தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்திற்குப் பெருவரவேற்பு

3 mins read
efd3830b-3c53-4db5-8f1d-8067b24c2678
கடந்த 2006ஆம் ஆண்டு கொடைக்கானலில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. - படம்: இணையம்

எதிர்பாரத வகையில் தமிழர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ எனும் மலையாளத் திரைப்படம்.

சிங்கப்பூரில் இப்படம் வெளியிடப்பட்டுள்ள எல்லாத் திரையரங்குகளிலும் ஏறத்தாழ இருக்கைகள் நிரம்பியுள்ளதைக் காண முடிகிறது.

கேரள மாநிலம், மஞ்சும்மல்லைச் சேர்ந்த நண்பர்கள் சிலர் கொடைக்கானலுக்குச் சுற்றுலா சென்றபோது, அவர்களுள் ஒருவர் எதிர்பாராத விதமாக அங்கிருக்கும் ‘குணா’ குகைக்கு அருகிலுள்ள `சாத்தானின் சமையலறை’ எனக் கூறப்படும் ஆழமான பள்ளத்தில் விழுந்துவிட, அவரை நீண்ட போராட்டத்துக்குப்பின் மீட்கின்றனர் நண்பர்கள்.

‘சர்வைவல் திரில்லர்’ பாணியில் அமைந்துள்ள இத்திரைப்படத்தில், குணா படத்தின் ‘கண்மணி அன்போடு காதலன்’ எனும் காதல் பாடலை, நண்பர்களுக்குள் ஏற்படும் வெவ்வேறு உணர்வுகளுக்கு, நேர்த்தியாகப் பயன்படுத்தி, அதனைப் படத்தின் ஓர் அங்கமாக மாற்றியிருப்பது ரசிக்கும்படி அமைந்துள்ளது.

நம்ப முடியாத அளவு நேர்த்தியுடன் உருவாக்கப்பட்ட குகை அமைப்பு, விறுவிறுப்பான படத்தொகுப்பு, காண்போருக்குப் பதற்றத்தைத் தொற்றிக்கொள்ள வைக்கும் ஒளிப்பதிவு, படபடப்பைக் கடத்தும் பின்னணி இசை, இறுதிப்பகுதியில் வரும் உணர்வுபூர்வமான காட்சியமைப்பு எனப் பல சிறப்பம்சங்கள், பார்வையாளர்களிடம் சிலிர்ப்பை ஏற்படுத்துகின்றன.

‘மனிதர் உணர்ந்துகொள்ள இது மனிதக் காதல் அல்ல’ எனும் வரிகளுடன் வரும் இறுதி மீட்புக் காட்சிக்குத் திரையரங்கம் அதிர ஆர்ப்பரிக்கின்றனர் ரசிகர்கள்.

சமூக ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டதாலும், எல்லாத் திரையரங்குகளும் நிரம்பி வழிவதைக் கண்டும் ஆவலுடன் சென்று படம் பார்த்த விவேக் வேலுத்துரை, 33, “பொதுவாக மலையாள சினிமா எளிய கதைகளையும் எதார்த்தமான திரைக்கதையும் கொண்டிருக்கும். அதே பாணியில், அனைவரையும் ஈர்க்கும் வகையில் இப்படம் அமைந்துள்ளது. எனக்கு மிகவும் பிடித்திருந்தது,” என்றார்.

“கடந்த ஒரு வாரமாகவே இணையத்தளம் முழுதும் இத்திரைப்படத்தை பற்றிய பேச்சாகவே இருந்தது. அதனால், இத்திரைப்படத்தைப் பார்த்துவிட வேண்டுமென்கிற உந்துதல் ஏற்பட்டது. நான் திரையரங்கில் சென்று பார்க்கும் முதல் மலையாளத் திரைப்படம் இது. செயற்கைத்தனம் ஏதுமின்றி அமைந்த திக் திக் காட்சிகளும், நெகிழ்ச்சியான இறுதிக் காட்சிகளும் என் மனத்தில் ஆழப் பதிந்துள்ளன. பார்த்த அன்றிரவு உறக்கம் வரவில்லை. அது குறித்த சிந்தனைகள் மனத்தில் ஓடிக்கொண்டே இருக்கின்றன. நீண்ட நாள்களுக்குப்பின் என் மனத்தைத் தொட்ட படம் இது. தமிழிலும் இது போன்ற படங்கள் வர வேண்டும் என எதிர்பார்க்கிறேன்,” என்கிறார் வினோத் குமார், 29.

நல்ல விமர்சனங்கள் இருந்ததால் நண்பர்களுடன் கடந்த வாரம் இத்திரைப்படத்தைப் பார்த்த தாருகா, 25, “நகைச்சுவையாகத் தொடங்கி, மிகுந்த பரபரப்புடன் கூடிய கதை. படத்துடனே ஒன்றி அதனை மிகவும் ரசித்தேன்,” என்றார்.

வழக்கமாக மலையாளத் திரைப்படங்களைப் பின்தொடரும் ரசிகரான சார்லஸ், 24, “சிறந்த காட்சியமைப்புடன் உருவாகியுள்ள இத்திரைப்படம், மிகக் குறுகிய நேரமும் இல்லாமல், இழுவையாகவும் இல்லாமல் சரியான கால அளவில் அமைந்துள்ளது. இனி எந்த மலைப் பகுதிகளுக்குச் சென்றாலும் இத்திரைப்படந்தான் நினைவுக்கு வரும். அவ்வளவு தாக்கத்தை எற்படுத்தியுள்ளது இத்திரைப்படம்,” எனச் சிலிர்ப்புடன் சொன்னார்.

நடிகர் கமல்ஹாசனின் தீவிர ரசிகரான இப்படத்தின் இயக்குநர் சிதம்பரத்தையும், படக் குழுவினரையும், நடிகர் கமல்ஹாசன், குணா பட இயக்குநர் சந்தான பாரதி இருவரும் அழைத்துப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.  

குறிப்புச் சொற்கள்