சிங்கப்பூர்ச் சிறுகதை நூற்றாண்டு: ஆர்வலர்களின் கலந்துரையாடல்

1 mins read
11b5860a-b1c0-48cd-bfea-7cd372fb50b1
மத்திய பொது நூலகத்தில் ஏப்ரல் 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ள ‘சிங்கப்பூர்ச் சிறுகதை நூற்றாண்டு (1924 - 2024): ஒரு வரலாற்றுப் பார்வை’ நிகழ்ச்சி. - படம்: தேசிய நூலக வாரியம்

ஏப்ரல் 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை மத்திய பொது நூலகத்தில் ‘சிங்கப்பூர்ச் சிறுகதை நூற்றாண்டு (1924-2024): ஒரு வரலாற்றுப் பார்வை’ எனும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

தமிழ்மொழி விழா நிகழ்ச்சிகளில் ஒன்றாக தேசிய நூலக வாரியம் அதற்கு ஏற்பாடு செய்துள்ளது.

சிங்கப்பூர்ச் சிறுகதை ஆர்வலரும் ஆய்வாளருமான சிவானந்தம் நீலகண்டன் ஆய்வுரை ஆற்றுவார். அதைத் தொடர்ந்து கலந்துரையாடலும் நடைபெறும்.

கலந்துரையாடலில், தி சிராங்கூன் டைம்ஸ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும் எழுத்தாளருமான ஷாநவாஸ், கல்வியாளரும் ‘சிங்கப்பூர்ச் சிறுகதைக்கொத்து’ நூலின் பதிப்பாசிரியருமான முனைவர் ஆ.ரா.சிவகுமாரன், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்க் கழகம் நடத்திவரும் கதைக்களத்தின் முதல் அமைப்பாளரும் எழுத்தாளருமான இராம வயிரவன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

“‘பாவத்தின் சம்பளம் மரணம்’ என்ற தலைப்பில் 1924இல் பொதுஜன மித்திரன் இதழில் வெளியான கதையே சிங்கப்பூரின் முதல் தமிழ்ச் சிறுகதை என்ற தம் ஆய்வு முடிவை பாலபாஸ்கரன் 2009இல் வெளியிட்டார்.

“முதல் சிறுகதை பிறந்தபோது இருந்த சிங்கப்பூரின் இதழியல் சூழல், அதற்குப்பின் சிறுகதை வளர்ச்சிபெற்ற விதம், அண்மைய 25 ஆண்டுகளில் சிங்கப்பூர்ச் சிறுகதை அடைந்திருக்கும் மாற்றங்கள் போன்ற அம்சங்கள் இந்நிகழ்ச்சியில் வரலாற்று நோக்கில் ஆராயப்படவுள்ளன,” என்கிறார் ஆய்வாளர் சிவானந்தம்.

தமிழ் மாணவர்கள், ஆசிரியர்கள், இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் பங்கேற்றுப் பயன்பெறலாம். அனுமதி இலவசம். முன்பதிவு தேவையில்லை.

குறிப்புச் சொற்கள்