தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழ் கற்றலுக்குச் சவால் விடுக்கும் ‘இரட்டை வழக்கு’: தீர்வுகாண முயற்சி

4 mins read
776412a3-3a6a-46a8-9eb2-448f9bae5cc7
மடிக்கணினிவழி மொழி கற்கும் மாணவர்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தமிழ் மொழியில் பேச்சு வடிவத்திற்கும் எழுத்து வடிவத்திற்கும் இடையே உள்ள பெரும் இடைவெளி, பேச்சுத்தமிழ் புழக்கத்தில் இல்லாத சூழலில் வளரும் சிங்கப்பூர்ப் பிள்ளைகள் தமிழ் கற்க பெரும் சவாலாக விளங்குகிறது.

தமிழை முதல் மொழியாகக் கொண்ட அல்லது தமிழை இயல்பாகப் பேசும் குடும்பங்களிலும் சமுதாயங்களிலும் வளர்பவர்கள், இந்தச் சவாலை உணர்வதில்லை.

இவர்களில் சிலர், தமிழில் பேசிப் பழகுபவர்களின் இயல்பான பேச்சில் தவறு கண்டுபிடித்து அவர்களது மொழியார்வத்தைக் குறைக்கவும் செய்கின்றனர்.

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் ஆங்கில, மொழியியல் இணைப் பேராசிரியர் சித்ரா சங்கரன், வளர்தமிழ் இயக்கம் பிப்ரவரி 17 நடத்திய சமூக கருத்தரங்கில் தமது ஆய்வுக்கட்டுரையைப் பகிர்ந்தபோது இவற்றைக் கூறினார்.

இரட்டை வழக்கும் கற்றலும்

‘டைக்லாசியா’ (diglossia) எனப்படும் இரட்டை வழக்கு, கிரேக்கம் போன்ற ஒருசில தொன்மையான மொழிகளுக்கு உள்ளன.

அத்தகைய மொழிகளின் எழுத்து அல்லது இலக்கியம் சார்ந்த வடிவம், இலக்கண கோட்பாடுகளுக்கு எப்போதும் உட்பட்டுள்ளது. ஆனால், பேச்சுமொழி பல தருணங்களில் இலக்கணத்திற்குள் உட்படுவதில்லை.

மொழிகள் தோன்றும்போது இல்லாத இந்தப் பிளவு, காலப்போக்கில் ஏற்பட்டுள்ளது. சான்றாக, கிரேக்க சமூகத்தில் தூய கிரேக்க மொழி ‘கதாரெவோஸா’ என்றும் பொதுமக்கள் அன்றாடம் பேசும் கிரேக்கம் ‘டிமோடிக்’ என்றும் அழைக்கப்படுகின்றன.

1959ல் ‘டைக்லாசியா’ என்ற கருத்துப்படிவத்தை உருவாக்கிய சார்ல்ஸ் ஃபெர்கசன் என்ற மொழியியல் நிபுணர், எழுத்து வழக்கை உயர் வழக்காகவும் பொதுவான பேச்சு வழக்கை தாழ்ந்த வழக்காகவும் வகைப்படுத்தினார்.

மொழி வழக்குகளை உயர்வுதாழ்வு என வகைப்படுத்த விரும்பாத தற்கால மொழியியல் நிபுணர்கள், மொழியின் தூய, செம்மையான வழக்கை ‘எச்’ (High) வழக்காகவும் அன்றாடப் பேச்சு வழக்கை ‘எல்’ (Low) வழக்காகவும் வகைப்படுத்துகின்றனர்.

‘எல்’ வழக்கு, வட்டார வழக்கிலிருந்து மாறுபட்டது. எடுத்துக்காட்டாக, சிங்கப்பூரில் ‘ஆமாவா’ என்றும் தமிழகத்தில் ‘அப்படியா’ என்றும் பயன்படுத்தக் கேட்டிருப்போம். வட்டார வழக்கில் பேசும் சமூகங்கள், பேச்சு வழக்கை மொழி இயல்பாகவும் எழுத்து மொழியைத் தரநிலைப்படுத்தப்பட்ட மொழியாகவும் கருதுவர்.

தவறு எனத் தடை விதித்தல்

தலைமுறைக்குத் தலைமுறை பேச்சுத்தமிழ் மாறுபடலாம். அதனால், பிற மொழிச் சொற்களின் தாக்கத்திற்கு அது உள்ளாகிறது.

தமிழ் பேசும் குடியேறிகள் சிங்கப்பூருக்கு வெவ்வேறு காலகட்டங்களில் வரும்போது, அவர்கள் தமிழ் பேசும் விதமும் இந்நாட்டில் குடிகொள்கின்றன. எனவே, சிங்கப்பூரில் பேச்சுத்தமிழ் மாறிக்கொண்டே வருகிறது.

தமிழைச் சரளமாகப் பேசக்கூடியவர்கள், எளிதில் தங்கள் பேச்சை ‘எச்’ (H) வழக்கிற்கும் ‘எல்’ (L) வழக்கிற்கும் இடையே மாற்றிக்கொள்வார்கள். மொழியியலில் இதற்குப் பெயர் ‘கோட் சுவிட்சிங்’ (code-switching). தூய தமிழ் பேசும் மேடைப் பேச்சாளர்கள், இடையிடையே மனத்தில் எழும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் கருவியாகப் பேச்சுத் தமிழை நாடுவர்.

இதற்கு மாறாக, ஒரு மொழியைக் கற்று வருபவர், இடையிடையே வேற்றுமொழிச் சொற்களைச் செருகும் போக்கு ‘டிரான்ஸ்லாங்குவேஜிங்’ (translanguaging) என்று அழைக்கப்படுகிறது. தடையில்லாமல் ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள இது ஒரு படிநிலை என்பதால் தவறு எனத் தடைசெய்ய வேண்டாம் என்று இணைப் பேராசிரியர் சித்ரா கருத்தரங்கின்போது கூறினார். “குற்றம் சொல்லித் தடை செய்தால் கற்றுக்கொள்ளும் ஆர்வம் குறையலாம்,” என்று அவர் கூறினார்.

தீர்வு எளிதன்று

எழுத்துத் தமிழைக் கற்பிப்பதுடன் தமிழ் ஆசிரியர்கள் வகுப்பறையில் தமிழ் பேச மாணவர்களை ஊக்குவிக்கின்றனர்.

ஆயினும், பேச்சுத் தமிழைப் பழக ஒருவருக்குத் தமிழ், எல்லா இடங்களிலும் காதில் ஒலிக்கவேண்டும்.

“மொழிமுழுக்கு (immersiveness) எனக் குறிப்பிடும் மொழிப் பயன்பாட்டு அனுபவம், சிங்கப்பூரில் தமிழ் கற்பவர்கள் அனைவருக்கும் கிடைக்குமா என்பது பெரும் கேள்விக்குறி. ஒரு நாளில் சிறிது நேரத்திற்குப் பேசுவது போதாது என்பது ஆய்வாளர்களின் கருத்து,” என்றார் டாக்டர் சித்ரா.

“தமிழைத் தொடர்ந்து பேசுவதற்கான அகலமான, விரிவான சூழல் இல்லாவிடில் அது பேச்சுமொழியாக இங்கு மறையக்கூடிய வாய்ப்பு உள்ளது,” என்று குறிப்பிட்ட டாக்டர் சித்ரா, “மாணவர்களுக்கு மொழிமுழுக்கை ஏற்படுத்தும் வழி என்ன என்பதும் மிகப் பெரிய கேள்வி,” என்றார்.

ஆராயும் கலந்துரையாடல்

தமிழ் முரசின் ‘காப்பிக் கடை’ கலந்துரையாடலில் பங்கேற்ற (இடமிருந்து) ராஃபிள்ஸ் கல்வி நிலைய மூத்த தமிழாசிரியர் எஸ்.ஜகதீசன், அதிபதி நாடகக்குழுவின் கலை இயக்குநர் புகழேந்தி, தமிழ் முரசு உதவி ஆசிரியர் ஆசிரியர் கலைச்செல்வி வைத்தியநாதன், இணைப் பேராசிரியர் சித்ரா சங்கரன்.
தமிழ் முரசின் ‘காப்பிக் கடை’ கலந்துரையாடலில் பங்கேற்ற (இடமிருந்து) ராஃபிள்ஸ் கல்வி நிலைய மூத்த தமிழாசிரியர் எஸ்.ஜகதீசன், அதிபதி நாடகக்குழுவின் கலை இயக்குநர் புகழேந்தி, தமிழ் முரசு உதவி ஆசிரியர் ஆசிரியர் கலைச்செல்வி வைத்தியநாதன், இணைப் பேராசிரியர் சித்ரா சங்கரன். - படம்: பே.கார்த்திகேயன்

பிரிட்டனில் பிரெஞ்சு மொழியை இரண்டாவது மொழியாகக் கற்கும் மாணவர்கள், தங்கள் பள்ளிகளின் ஏற்பாட்டில் பிரான்சுக்கு சென்று ஏறத்தாழ இரண்டு மாதம் நீடிக்கும் விடுமுறை காலத்தின்போது அங்கு பிரெஞ்சு மொழியைத் தொடர்ந்து புழங்குவர். இதனால், அவர்களின் மொழியாற்றல் கணிசமாக மேம்படுகிறது.

இதுபோன்ற ஒரு தீர்வு, பேச்சுத்தமிழை மேம்படுத்துவதற்குத் தேவைப்படுவதாக இணைப் பேராசிரியர் சித்ரா சங்கரன், தமிழ் முரசின் அண்மைய ‘காப்பிக் கடை’ கலந்துரையாடலின்போது கூறினார்.

இணைப் பேராசிரியர் சித்ராவுடன், ராஃபிள்ஸ் கல்வி நிலையத்தின் மூத்த தமிழாசிரியர் எஸ்.ஜகதீசன், அதிபதி நாடகக்குழுவின் கலை இயக்குநர் புகழேந்தி ஆகியோர் கலந்துரையாடலில் இணைந்தனர்.

ஆர்வமின்மையால் அல்லது மொழிப்பற்று இல்லாததால் சிங்கப்பூரர்கள் சரளமாகப் பேசுவதில்லை என்ற மனப்போக்கு சரியன்று என இம்மூவரும் ஒருமித்த கருத்தைக் கூறினர்.

தமிழ் முரசு உதவி ஆசிரியர் கலைச்செல்வி வைத்தியநாதன் வழிநடத்திய இக்கலந்துரையாடலில், பேச்சுத்தமிழில் பேசும் வாய்ப்பு இளையர்களுக்கும் பெரியவர்களுக்கும் குறைகிறது என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.

சிங்கப்பூரில் தற்போது இந்தியர்கள் பல்வேறு குடியிருப்புப் பகுதிகளில் பல்வேறு இனத்தவருடன் கலந்து வாழ்வதாலும் அண்டைவீடுகளிலிருந்து பலருக்குத் தமிழ் ஒலிப்பதில்லை.

முந்தைய காலங்களில் சிங்கப்பூரில் தமிழை முதல் மொழியாகப் பேசிய தலைமுறையினர் மறைய, ஆங்கிலத்தில் பெரும்பாலும் பேசும் தற்போதைய ‘பேபி பூமர்’ தலைமுறையைச் சேர்ந்த சிங்கப்பூரர்கள் பலர் தாத்தா பாட்டிகள் ஆகிவிட்டனர்.

அவர்களுமே பேரப்பிள்ளைகளிடம் ஆங்கிலத்தில் பேசுவது தற்போதைய நிலை என்று இணைப் பேராசிரியர் சித்ரா சுட்டினார்.

ஏட்டுக்கல்வியைக் தாண்டி இசை, கைவினை போன்ற மற்றக் கூறுகளைப் பயன்படுத்துவதன்மூலம் பேச்சுத்தமிழ் புழங்கும் மாணவர்களிடையே தமிழ் வளர்வதாக திரு ஜகதீசன் கூறினார்.

நாடகத்தின்மூலம் மாணவர்கள் வகுப்பறைகளுக்கு வெளியே மொழியை உல்லாசமாகப் பயன்படுத்தும் வாய்ப்பைப் பெறுவதாகத் திரு புகழேந்தி குறிப்பிட்டார். நாடகச்சூழலில் மொழிமுழுக்கு ஓரளவுக்கு நடைபெறுகிறது என்று சொல்லலாம் என்றார் திரு புகழேந்தி.

பேச்சுத்தமிழ் மட்டும் ஒலிக்கக்கூடிய மெய்நிகர் உலகத்தை உருவாக்கி அதற்குள் மாணவர்களை ஆழ்த்துவது, அவர்களைத் தமிழ் பேசும் ஊரில் தங்க வைப்பதற்கு நிகரான அனுபவத்தைத் தரக்கூடும் என்று திருவாட்டி கலைச்செல்வி முன்வைத்த யோசனை ஏற்கக்கூடியது என்று இணைப் பேராசிரியர் சித்ரா கூறினார்.

குறிப்புச் சொற்கள்