‘ஆந்தை’ தமிழ்த் திரைப்படத்தில் பத்துப் பணிகளைச் செய்த சிங்கப்பூர் எழுத்தாளர்

1 mins read
ffcecb7b-e1c7-42fa-a36b-ba77c50f8ba0
புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமியைச் சந்தித்து வாழ்த்து பெற்றதை மறக்க முடியாத அனுபவமாகக் குறிப்பிட்டார் மில்லத் அகமது. - செய்தி, படம்: மில்லத் அகமது
multi-img1 of 4

அண்மையில் தமிழகத் திரையரங்குகளில் வெளியீடு கண்ட ‘ஆந்தை’ என்ற தமிழ்ப் படத்தில் கதை, திரைக்கதை, வசனம் உள்ளிட்ட பத்து பணிகளைச் செய்து சாதனை படைத்துள்ளார் சிங்கப்பூர் எழுத்தாளர் மில்லத் அகமது. 

இவ்வாண்டு பிப்ரவரி 16ஆம் தேதி வெளியிடப்பட்ட இப்படத்தில் இவர் நடிப்பு, கதை, திரைக்கதை, வசனம், பாடல், பாடலுக்குக் குரல், பின்னணிக் குரல், நடனம், தயாரிப்பு, இணை இயக்கம் என மொத்தம் பத்துப் பணிகளை மேற்கொண்டிருந்தார். 

தமிழ்த் திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக முதல் படத்திலேயே பத்துத் துறைகள் சார்ந்த பணிகளைச் செய்த இவர், லண்டன் உலகச் சாதனைப் புத்தகத்தாலும் இந்திய உலகச் சாதனைப் புத்தகத்தாலும் அங்கீகரிக்கப்பட்டு உலகச் சாதனையாளர் சான்றிதழ் பெற்றிருக்கிறார். மேலும், இவர் 2021ஆம் ஆண்டு ஐந்து சொற்களில் சிறுகதை எழுதி உலகச் சாதனை படைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

“படத்தைத் தொடங்கியபோது கதை, திரைக்கதை, வசனம் உள்ளிட்ட ஐந்து துறைகளில் மட்டுமே ஈடுபடத் திட்டமிட்டிருந்தேன். பின்னர், படம் மீது இருந்த ஆர்வத்தாலும் சூழ்நிலை காரணமாகவும் மொத்தம் பத்துத் துறைகள் சார்ந்த பணிகளைச் செய்தேன். மனத்திற்கு மிகவும் நிறைவாக இருந்தது,” என்று கூறினார் திரு மில்லத்.  

மேலும், புதுச்சேரி மாநிலத்தைச் சார்ந்த இவர், இத்திரைப்படம் வெளியிடப்படுவதற்கு முன் புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமியைச் சந்தித்து வாழ்த்து பெற்றதை மறக்க முடியாத  ஓர் அனுபவமாகக் குறிப்பிட்டார்.

இப்படத்தில் கதாநாயகனாக விகாஸ், கதாநாயகியாக யாழினி, பயில்வான் ரங்கநாதன், மதன்பாப் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்