மோசடிகளிலிருந்து காக்க வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவும் ரிஷ்மா

2 mins read
கடமைக்காக வாழ்வை அர்ப்பணிக்கும் முன்மாதிரிப் பெண்மணி.
ad0ccad7-50d5-4c9b-b586-3dfc891f84ba
வெளிநாட்டு ஊழியர்கள், இல்லப் பணிப்பெண்களுக்கு மின்னிலக்கத் திறன் பயிலரங்குகளை நடத்தும் ரிஷ்மா (இடம்), 28, வேலை நேரத்துக்கு அப்பாலும் அவர்களுக்கு உதவுகிறார். - படம்: டிபிஎஸ் வங்கி
multi-img1 of 3

வெளிநாட்டு ஊழியர்களுக்கும் இல்லப் பணிப்பெண்களுக்கும் மின்னிலக்க திறன்களைக் கற்றுத் தருகிறார் டிபிஎஸ் வங்கியின் 28 வயது ரிஷ்மா திரு.

வங்கியின் வேலை அனுமதிச்சீட்டுப் பிரிவில் வணிக மேலாளராகக் கடந்த 4 அண்டுகளாகப் பணியாற்றிவரும் ரிஷ்மா, வேலை நேரத்தைத் தாண்டியும் தன் கடமையைச் செய்து வருகிறார்.

“வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஓய்வு நேரமும் விடுமுறை நாள்களும் குறைவாக இருப்பதால், சிலரால் எங்கள் அலுவலகத்திற்கு எளிதில் வரமுடிவதில்லை.

“அதனால், நானே அவர்களின் வேலையிடங்களுக்கும் தங்குமிடங்களுக்கும் வாரநாள் மாலையிலும் வார இறுதியிலும் சென்று உதவுகிறேன்,” என்கிறார் ரிஷ்மா.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கும் இவர் உதவி வருகிறார்.

“ஒருமுறை மருத்துவமனையில் ஆறு மாதம் இருந்த வெளிநாட்டு ஊழியர் இந்தியாவிற்குப் பணம் அனுப்பவேண்டியிருந்தது. நான் மருத்துவமனைக்குச் சென்று உதவினேன்.

“சிகிச்சைக்காக இந்தியாவிற்குத் திரும்பிய அவர் மீண்டும் சிங்கப்பூர் வந்தபோது முதலிடமாக வங்கிக்கு என்னைக் காண வந்து நன்றி கூறினார்,” என நெகிழ்ச்சியோடு நினைவுகூர்கிறார் ரிஷ்மா.

கடந்த மூன்று ஆண்டுகளாக தீபாவளியன்றுகூட காலையைத் தம் குடும்பத்தினருடன் செலவிட்டு, மதியம் முதல் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளுக்குச் சென்று இணைய மோசடிகளைப் பற்றிய பயிலரங்குகளை நடத்திவந்துள்ளார்.

“தீபாவளிக் காலத்தில் தம் குடும்பத்தினருக்குப் பணம் அனுப்புவதால் அப்பொழுதுதான் மோசடிக்காரர்கள் அவர்களை அதிகமாகக் குறிவைப்பார்கள்,” என்கிறார் ரிஷ்மா.

சென்ற ஆண்டு தீபாவளியன்று ஒரு வெளிநாட்டு ஊழியரை, தன் குடும்பத்தினருடன் விருந்து உண்ண, தம் இல்லத்திற்கு வரவேற்றார் ரிஷ்மா.

சிங்கப்பூரில் அவர்களுடன் தீபாவளியைக் கொண்டாடும் இந்திய சகோதரியாக நான் இருக்கிறேன்.
ரிஷ்மா திரு

தன் முழுநேர வேலையாக, வேலை அனுமதி அட்டை உடையவர்களின் வங்கிச் சேவைகளை மேம்படுத்துகிறார் ரிஷ்மா.

ரிஷ்மாவின் சமூகப் பணிகளைப் பற்றிய மேல்விவரங்களுக்கு https://tinyurl.com/RishmaDBS இணையத்தளத்தை நாடலாம்.

2016 முதல் ‘பிஓஎஸ்பி’ நடத்திவந்துள்ள மின்னிலக்கத் திறன் பயிலரங்குகளால் 300,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் பயனடைந்துள்ளனர்.  

2018 முதல் ‘பிஓஎஸ்பி’, இல்லப் பணியாளர்கள் நிலையத்துடன் இணைந்து மின்னிலக்கத் திறன், மோசடி எதிர்ப்புப் பயிலரங்குகளையும் நடத்திவருகிறது.

ரிஷ்மாவின் மோசடித் தடுப்பு உத்திகள்

இல்லப் பணிப்பெண்கள் ‘கேரோசல்’ தளத்தில் பொருள்களை வாங்குவது வழக்கம். சில சமயம் பொருள்கள் கிடைக்காமலேயே அவர்கள் பணங்கட்டி ஏமாறுவதாகக் கூறுகிறார் ரிஷ்மா. வெளிநாட்டு ஊழியர்கள் காதல் மோசடிகளில், காவல்துறையைப் போல் நடிப்போரின் மோசடிகளில் ஏமாறுவதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

‘டிபிஎஸ் வங்கி’ போன்ற நம்பகமான பெயர்களில் மோசடிக்காரர்கள் வழங்கும் இலவச ‘வைஃபை’களுக்கு (WiFi) இணைந்தால் முக்கிய தரவுகள் பறிபோகக்கூடும் என்றும் அவர் அறிவுறுத்துகிறார்.

குறிப்புச் சொற்கள்