தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பயண நேரத்தைப் பயனுள்ளதாக்கும் வழிகள்

2 mins read
71a49d98-79ec-49df-ac73-cabcc12aef63
எம்ஆர்டியில் மின்னிலக்கக் கருவிகளில் மூழ்கியிருக்கும் பொதுமக்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் வசிக்கும் பலரும் பணியிடங்களுக்குச் செல்ல பேருந்து, எம்ஆர்டி உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து முறைகளில் குறிப்பிடத்தக்க அளவு நேரத்தைச் செலவிடுகின்றனர்.

பயண நேரத்தைச் செலவிடுவது குறித்து ஒவ்வொருவருக்கும் வேறுபட்ட கருத்துகள் இருப்பதைக் காண முடிகிறது.

வேலைக்குச் செல்லும்போது பாடல்கள் கேட்பது, சமூக ஊடகங்களில் நேரம் செலவிடுவது போன்றவற்றில் ஈடுபடும் தனியார் நிர்வாகப் பிரிவில் பணியாற்றும் மிதிலா தேவி, 28, பயண நேரத்திலும் உற்பத்தித் திறனோடு செயல்படுவது அவசியமில்லை எனக் கருதுகிறார்.

நாளொன்றுக்கு ஒரு மணி நேரத்துக்கு மேல் பயணிக்கும் குமரன், 42, நண்பர்களுடன் உரையாடுவது, ஐபேட் சாதனம் கொண்டு வேலை செய்வது ஆகியவற்றுக்காக பயண நேரத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்.

பயண நேரம் ஒரு மணி நேரத்துக்கும் கூடுதலாக இருந்தால், புத்தகம் படிப்பது வழக்கம் எனச் சொல்லும் சினேகல், 43, சமூக ஊடகங்களில் நேரம் செலவிட்டு, தேவையற்ற செய்திகளை நுகர்வதை விட, புத்தகம் படிப்பது மனதுக்கு நல்லது எனக் கருதுகிறார்.

பொதுவாக பயண நேரத்தில் எவ்வித மின்னிலக்கக் கருவிகளையும் உபயோகிப்பதில்லை எனச் சொல்லும் ராஷ்மி ஸ்ரீதர், பேருந்தில் இருக்கும் மக்களையும் சன்னல் வழி சாலைக் காட்சிகளையும் வேடிக்கைப் பார்ப்பதும், அருகில் அமர்ந்திருப்பவர் தோழமையாகப் பேசினால், அவருடன் உரையாடுவதும் வழக்கம் என்கிறார்.

இவை தவிர பொதுவாக பலரும் குறுந்தொடர்கள் காண்பது, மின்னிலக்கக் கருவிகள் கொண்டு படிப்பது, இணைய விளையாட்டுகள் விளையாடுவது ஆகியவற்றைக் காணலாம்.

பணிக்கு நேரத்தோடு செல்லவேண்டும் எனும் பதற்றம், காலை நேரக் காத்திருப்பு நேரம், கூட்ட நெரிசல் தரும் எரிச்சல் ஆகியவை நாளடைவில் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்துவதோடு, பல உடல்நலக் கோளாறுகளையும் உண்டாக்கலாம் என்கின்றன ஆய்வுகள்.

பயண நேரத்தில், மன அமைதி தரும் செயல்களிலும், மூளையின் செயல்பாடுகளைச் சீராக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவது சிறந்தது என்கின்றனர் நிபுணர்கள்.

பயண நேரத்தில் கடைப்பிடிக்க சிறந்த பழக்கங்கள்

‘மைண்ட்ஃபுல்னஸ்’ - மனதை ஒருநிலைப்படுத்தவல்ல பயிற்சி இது. இயற்கையை உன்னிப்பாகக் கவனிப்பது, கவனிக்காத புதிய 5 விஷயங்களை அன்றாடம் கவனிக்க முயல்வது, அன்றாடக் காட்சிகளை விவரித்து எழுதுவது ஆகியவற்றைக் கடைப்பிடிக்க முயல்வது சிறந்தது.

அன்றைய நாளில் செய்ய வேண்டியவற்றைத் திட்டமிடலாம். நண்பர்களுடன் உரையாடலாம்.

சுடோக்கு, குறுக்கெழுத்து உள்ளிட்ட புதிர்களைச் செய்யலாம்.

நிபுணர்களின் உரைகளையும், ஆக்கபூர்வமான தகவல்கள் கொண்ட வளையொலிகளையும் கேட்கலாம்.

மனதுக்கு இதம் தரும் வகையிலான இசை, ஒலி வடிவில் வரும் புத்தகம் ஆகியவற்றைக் கேட்கலாம்.

குறிப்புச் சொற்கள்