கதைக்களத்தில் எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தனின் ‘செம்பவாங்’ நாவல்

கதைக்களத்தில் எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தனின் ‘செம்பவாங்’ நாவல்

2 mins read
2fee7d19-ffae-431d-ab63-a8f50c6b9750
2021ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி, திருவாட்டி கமலாதேவி அரவிந்தனின் செம்பவாங் நாவல் வெளியீட்டு விழாவில் அப்போதைய போக்குவரத்து அமைச்சர் ஓங் யி காங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். (இடமிருந்து) அமைச்சர் ஓங் யி காங், டாக்டர் அனிதா தேவி பிள்ளை, திருவாட்டி கமலாதேவி அரவிந்தன். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் 119வது கதைக்களம் நிகழ்ச்சி மே 5ஆம் தேதி பிற்பகல் 4.00 மணிக்கு, சிங்கப்பூர் தேசிய நூலகத்தின் ஐந்தாம் தளத்தில் அமைந்துள்ள ‘இமேஜினேஷன்’ அறையில் நடைபெறவிருக்கிறது.

இதில், 1960களில் செம்பவாங் வட்டாரத்தில் வாழ்ந்த மக்களின் சமூக வாழ்க்கையை எதிரொலிப்பதோடு அங்கு வாழ்ந்த அடித்தட்டு மக்களின் துயரத்தையும் எடுத்தியம்பும் எழுத்தாளர் கமலா தேவி அரவிந்தனின் ‘செம்பவாங்’ நாவல் பற்றிய கலந்துரையாடல் அங்கம் இடம்பெறும்.

திருவாட்டி இசக்கிசெல்வி நூலின் சிறப்புகளைக் கதைக்கள வாசகர்களோடு பகிர்ந்துகொள்வார். அதனைத் தொடர்ந்து நூலாசிரியருடன் இடம்பெறும் கலந்துரையாடல் அங்கத்தில் திருவாட்டி மஹாஜெபின், திருவாட்டி எழிலி , திருவாட்டி ஹபிபா ஆகியோர் பங்கேற்பர்.

‘இலக்கியத்தில் யதார்த்தம்’ என்ற தலைப்பில் ஆசிரியர் மா. அர்ச்சுனன் சிறப்புரை ஆற்றுவார்.

கதைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட போட்டிப் படைப்புகளைப் பற்றிய கலந்துரையாடலும் வெற்றியாளர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்படவிருக்கின்றன.

அடுத்த மாத நூல் அறிமுகப் போட்டிக்கு, சிங்கப்பூர் தேசிய நூலகத்திலுள்ள சிறுகதை, குறுநாவல் அல்லது நாவல் ஒன்றுக்கு 140 சொற்களுக்குள் நயம்பட நூலறிமுகத்தை எழுதி அனுப்ப வேண்டும். சிறந்த 4 நூலறிமுகங்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும்.

மூன்று பிரிவுகளாக நடைபெறும் ஜூன் மாதச் சிறுகதைப் போட்டிக்கு எழுதுவதற்கான தொடக்க வரிகள்:

உயர்நிலைப் பள்ளி மாணவர் பிரிவு: 200 முதல் 300 சொற்களுக்குள் எழுத வேண்டும்.

“மீண்டும் கிடைத்திருக்கும் வாய்ப்பை நழுவவிடுவேனா?” என்ற எண்ணத்துடன் முன்னோக்கிச் சென்றேன்.

இளையர் பிரிவு: 300 முதல் 400 சொற்களுக்குள் எழுத வேண்டும்.

எவ்வளவு விரைவாக ஓடினாலும் அந்தக் கல் என்னை நோக்கி வருகிறதே….!

பொதுப்பிரிவு: 400 முதல் 500 சொற்களுக்குள் எழுத வேண்டும்.

“நாளைக்குள் சொன்ன வேலையை முடிக்க வேண்டும்” மின்னஞ்சலை அனுப்பிவிட்டுக் கணினியைக் கோபத்துடன் மூடினான்.

படைப்புகளைக் கணினியில் அச்சிட்டு http://singaporetamilwriters.com/kkcontest என்ற மின்னியல் படிவத்தின் வழியாக மே 24ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கவும்.

மேல்விவரங்களுக்கு: http://singaporetamilwriters.com/kathaikalam/ பிரதீபா வீரபாண்டியன் - 81420220/ பிரேமா மகாலிங்கம் - 91696996.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்கதைக்களம்