தாய்ப்பால் கொடுக்கும் ஒரு பெண்ணுக்கு அவர் உட்கொள்ளும் உணவு மிக முக்கியமான ஒன்று.
சில உணவு வகைகள், குறிப்பாக ‘கேலக்டாகோக்ஸ்’ பிரிவில் அடங்கும் உணவுகள் தாய்ப்பால் சுரக்கும் தன்மையை அதிகரிக்க கூடிய தன்மை கொண்டவை. பெண்கள் அவற்றைப் பற்றி அறிந்துகொண்டு உணவுகளை கவனமாக உட்கொள்வது சிறந்தது.
முழு தானியங்கள்
முழு தானியங்களில் அடங்கியுள்ள சத்து, தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கக் கூடியது. அச்சத்து, தாய்ப்பால் சுரப்பியுடன் தொடர்புடைய சுரப்புநீர் உற்பத்திக்கு உதவக் கூடியது. ஓட்ஸ், பார்லி போன்ற மூலப்பொருள்கள் கொண்ட உணவு வகைகளைச் சாப்பிடலாம்.
பச்சைச் கீரை வகைகள்
கீரை வகைகளான பசலைக்கீரை, பச்சடிக்கீரை போன்றவற்றில் கால்சியம் உள்ளிட்ட பல சத்துகள் நிறைந்துள்ளன. கீரை வகைகளில் இருக்கும் ‘பைட்டோ ஈஸ்ட்ரோஜன்’, தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவும்.
பெருஞ்சீரகம்
பெருஞ்சீரகம் பல உணவு வகைகளுக்கு சுவை ஊட்டும். சமையலுக்கு அதிகம் பயன்படுத்தப்படும் மூலப்பொருளான பெருஞ்சீரகத்தை தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பச்சையாக சாப்பிடலாம். பெருஞ்சீரகச் செடியின் கிழங்கு, தண்டு, இலைகள் ஆகியவற்றையும் சமையலில் சேர்த்துக்கொள்ளலாம்.
எள் விதைகள்
எள் விதைகளில் கால்சியம் சத்து நிறைந்துள்ளதால் தாய்ப்பால் சுரப்பதற்கு அது ஏதுவாக இருக்கும். எள் விதைகளைத் தனியாக சாப்பிடலாம் அல்லது சாலட், உலர்ந்த பழங்கள், விதைகள் ஆகியவற்றுடன் கலந்து உட்கொள்ளலாம்.
பாதாம்
பருப்பு வகைகளில், குறிப்பாக பாதாம் பருப்பில் அதிக அளவிலான புரதச்சத்தும் கால்சியம் சத்தும் அடங்கியுள்ளது. பொதுவாக, பெண்கள் பாதம் பருப்பு அல்லது பாதம் பாலை விரும்பி உட்கொள்வார்கள். தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தாய்ப்பாலின் இனிப்பு சுவை மற்றும் அளவை அதிகரிக்க பாதாம் பருப்பைச் சாப்பிடலாம்.
புரூவர்ஸ் ஈஸ்ட்
‘புரூவர்ஸ் ஈஸ்ட்’ எனப்படும் ஒருவகை நுரைமம் மிக ஆரோக்கியமானது. அதில் வைட்டமின் பி, புரதச்சத்து, இரும்புச்சத்து என பல சத்துகள் நிறைந்துள்ளன. தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் இதைச் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிப்பது மட்டுமின்றி சோர்வு தளரும்.
தொடர்புடைய செய்திகள்
பூண்டு
பூண்டு பலர் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு மூலப்பொருள். அதன் வாசனை பலருக்கும் பிடிக்காமல் இருந்தாலும் தாய்ப்பால் சுரப்பிற்கு அது உகந்தது. ஒரு பெண் பூண்டை அதிகம் சாப்பிடும்போது, சுரக்கும் தாய்ப்பாலில் அதன் சுவை அடங்கிவிடும். அதைக் குழந்தை குடிக்கும்போது அதற்கு நீண்டநாள் தாய்ப்பால் குடிக்கும் உணர்வு ஏற்படும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவும் பானங்கள்
பால்சுரப்புத் தேநீர்
தாய்ப்பால் ஊட்டும் பெண்கள் தேடும் எளிதான தெரிவுகளில் ஒன்று ‘லாக்டேஷன் தேநீர்’ எனப்படும் பால்சுரப்புத் தேநீர். பால்சுரப்புத் தேநீரில் பல மூலிகைப் பொருள்கள் சேர்க்கப்படும். வெந்தயம், நெருஞ்சில், பெருஞ்சீரகம் போன்ற மூலப்பொருள்கள் தேநீரில் சேர்க்கப்படுவதால் அதை அருந்தும் பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.
ஓட் பால்
ஓட்சில் அடங்கியுள்ள நார்ச்சத்து, தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும். அதில் இருக்கும் ஒரு வகையான நார்ச்சத்து, உடலில் இருக்கும் ‘புரோலாக்டின்’ அளவை உயர்த்தக்கூடியது. ஓட் பால் இயற்கையாகவே இனிப்பாக இருக்கும்.
தண்ணீர்
பல வகையான உணவு, பானங்களை உட்கொண்டு வந்தாலும், தண்ணீர் அதிகம் அருந்தினாலே தாய்ப்பால் சுரப்பைக் கூட்ட முடியும். தாய்ப்பாலில் 87 விழுக்காடு தண்ணீர் அடங்கியுள்ளது. குழந்தை தாய்ப்பால் குடிக்கும்போது தாயின் உடலில் இருக்கும் தண்ணீர் அளவு குறைகிறது. இதனால் அதை நிறைவுசெய்ய அதிக தண்ணீர் குடிக்க வேண்டும்.


