40 ஆண்டுகளுக்குமேல் உழைத்த மூத்த ஊடகவியலாளருக்குப் பாராட்டு

செ.ப.பன்னீர்செல்வத்திற்கு கவிமாலையின் ‘கணையாழி’ விருது

சிங்கப்பூர் வானொலி மற்றும் தொலைக்காட்சியில் செய்தியாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் 40 ஆண்டுகளுக்குமேல் பணியாற்றிய புகழ்பெற்ற தமிழ் ஆளுமை செ.ப.பன்னீர்செல்வத்திற்கு கவிமாலை அமைப்பின் ‘கணையாழி’ விருது வழங்கி கௌர­விக்கப்பட்டுள்ளது.

உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 28) நடைபெற்ற தமிழ்­மொழி விழா­வின் நிறைவு நிகழ்ச்­சி­யான கவி­மாலையின் ‘கவியாற்றல் 2.0’ நிகழ்ச்சியில் அவ­ர் எட்டு கிராம் தங்க மோதிரத்தைப் பரிசாகப் பெற்றார்.

சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியத்திற்குப் பெரும் பங்கு அளித்துவரும் இலக்கியச் சான்றோருக்கு 2003லிருந்து ஆண்டுதோறும் கவிமாலை அமைப்பு கணையாழி விருதை அளித்து வருகிறது.

1948ல் நாகை மாவட்டத்திலுள்ள முட்டம் என்ற சிற்றூரில் பிறந்து சிறு வயதில் சிங்கப்பூருக்குப் புலம்பெயர்ந்த திரு பன்னீர்செல்வம், புக்கிட் பாஞ்சாங் வட்டாரத்தில் வளர்ந்து தொடக்கநிலை, உயர்நிலைக் கல்வியை முடித்தார்.

லிங்கன் பல்கலைக்கழத்தில் நிர்வாகப் பட்டப்படிப்பையும் அமெரிக்காவின் ஓக்லஹோமா மாநிலத்தில் தொடர்புத் துறையில் பட்டயமும் பெற்ற திரு பன்னீர்செல்வம், தமிழ்த் துறையில் முதுகலை மற்றும் ஆய்வு நிறைஞர் கல்வியைப் பயின்றார்.

இளம் வயதில் திரு பன்னீர்செல்வம், அன்றைய தமிழ் முரசின் மாணவர் மணிமன்ற மலர் இதழின் உறுப்பினராக இருந்து பல்வேறு கட்டுரைகளையும் கவிதைகளையும் சமர்ப்பித்ததாக நிகழ்ச்சியில் கூறப்பட்டது.

நாடகத்துறை, இலக்கிய உரையாடல், மொழிபெயர்ப்புத் துறை ஆகியவற்றில் திறம்பட ஆற்றிய பணிக்காக கொழும்பு திட்ட உபகாரச் சம்பளம் பெற்ற திரு பன்னீர்செல்வம், இந்தியாவிலும் இலங்கையிலும் பல்வேறு வானொலி நிகழ்ச்சிகளில் சிறப்புத் தொகுப்பு நிகழ்ச்சிகளைப் படைத்திருக்கிறார்.

க.நா.சுப்பிரமணியம், ஜானகிராமன் போன்ற தமிழ் அறிஞர்களையும் இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியையும் திரு பன்னீர்செல்வம் பேட்டி எடுத்திருக்கிறார். உள்ளூர்க் கவிஞர்களை வானொலிக்கு வரவழைத்து ‘கவிமாலை’ என்ற நிகழ்ச்சியின் மூலம் அவர்களுடைய கவிதைகளை நாடறிய அரங்கேற்றம் செய்திருக்கிறார்.

1968ல் சிங்கப்பூர் வானொலியில் சேர்ந்த இவர், 43 ஆண்டுகள் செய்தி வாசிப்பாளராகவும் நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் பணியாற்றினார்.

வண்ணத் தொலைக்காட்சி அறிமுகமானபோது சிங்கப்பூரில் முதன்முதலில் தமிழ்ச் செய்தி வாசித்த பெருமை இவரைச் சேரும்.

‘மாயா’ சிறுகதைத் தொகுப்பு, ‘சிங்கப்பூர்த் தமிழ் முன்னோடிகள்’ என்ற வரலாற்றுப் பதிவு நூல், ‘கையருகே பணம்’ என்ற மொழிபெயர்ப்பு நூல் ஆகியவற்றுடன் நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும் இவர் இயற்றியுள்ளார்.

பல நாடுகளில் கருத்தரங்குக் கட்டுரைகளைத் திரு பன்னீர்செல்வம் வழங்கியுள்ளார். திருவள்ளுவர் விருது, கலாரத்னா விருது, மக்கள் கவிஞர் விருது, பாரதிதாசன் விருது, தமிழவேள் விருது உள்ளிட்ட கெளரவங்களையும் இவர் பெற்றிருக்கிறார்.

பன்முகத்தன்மை வாய்ந்த இலக்கியவாதியான திரு பன்னீர்செல்வத்திற்கு இவ்விருதை வழங்குவதன் மூலம் கவிமாலையும் சிறப்பு பெறுவதாக, விருதை அறிவித்த கவிமாலைக் காப்பாளர் மா.அன்பழகன் கூறினார்.

விருது பெற்றதற்கு நன்றி தெரிவித்த திரு பன்னீர்செல்வம், இளம் கவிஞர்கள் பலரை உருவாக்கி கவிமாலை அமைப்பு அயராது பாடுபடுவதாகத் தம் ஏற்புரையில் பாராட்டினார்.

“மிகச்சிறந்த இலக்கிய ஈடுபாட்டாளர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்மொழி மாதத்தின்போது இவ்விருதைப் பெற்றதில் எனக்கு மகிழ்ச்சி. சிங்கப்பூருக்காக தொடர்ந்து எழுதுவதற்கு இந்த விருது எனக்கு உந்துசக்தியாக இருக்கும்,” என்று இவர் கூறினார்.

நிகழ்ச்சியில், கவிஞர் சங்கீதா கந்தசாமிக்கு ‘இளம் கவிஞர் தங்க முத்திரை’ விருது வழங்கப்பட்டது.

கவிமாலை நடத்தும் மாதாந்தரக் கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற கவிஞர்களின் பெயர்களைத் தொகுத்து, ஆண்டு முழுவதும் அந்த வெற்றியைக் கணக்கிட்டு, அதில் முதலாவதாக வருபருவருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

பறை இசை, ஒயிலாட்டம் போன்ற நாட்டுப்புறக் கலைகளை ‘ஏகேடி கிரியேஷன்ஸ்’ அமைப்பு படைத்தது. அத்துடன், ‘மகூலம் ஆர்ட்ஸ்’ பள்ளி இயக்குநர் ஆ.மீனலோசனி, பக்கவாத்திய இசையுடன் கவிதைகளுக்கு அபிநயம் பிடித்து நடனம் ஆடினார்.

நிகழ்ச்சியில் செயற்கை நுண்ணறிவுக் காணொளியும் நாடகமும் இடம்பெற்றன. மாணவர்களுக்காக கவிமாலை நடத்திய போட்டிகளில் 45 பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் கவிதை வடிவிலேயே தொடக்கவுரை ஆற்றிய கவிமாலைத் தலைவர் இன்பா, அமைப்பில் செயலாற்றும் கிட்டத்தட்ட 40 தொண்டூழியர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

இளையர்களின் எண்ணப்போக்கை அறியவேண்டும்

நிகழ்ச்சியில் உரையாற்றிய வளர்தமிழ் இயக்கத்தின் முன்னாள் தலைவரும் ஆலோசகருமான இரா.ராஜாராம், இளையர்களுக்கு ஏற்ற வகையில் புதுமையான நிகழ்ச்சிகளை நடத்தவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

அண்மையில் நடைபெற்ற தமிழ் மின் அகராதியின் வெளியீட்டை நினைவுகூர்ந்த அவர், பாப்புவா நியூ கினியில் கிட்டத்தட்ட 600 பேர் பேசி வந்த மட்டுக்கர் மொழியைக் காப்பாற்ற அச்சமூகத்தினரும் அகராதி வெளியிட்டதைச் சுட்டினார்.

“இதற்காகக் கடுமையாக உழைத்த பெரியவர்களைக் கவனித்த அச்சமூக இளையர்கள், அந்த மொழியைக் கற்பதில் கூடுதல் ஆர்வம் காட்டினர்,” என்றார் திரு ராஜாராம்.

விழாவின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்ட திரு ராஜாராம், கவனக்குறைவாக இருந்தோமானால் மொரிஷியஸ், தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் தமிழர்கள் பலர் மொழிப் புழக்கத்தை இழக்கும் சூழல் ஏற்பட்டதைப்போல் சிங்கப்பூரிலும் ஏற்படலாம் என்று எச்சரித்தார்.

“இளையர்களின் எண்ணப்போக்கை அறியவேண்டும்,” என்று கூறிய அவர், கவிமாலை அமைப்பு கவிதைப் பயிற்சியை மாதந்தோறும் நடத்தி வருவதைச் சுட்டினார்.

‘தமிழர் ஒவ்வொருவரும் பங்காற்ற முடியும்’

நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக வருகையளித்த தமிழ் முரசு நாளிதழின் ஆசிரியர் த.ராஜசேகர், தமிழ்மொழி மாதத்தின் இறுதி நிகழ்ச்சி, நிறைவு நிகழ்ச்சியாக இல்லாமல் வரும் மாதங்களுக்கான தொடக்க நிகழ்ச்சியாக இருக்கவேண்டும் என்று கூறினார்.

“மொழி வழியாகத்தான் பண்பாடும் பாரம்பரியமும் வரையறுக்கப்படுகின்றன. சிங்கையில் குடியிருந்த நம் முன்னோர்கள், தமிழ்மொழியைத் தக்கவைப்பதில் முனைப்பாய் இருந்ததுடன் எதிர்காலத்திற்கு அதை எடுத்துச் செல்வதில் பயம் கலந்த உணர்வுடன் செயல்பட்டார்கள். சிறுபான்மை மக்களுக்கே உரித்தான பயம் அது,” என்று அவர் கூறினார்.

“சிங்கப்பூரில் தமிழ்ப் பேசு்சும் படிப்பும் ஊடகங்களும் தமிழ் சார்ந்த இத்தனை நடவடிக்கைகளும் வளங்களோடு இருப்பதற்குத் தனிமனிதர்கள் பலருக்கும் அரசாங்கத்திற்கும் நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளோம். அதன் தொடர்ச்சியாக செயல்படவேண்டிய கட்டாயம் வருங்காலச் சந்ததியினருக்கு உள்ளது,” என்று திரு ராஜசேகர் கூறினார்.

“தமிழ்மொழிக்கு தமிழர் ஒவ்வொருவரும் பங்காற்ற முடியும். ஆண்டுதோறும் நடைபெறும் பொங்கல், தீபாவளி, தமிழ்ப் புத்தாண்டு போன்ற பல விழாக்களிலும் தமிழ் ஓங்கி ஒலிக்கவேண்டும்,” என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

அதிவேகமாய் மாறிவரும் தொழில்நுட்பச் சூழலிலும் தமிழ் நடைபோடவேண்டும் என்று கூறிய திரு ராஜசேகர், வலைத்தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் தமிழின் பயன்பாடு அதிகரிக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

மண்ணின் மொழியாக தமிழுக்கு மதிப்பு

நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய தமிழ்த் திரைக்கலைஞர் பொன்வண்ணன், தாம் சிங்கப்பூருக்கு வந்து முதல் இலக்கிய நிகழ்ச்சியாக இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார்.

“என் உணர்வுகளை மக்களோடு பகிர்ந்துகொண்டது பெரும் அனுபவம். சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு நன்றி,” என்றார் அவர்.

சிங்கப்பூர் அரசாங்கமும் தமிழ் அமைப்பினரும் தமிழ் மொழியைக் கொண்டாடி, ஊக்குவித்து மக்களை மதித்து இம்மண்ணின் மொழியாக தமிழை மதித்ததற்கும் அவர் நன்றி கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!