மக்கள் கவிஞரை நினைவுகூரும் விழா

1 mins read
33e19184-8f8e-41f0-9ffe-01edda51b783
‘பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கலை இலக்கிய விழா’, 19ஆம் ஆண்டாக மே தினத்தன்று மாலை 6 முதல் 9 மணி வரை உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெறும். - படம்: மக்கள் கவிஞர் மன்றம்
multi-img1 of 3

மே தினத்தன்று, தொழிலாளர்கள் மற்றும் உழவர்களின் உழைப்பை உணர்வுபூர்வமாக வர்ணித்த மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை நினைவுகூரும் கலை இலக்கிய விழா 19ஆம் ஆண்டாக நடைபெறவுள்ளது.

மக்கள் கவிஞர் மன்றம் ஏற்பாடு செய்யும் இவ்விழா, உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். 5.30 மணிக்கு சிற்றுண்டி வழங்கப்படும்.

எம்இஎஸ் குழும நிறுவனரும் தலைமை நிர்வாகியுமான திரு முகமது அப்துல் ஜலீல் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார்.

ஒவ்வோர் ஆண்டும் இவ்விழாவில் இந்தியாவிலிருந்து ஒரு பேச்சாளர் மக்கள் கவிஞரைப் பற்றிப் பேசுவது வழக்கம். இம்முறை, புகழ்பெற்ற இந்திய நாட்டுப்புறப் பாடகர் கரிசல் குயில் கிருஷ்ணசாமி இசை நிகழ்ச்சி படைப்பார்.

நிகழ்ச்சியில் வெளிநாட்டு ஊழியர் ஒருவருக்கு உழைப்பாளர் விருதும் வழங்கப்படும்.

மார்ச் கடைசியில் நடைபெற்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல் போட்டியில் பரிசு பெற்ற மூவர் மேடையில் பாடுவர். வீணை இசையும் இடம்பெறும். அதன் பின்பு பரிசளிப்பு விழா நடைபெறும்.

பட்டுக்கோட்டையின் பாடல்களுக்கு பரதநாட்டியம் மற்றும் குழு நடனங்களை ‘வாழ்வியல் இலக்கியப் பொழில்’ குழுவின் நடனமணிகள் வழங்குவர்.

“பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், தம் பாடல் வரிகள் மூலம் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகக் குரல்கொடுத்தார். தொழிலாளர்களது உழைப்பின் முக்கியத்துவத்தைக் கேட்போர் அனைவரது மனங்களிலும் பதியும்படிச் செய்தார்.

“அதனால், மே தினத்தன்று அவரது நினைவாக இவ்விழாவை ஏற்பாடு செய்கிறோம்,” என்றார் மக்கள் கவிஞர் மன்றச் செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ராஜன்.

குறிப்புச் சொற்கள்