தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சென்னையிலும் சிங்கப்பூரிலும் வெளியாகும் உள்ளூர்க் கலைஞர்களின் திரைப்படம்

2 mins read
ced3240e-1ab3-4727-a4dc-310f081f360c
‘ஹே அர்ஜுன்’ திரைப்பட சுவரொட்டி. - படம்: படக் குழு

பழக்கமில்லாத ஊர், மாறுபட்ட மக்கள், எதிர்பாராத சவால்கள் எனப் பல தடைகள் இருந்தும் கனவு ஒன்றே குறிக்கோளாகப் பயணம் செய்து ‘ஹே அர்ஜுன்’ எனும் காதல்-கற்பனை பாணியில் படத்தை எடுத்துள்ளனர் உள்ளுர்க் கலைஞர்கள்.

சிறுவயதிலிருந்தே தமிழ்த் திரையுலகில் சாதிக்கும் கனவுடன் செயல்பட்ட இளையர்கள் சரவணன் கெளதம், 27, முஹம்மத் ஜார்ஜி, 27, இருவரும் தங்கள் கனவை இதன் மூலம் நனவாக்கியுள்ளனர்.

புகழ்பெற்ற நடிகர் டெல்லி கணேஷ், ‘குக் வித் கோமாளி’ மூலம் புகழ்பெற்ற நகைச்சுவைக் கலைஞர் குரேஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம், முழுவதும் சென்னையில் எடுக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் முதல் பாடல், கவிதைக் காணொளியாக ஏப்ரல் 20ஆம் தேதி வெளியான நிலையில், இப்படம் தங்களுக்குப் பெரும் அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும் என நம்புகின்றனர் இந்த இளையர்கள்.

சென்னை சென்றபின் பலரை அறிமுகம் செய்துகொண்டு, இப்பணிகளை மேற்கொண்டதைச் சுட்டிக் காட்டினார் சரவணன்.

தொழில்நுட்ப வகையிலும் இன்னபிற சிக்கல்களும் ஏற்படும் எனக் கணித்திருக்க, எதிர்பாராத சிக்கல் ஒன்று முளைத்ததைத் திகிலுடன் பகிர்கிறார் இப்படத்தின் இயக்குநர் ஜார்ஜி.

இங்கிருந்தபடி கதை, திரைக்கதை உள்ளிட்டவற்றைத் தயாராக எடுத்துச் சென்று, படத்தைத் தொடங்கியபோதும் படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டி வெளியானவுடன் வெடித்தது ஒரு பூகம்பம்.

பெயர் விவரங்களற்ற நபர் ஒருவர் இது தங்கள் கதை என்றும், மேற்கொண்டு படம் எடுத்து வெளியிட்டால் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுப்போம் எனவும் மிரட்டல் விடுத்ததாகச் சொல்கிறார் ஜார்ஜி.

அதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள, உரிய சங்கத்திடம் சென்று தங்கள் படத்தின் கதை, பெயர் என அனைத்தையும் முறையாகப் பதிவு செய்துள்ளனர் குழுவினர். இந்த அனுபவத்தின் மூலம் சென்னையில் திரைத்துறை செயல்படும் விதம், உரிய சங்கங்கள், அவற்றின் பங்கு ஆகியவற்றைக் குறித்து அறிந்துகொண்டதாகச் சொல்கிறார் இவர்.

கதையை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு திரைப்படம் எடுப்பது எளிதான செயலன்று. இசையமைப்பு, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, வரைகலை போன்ற கணினிக்காட்சி அமைப்புகள், வண்ணத் திருத்தம், தணிக்கை என எண்ணற்ற படிகளைக் கடக்கவேண்டும்.

இவை அனைத்தையும் சமாளித்து, எப்படியும் திரைப்படத்தை முடித்து வருவார்கள் என்ற நம்பிக்கையில் அவர்களை வழியனுப்பினார், இப்படத்தைத் தயாரித்துள்ள உள்ளூர் நிறுவனமான ‘த ச்சோசேன் ஒன்’ நிறுவன இயக்குநர் அபு கரீம் இஸ்மாயில்.

இந்த இளையர்களின் துடிப்பையும் ஆர்வத்தையும் பார்க்கும்போது, அவர்கள் உச்சத்தைத் தொடுவார்கள் எனும் நம்பிக்கை தமக்கு ஏற்பட்டது என்றார் அபு கரீம்.

இப்பட வெளியீட்டுக்காக இரவுபகலாகக் கடுமையாக உழைக்கின்றனர் படக்குழுவினர். ஏப்ரல் 27ஆம் தேதி சென்னையில் வெளியிடப்பட்ட இந்தத் திரைப்படம், மே மாதம் 11ஆம் தேதி சிங்கப்பூர் கார்னிவல் சினிமாஸ் திரையரங்கில் வெளியீடு காண்கிறது.

குறிப்புச் சொற்கள்