சூரிய மின்னாற்றல் உதவியுடன் பிடோக்கில் முதல் ரமலான் சந்தை

2 mins read
சந்தையின் திறப்பு விழாவில் வசதிகுறைந்த 1,000 குடும்பங்களுக்கான நன்கொடைத் திட்டம் தொக்கம்
e5d65dde-56d3-477b-b7dc-19e0d38954ca
வசதிகுறைந்த குடும்பங்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்கும் ‘ஃபெஸ்டிவ் கேர் 2024’, மார்ச் 10ஆம் தேதியன்று பிடோக், உட்லண்ட்ஸ் ரமலான் சந்தைகளில் துவக்கம் கண்டது. - படம்: ரவி சிங்காரம்
multi-img1 of 3

நோன்பு மாதத்தை முன்னிட்டு, சூரிய மின்னாற்றல் உதவியுடன் இயங்கும் சிங்கப்பூரின் முதல் ரமலான் சந்தை, பிடோக் நார்த் அவென்யூ 3ன் திறந்தவெளியில் பிப்ரவரி 20 முதல் ஏப்ரல் 9 வரை நடைபெற்று வருகிறது.

கம்போங் சாய் சீயில் முதன்முறையாக நடக்கும் இந்த ரமலான் சந்தையின் அலங்கரிப்பு விளக்குகளின் ஒரு பகுதி, சூரிய மின்னாற்றலால் இயங்குகிறது.
கம்போங் சாய் சீயில் முதன்முறையாக நடக்கும் இந்த ரமலான் சந்தையின் அலங்கரிப்பு விளக்குகளின் ஒரு பகுதி, சூரிய மின்னாற்றலால் இயங்குகிறது. - படம்: ரவி சிங்காரம்

சூரிய மின்னாற்றலால் இயங்கும் அலங்கார விளக்குகள், சுற்றிலும் மறுசுழற்சித் தொட்டிகள், மண்ணைப் பயன்படுத்தாமல் வளரக்கூடிய செடிகள், நீடித்த நிலைத்தன்மை சார்ந்த பயிலரங்குகள் போன்ற அங்கங்களால் இச்சந்தை ‘இகோ-ஹார்மனி விழா’ என்று அழைக்கப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை மார்ச் 10ஆம் தேதி நடந்த அதன் அதிகாரத்துவ திறப்பு விழாவில், வசதிகுறைந்த 1,000 குடும்பங்களுக்கு உணவு நன்கொடை வழங்கும் முயற்சியும் தொடங்கி வைக்கப்பட்டது.

‘ஃபெஸ்டிவ் கேர் 2024’ எனும் இம்முயற்சியை ‘ஆரஞ்சுடீ’ சொத்து நிறுவனம், ‘ரோசஸ் ஆஃப் பீஸ்’, ‘ரே ஆஃப் ஹோப்’ அமைப்புகளுடன் இணைந்து வழங்குகிறது.

அதன் தொடக்கமாக, ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் வாழும் வசதிகுறைந்த குடும்பங்களுக்கு அரிசி, நூடல்ஸ், நெஸ்டம், மீ சியாம், தேங்காய்ப் பால் போன்றவை அடங்கிய 50 பராமரிப்புப் பைகளும் அரிசி வாளிகளும் வழங்கப்பட்டன.

சிறப்பு விருந்தினராக தேசிய வளர்ச்சி மற்றும் தொடர்பு, தகவல் அமைச்சுகளின் மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ் கலந்துகொண்டார்.

‘காஸ்வே பாயிண்ட்’ அருகே உள்ள ரமலான் சந்தையிலும் இந்த நன்கொடை நடைபெற்றது. வசதிகுறைந்தோருக்கு 50 பராமரிப்புப் பைகளை வழங்கினார் தற்காப்பு, மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகமது.

ரமலான் நேரத்தில் இந்த நன்கொடை எங்களுக்கு பேருதவியாக இருக்கிறது. இது இல்லாவிட்டால் உண்மையிலேயே சற்று கடினமாகத்தான் இருந்திருக்கும்.
இரு பிள்ளைகளை வளர்க்கும் ‘ஃபெஸ்டிவ் கேர் 2024’ பயனாளி மைமூன் ஷாரா.

“பொருள் சேவை வரி கூடியிருப்பதால் இரு பிள்ளைகளை வளர்ப்பது கடினமாக இருக்கிறது. அவர்களது உணவு, சுகாதாரப் பொருள்கள், ஆகியவற்றுக்கு நிறைய செலவாகிறது. அதனால் இம்முயற்சி வரவேற்கத்தக்கது,” என பாராட்டினார் பயனாளிகளில் ஒருவரான மைமூன் ஷாரா.

மார்ச் 31 வரை https://rayofhope.sg/campaign/festivecare2024 இணையத்தளம்வழி நிதித் திரட்டு நடைபெறுகிறது.

“நன்கொடை வர வர நாங்கள் பராமரிப்புப் பைகளையும் அரிசியையும் வசதிகுறைந்த குடும்பங்களுக்கு விநியோகிப்போம்,” என்றார் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அப்துல் ரெஜாக், 38.

“இந்த நிதித் திரட்டு, இனம், சமய வேறுபாடுகளையும் தாண்டி சிங்கப்பூர் முழுவதும் வசதிகுறைந்தோரைச் சென்றடையும்,” என்றார் ‘ஆரஞ்சுடீ’ தலைமை நிர்வாகி ஜஸ்டின் குவெக்.

இம்முயற்சியை ‘ஆரஞ்சுடீ’ முகவர்கள் 2019ல் தொடங்கினர். 2022 முதல் ‘ஆரஞ்சுடீ’, நிறுவன அளவில் துணைபுரிந்து வருகிறது. 2022ல் ‘ரோசஸ் ஆஃப் பீஸ்’ இயக்கமும் 2023ல் ‘ரே ஆஃப் ஹோப்’ அறநிறுவனமும் இணைந்தன.

 ‘ஃபெஸ்டிவ் கேர் 2024’ ஏற்பாட்டுக் குழுவினருடன் மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ் (நடுவில்).
‘ஃபெஸ்டிவ் கேர் 2024’ ஏற்பாட்டுக் குழுவினருடன் மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ் (நடுவில்). - படம்: ரவி சிங்காரம்
குறிப்புச் சொற்கள்