தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இலங்கையில் களம் கண்ட சிங்கப்பூர் கிரிக்கெட் அணிகள்

2 mins read
f902f1bb-bfef-4834-b820-6ce6d86ccb2e
இலங்கைக்குச் சென்ற ‘உத்தாமா’ ஆடவர் அணி. - படம்: உள்ளரங்க கிரிக்கெட் சங்கம் (ஐசிஏ) சிங்கப்பூர்
multi-img1 of 2

இலங்கைத் தலைநகர் கொழும்பில் ஏப்ரல் 22 முதல் 27ஆம் தேதி வரை நடைபெற்ற ‘யு-ப்ரோ’ கிளப் உலகப் போட்டிகளை முடித்துக்கொண்டு உள்ளரங்க கிரிக்கெட் சங்கம் (ஐசிஏ) சிங்கப்பூரின் ஆடவர், மகளிர் அணிகள் நாடு திரும்பியுள்ளன.

சென்ற ஆண்டு முதன்முறையாக நடந்த போட்டிகளுக்கு மூன்று ஆடவர் அணிகளை அனுப்பிய ‘ஐசிஏ’ சிங்கப்பூர், இவ்வாண்டு ஓர் ஆடவர் அணியையும் முதன்முறையாக ஒரு மகளிர் அணியையும் அனுப்பியது. அதில் இலங்கைப் பணிப்பெண்கள் நால்வர் இடம்பெற்றிருந்தனர். இரண்டு அணிகளும் ‘உத்தாமா’ என்று அழைக்கப்படுகின்றன.

சென்ற ஆண்டைவிட இவ்வாண்டு சிறப்பாக விளையாடிய ஆடவர் அணி, மூன்றாம் நிலையில் ஆறு ஆட்டங்களில் மூன்றில் வென்று 10 அணிகளில் ஒன்பதாம் நிலையைப் பிடித்தது.

முதல் ஆட்டத்தில் இலங்கையின் ‘ஓஸ்டேஷியா’ அணியிடம் 78 ஓட்ட வித்தியாசத்தில் தோல்வியுற்ற ஆடவர் அணி, இரண்டாம் ஆட்டத்தில் ‘ஜஃப்னா கோல்ட்ஸ்’ அணியை 51 ஓட்ட வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஆட்ட நாயகனாக கிரன் அருள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதையடுத்து ‘ஐஐசிஏ’ எனும் இந்திய உள்ளரங்க கிரிக்கெட் அணியையும் 59 ஓட்டங்களில் வீழ்த்திய சிங்கப்பூர் அணி (ஆட்ட நாயகன் ஸ்ரீகாந்த்), அடுத்த இரு ஆட்டங்களில் தோல்வியுற்றது.

இறுதி ஆட்டத்தில் ‘ஜஃப்னா கோல்ட்ஸ்’ அணியை 57 ஓட்ட வித்தியாசத்தில் வென்ற சிங்கப்பூர் அணி (ஆட்ட நாயகன் ராஜகோபாலன் ராகுல்), ஒன்பதாம் நிலையைப் பிடித்தது.

மகளிர் அணிக்கு ஆறு ஆட்டங்களிலும் வெற்றி கிட்டவில்லை.

“நாங்கள் வெற்றிக் கிண்ணத்தைப் பெறாவிட்டாலும் எங்கள் அணியை அனைவரும் பெரிதும் பாராட்டினர். ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த வலுவான அணியினருடன் போட்டியிட்டோம்.

“சிங்கப்பூரிலும் உலக அளவிலும் மகளிர் அணிக்கு இது முதல் போட்டி அனுபவம். இது அவர்களுக்குப் பெரிய கற்றல் அனுபவமாக இருந்தது. அடுத்தடுத்த ஆட்டங்களில் அவர்கள் முன்னேறினர். குறிப்பாக, ஓர் ஆட்டத்தில் 49 ஓட்டங்கள் எடுத்தனர்,” என்றார் உள்ளரங்க கிரிக்கெட் சங்கத் தலைவர் முரளி.

இப்போட்டிகளில் பங்கேற்ற இரு இந்திய உள்ளரங்க கிரிக்கெட் அணிகளுக்கும் சிங்கப்பூர் பயிற்சியளித்ததாக அவர் கூறினார்.

மேலும், ஏப்ரல் 20ஆம் தேதி தெலுக் பிளாங்கா சமூக மன்றத்தைச் சேர்ந்த சுமார் 120 இளையர்களுக்கு உள்ளரங்க கிரிக்கெட் சங்கம் கிரிக்கெட் விளையாட்டைக் காட்சிப்படுத்தியது.

குறிப்புச் சொற்கள்