தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

3,000 இஃப்தார் உணவுகளை வழங்கிய ஸாக் சலாம்

2 mins read
2fe3693d-2a52-4467-a926-40d0eba38f79
மார்ச் 29ஆம் தேதி 1,000 பேரும், மார்ச் 30ஆம் தேதி 2,000 பேரும் ஒன்றாக நோன்பு துறக்க ஸாக் சலாம் உணவு வழங்கி, ஏற்பாடு செய்தது. - படம்: ரவி சிங்காரம்
multi-img1 of 5

ரமலான், தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு அங்கங்களோடு மார்ச் 28 முதல் 31 வரை சிங்கப்பூர் எக்ஸ்போவில் நடைபெற்றது 35வது ஸாக் சலாம் 2024 மாபெரும் ஆடை, அணிகலன் காட்சி.

“முந்தைய ஆண்டுகளில் ஒரு நாள்தான் நோன்பு துறக்கும் நிகழ்ச்சியை நடத்தினோம். இவ்வாண்டு இரு நாள்கள் - மார்ச் 29, 30 - நோன்பு துறப்புக்கு ஏற்பாடு செய்தோம்,” என்றார் நிகழ்ச்சி மேலாளர் முகமது ரிஸ்வான்.

மார்ச் 29ஆம் தேதி 1,000 பேரும், மார்ச் 30ஆம் தேதி 2,000 பேரும் ஒன்றாக நோன்பு துறக்க உணவு வழங்கப்பட்டது.

தமிழ்மொழி விழாவையொட்டி, சிறுவர்களுக்கான கவிதைப் போட்டியும் மூன்று பிரிவுகளாக நடைபெற்றது.

கைப்பையை வடிவமைத்தல், ஸாக் ஃபேஷன் பந்தயம், மாறுவேடப் போட்டி, சமையல் நிபுணர் அரிஃபின் பயிலரங்கு போன்றவையும் இடம்பெற்றன.

விஜய் தொலைக்காட்சிப் புகழ் அறந்தாங்கி நிஷாவைக் காண திரண்ட கூட்டம்.
விஜய் தொலைக்காட்சிப் புகழ் அறந்தாங்கி நிஷாவைக் காண திரண்ட கூட்டம். - படம்: ரவி சிங்காரம்

தமிழ்நாட்டின் பட்டிமன்றப் பேச்சாளர் மோகனசுந்தரமும் ‘ரியாலிட்டி ஷோ’ பிரபலம் அறந்தாங்கி நிஷாவும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரை வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தனர்.

வடஇந்திய ஆடைகளின் ஈர்ப்பு

வட இந்திய உடைகளை நாடி மக்கள் பலரும் ஸாக் சலாமிற்கு வருகின்றனர்.
வட இந்திய உடைகளை நாடி மக்கள் பலரும் ஸாக் சலாமிற்கு வருகின்றனர். - படம்: ரவி சிங்காரம்

கடந்த பத்தாண்டுகளாக வட இந்திய ஆடை வகைகளுக்காக ஸாக் சலாம் கண்காட்சிக்கு வந்துள்ளனர் வைதீகா-கார்த்திகேயன் தம்பதியினர்.

தேக்காவில் கிடைக்காத வடஇந்திய உடைகளும் இங்கு கிடைப்பதாகக் கருதும் தம்பதியினர், நகைகளிலும் தம் மகள்களுக்கான உடைகளிலும் 500 வெள்ளி செலவிட்டனர்.

ஆண்களுக்கான ஆடை அணிகலன்களில் பஞ்சம்

ஸாக் சலாமில் ஆண்களுக்கான பாரம்பரிய உடைகள், வார்க்கச்சை, பணப்பைகள் அவ்வளவாக இல்லாததாக வருத்தப்பட்டார் ராமசாமி கார்த்திகேயன், 43.

“முன்பெல்லாம் அணிவதற்கு வசதியான கோலாபுரி செருப்புகள்கூட ஸாக் சலாமில் கிடைத்தன. ஆனால் இப்போது மிருகத் தோலால் செய்யப்பட்டவை ஒன்றும் தென்படவில்லை. அப்படி இருந்திருந்தால் என் நண்பர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுத்து மகிழ்ந்திருப்பேன்,” என்றும் அவர் கூறினார்.

கூடுதல் வகையான கடைகள் தேவை

“எதிர்காலத்தில் இந்திய சொத்துச் சந்தை, தொழில்நுட்பம், கல்வி போன்ற நிறுவனங்களையும் ஸாக் சலாம் 2024 காட்சிப்படுத்தினால் நன்றாக இருக்கும்,” என்றார் 50 வயது சத்யா ஹரி.

கடைசி நிமிடத்தில் வந்ததால் சலுகைகள்

இஃப்தார் முடித்து வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு ஸாக் சலாம் வந்த 40 வயது சஃபானா பீவிக்கு நல்ல சலுகைகள் கிடைத்தன. 80 வெள்ளி உடைக்கு அவருக்கு 20 வெள்ளி ‘கேஷ்பேக்’ கிடைத்தது.

தொலைதூரப் பயணம்; பணங்கட்ட சிரமம்

உட்லண்ட்சிலிருந்து ஸாக் சலாமிற்கு வந்த மோஹனதாஸ், 70, தான் வாங்கிய பொருள்களுக்கு இணையவழி பணங்கட்ட முயன்றபோது இணையம் வேலை செய்யவில்லை. எக்ஸ்போவில் உள்ள இலவச வை-ஃபைப் பற்றியும் அவர்கள் அறியவில்லை. தானியங்கி வங்கிக்காகத் தேடித் தேடி அலையவேண்டியிருந்தது என்றார்.

குறிப்புச் சொற்கள்