தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இதயநோய், பக்கவாதம்: தடுக்கும் எட்டு வழிமுறைகள்

2 mins read
346ba593-eaf5-4165-abd9-d92154b4ba46
மாரடைப்பு, பக்கவாதம் ஆகிய நோய்களைத் தடுக்க பரிந்துரைக்கப்படும் எட்டு வழிமுறைகள். - படம்: லாவண்யா வீரராகவன்

கடந்த 2022ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் மூன்றில் ஒரு மரணத்துக்கு, இதயநோய் அல்லது பக்கவாதம் காரணமாக இருந்தது. மூத்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இந்நோய்களின் பாதிப்பு வரும் ஆண்டுகளில் இன்னும் அதிகரிக்கலாம் என கணிக்கப்படுகிறது.

சிங்கப்பூர் இதய அறநிறுவனம், ‘சிங்கப்பூர் கார்டியாக் சொசைட்டி’, சிங்கப்பூர் மருத்துவக் கழகம் (அகாடமி ஆஃப் மெடிசன், சிங்கப்பூர்) ஆகிய அமைப்புகள் இணைந்து இந்நோய்களின் பாதிப்புகளைக் குறைப்பதற்கான உத்திகள், அணுகுமுறைகள் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளன.

மூன்று முக்கிய அணுகுமுறைகள்

முதலாவதாக, இவ்வகை நோய்களுக்கு முக்கிய அபாயக் கூறுகளாக இருக்கும் உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் சீரற்ற கொழுப்பு அளவால் ஏற்படும் டிஸ்லிபிடேமியா, நீரிழிவு, உடற்பருமன், புகைபிடித்தல் ஆகியவற்றை சமாளிப்பதற்கான அணுகுமுறை குறித்து மருத்துவர்களுக்கு வழிகாட்டுதல் உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவதாக, சுகாதார வல்லுநர்கள், சமூகப் பங்காளிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பின் மூலம் மேற்கண்ட ஐந்து காரணிகளைக் கட்டுப்படுத்தும் எட்டு வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, இதயநோய், அதற்கான சிகிச்சை பற்றிய கட்டுக்கதைகள், தவறான செய்திகள் குறித்த தெளிவும் ஏற்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இறுதியாக, சிகிச்சைக்குப் பிறகு மறுவாழ்வு, ஊட்டச்சத்து ஆலோசனை, புகையிலை உள்ளிட்ட பழக்கங்களைக் கைவிடுதல் ஆகிவற்றுக்கான ஆதரவும் இதயநோய் குறித்த ஆய்வுகளுக்கு தகவல் தொழில்நுட்பத்தைச் சரிவர பயன்படுத்துவதற்கும் ஆதரவளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார வல்லுநர்கள், நிபுணர்கள், சமூகப் பங்காளிகள் என அனைவரின் ஒருங்கிணைந்த முயற்சி மூலம் இவ்வகை நோய்களைத் தடுப்பதே இந்த அறிக்கையின் நோக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாரடைப்பு, பக்கவாதம் ஆகிய நோய்களைத் தடுக்க பரிந்துரைக்கப்படும் எட்டு வழிமுறைகள்

1. ஆழ்ந்த, நல்ல உறக்கம்;

2. வாரத்துக்கு 150 நிமிட உடற்பயிற்சி;

3. ஊட்டச்சத்து நிறைந்த உணவுமுறை;

4. புகை, மின் சுருட்டு, புகையிலை சார்த்த பழக்கங்களைக் கைவிடுதல்;

5. உடற்பருமனைக் குறைத்து, உடல் எடைக் குறியீட்டை (பிஎம்ஐ), 23.5க்கு மிகாமல் பார்த்துக்கொள்வது;

6. ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பது;

7. ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகமாகாமல் பார்த்துக்கொள்வது;

8. ரத்தத்தில் கொழுப்பின் அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பது.

குறிப்புச் சொற்கள்