளிகளைச் செய்ய முயன்று தோல்வியடைந்தார். எனினும், தன் லட்சியத்தை அவர் கைவிடவில்லை.

“எனக்குத் திறன் இருக்கிறது என நம்பினேன். ஆனால், அதிக முதலீடு தேவைப்பட்டது. அதனால், நண்பர்களிடமிருந்து நிதி திரட்டினேன்; உணவு விநியோகத்தள ஊழியராகவும் பணியாற்றினேன்,” என்றார் சாய்.

காணொளியை உருவாக்க அவருக்கு ஓராண்டு தேவைப்பட்டது. முயற்சிக்குப் பலன், மக்களிடத்தில் கிடைத்த வரவேற்பு.

பலர் இக்காணொளியைப் பார்த்து அழுதுள்ளனர். மனம் நெகிழ்ந்ததாக ‘யூடியூப்’பில் பதிவுசெய்துள்ளனர்.
‘தவிக்கிறேன்’ பாடலாசிரியர், இயக்குநர் ஏ ஆர் சாய், 36

இக்காணொளியை அதிபர் தர்மன் சண்முகரத்னத்திற்கும் உள்துறை, சட்ட அமைச்சர் கா.சண்முகத்திற்கும் பல அரசாங்க அமைப்புகளுக்கும் அனுப்பியுள்ளதாகக் கூறினார் சாய். திரைப்பட விழாக்களுக்கும் இதை அனுப்ப அவர் திட்டமிட்டுள்ளார்.

“இதை நான் பொருள் ஈட்டுவதற்காகச் செய்யவில்லை. என் திரைப்பட ஆற்றலைக் காண்பித்து திரைப்படம், திரைத் தொடர்களை இயக்க மேன்மேலும் வாய்ப்புகளைப் பெற விரும்புகிறேன்,” என்றார் அவர்.

‘தவிக்கிறேன்’ குழுவினர்

சிங்கப்பூரின் பிரபல நடிகர், இயக்குநர், பாடலாசிரியரான சூரியவேலன், ‘தவிக்கிறேன்’ பாடலுக்கு வசனங்களையும் இயக்குநர் சாயுடன் இணைந்து வரிகளையும் எழுதியுள்ளார்.  படம்: ஐஎம்டிபி

‘நாம்’ தொலைக்காட்சித் தொடரின் பிரபல பாடலான ‘அடி பெண்ணே’ பாடலை இயக்கிய சூரியவேலன், ‘தவிக்கிறேன்’ பாடலுக்கு வசனங்களையும் சாயுடன் இணைந்து பாடல் வரிகளையும் எழுதியுள்ளார். மலேசியப் பிரபலம் ஸ்டிஷ், சாயுடன் சேர்ந்து இசை அமைத்துள்ளார்.

இந்தியாவின் ‘சூப்பர் சிங்கர்’ பிரபலம் மானசி ஜி கண்ணன் சாயுடன் பாடியுள்ளார். தொகுப்பு, தயாரிப்பு, நடிப்பு என மூன்று பொறுப்புகளை ஏற்றுள்ளார் உள்ளூர்க் கலைஞர் முரளி முருகன்.

முரளியின் மனைவியாக மாலதி சிவகாமி, மகளாக வேதவள்ளியும் நடித்துள்ளனர். ‘360 என்டர்டெய்ன்மண்ட் புரொடக்‌ஷன்ஸ்’ இக்காணொளியை வெளியிட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!