மகா சிவராத்திரி 2024: மழையைப் பாராது திரளும் பக்தர் கூட்டம்

மகா சிவராத்திரி 2024: மழையைப் பாராது திரளும் பக்தர் கூட்டம்

1 mins read
39ae628e-9a61-44c6-988d-82d8c77c6726
கோப்புப் படம்: - இந்து அறக்கட்டளை வாரியம்

கேலாங் ஈஸ்ட் அவென்யூ 2லுள்ள ஸ்ரீ சிவன் கோயிலில் மகா சிவராத்திரி திருவிழா இன்று வெள்ளிக்கிழமை கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

ஆலய மூலவரான சிவபெருமானுக்கு நான்கு கால அபிஷேகம் செய்யப்படுகிறது. முதல் கால வழிபாடு இரவு 7 மணி முதல் தொடங்கி நான்காம் கால வழிபாடு சனிக்கிழமை காலை 7 மணி வரை நடத்தப்படுகிறது. ஒவ்வொரு காலமும் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நீடிக்கும்.

கிட்டத்தட்ட 20,000 பக்தர்களை வரவேற்க ஆலயம் தயாராக உள்ளது. மகா சிவராத்திரி திருவிழாவுக்காக சுமார் 300 தொண்டூழியர்கள் பணியாற்றுகின்றனர். அத்துடன் சுமார் 2,300 பேர் பால்குடம் எடுக்க பதிவு செய்துள்ளனர். 

கோயிலுக்கு முன்பு இருக்கும் திறந்தவெளி இடத்தில் அன்னதானம், தண்ணீர் பந்தல்கள், ஆன்மிக புத்தகங்களும் பொருள்களும் விற்கும் கூடாரங்களில் பொதுமக்கள் திரளாக கூடியுள்ளனர். 

சிவராத்திரி திருநாளுக்கான ஆயத்த வழிபாட்டுச் சடங்குகள் சுமார் ஒரு மாதத்திற்கு முன்னதாகத் தொடங்கின.

மழைத்தூறலுக்கு மத்தியிலும் பக்தர்கள் பலர் கூட்டம் கூட்டமாக வருவதாக ஆலயத் தலைவர் அ.யோகநாதன் தமிழ் முரசிடம் தெரிவித்தார்.

“இன்று பிரதோஷ வழிபாடும் நடைபெறுவதால் பிற்பகல் வேளையிலிருந்து மக்கள் திரளாக வருகின்றனர்,” என்றார் திரு யோகநாதன்.

மழை பெய்வதால் மக்கள் பாதுகாப்புடன் வந்து ஒத்துழைக்கும்படியும் அவர் கூறினார்.

மேடை நிகழ்ச்சி, அபிஷேகத்தைக் காண்பதற்காக இருக்கைகளும்  ஒளித்திரைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நிகழ்ச்சிகள் சனிக்கிழமை காலை 5 மணி வரை இடம்பெறும்.

குறிப்புச் சொற்கள்