‘வெளிநாடுகளில் வேலைபார்ப்போர் இலங்கைப் பொருளியலுக்கு ஆற்றும் பங்கு பெரிது ’

‘வெளிநாடுகளில் வேலைபார்ப்போர் இலங்கைப் பொருளியலுக்கு ஆற்றும் பங்கு பெரிது ’

2 mins read
1d6c655c-cc7f-44dd-8eae-4ec296aaadd8
நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் பெருந்திரளாகப் பங்கேற்ற பெண் ஊழியர்கள். - படம்: தினே‌ஷ் - நளிந்தா ஸ்டுடியோஸ்

சிங்கப்பூரில் பணியாற்றும் இலங்கைப் பணிப்பெண்களுக்கான நிகழ்ச்சி ஏப்ரல் 28ஆம் தேதி காரிடாஸ் வில்லேஜில் நடைபெற்றது.

சிங்கப்பூரில் உள்ள இலங்கைத் தூதரகம் சார்பில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சி தூதரகத்துக்கும் பணிப்பெண்களுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவதன் மூலம் அவர்களுக்குத் தேவையான விழிப்புணர்வை ஊட்டும் நோக்கில் நடத்தப்பட்டது.

இலங்கைப் பணிப்பெண்களுக்கு வலிமை, தன்மதிப்பு அளிக்கும் வகையில் இந்நிகழ்ச்சி அமைந்தது. இலங்கை வர்த்தகச் சங்கத்தின் ஆதரவுடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஏறத்தாழ 200 பணிப்பெண்கள் கலந்துகொண்டனர்.

கடந்த ஆண்டு செப்டம்பருக்குப் பிறகு இரண்டாம் முறையாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற சிங்கப்பூருக்கான இலங்கைத் தூதர் சேனரத் திசநாயக, வெளிநாடுகளில் வேலைபார்க்கும் இலங்கை மக்கள் இலங்கைப் பொருளியலுக்கு அதிக அளவில் பங்களிப்பதாகக் கூறினார்.

அவர்களுக்கு உரிய பாதுகாப்பும் உதவியும் வழங்க வேண்டியதை வலியுறுத்திய அவர், தூதரகம் அவற்றை உறுதிசெய்யும் எனவும் உதவி தேவைப்பட்டால் எந்நேரமும் தூதரகத்தைத் தொடர்புகொள்ளலாம் எனவும் சொன்னார்.

எதிர்பார்ப்புகளை விஞ்சும் வகையில் இந்நிகழ்ச்சி நடந்தேறியதாக மகிழ்ச்சி தெரிவித்தார் நிகழ்ச்சியின் முதன்மை ஆதரவு அமைப்பான இலங்கை வர்த்தகச் சங்கத்தின் தலைவர் லக்ஷாந்தி ஃபெர்னாண்டோ.

உயரிய நோக்கத்துடன் நடத்தப்படும் இந்நிகழ்ச்சியின் மூலம் பங்கேற்பாளர்கள் பயன்பெற வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார் சிங்கப்பூரில் உள்ள இலங்கைத் தூதரகத் தொழிலாளர் பிரிவின் ஆலோசகரும் தலைவருமான நிபுணா திப்புதுமுனுவ.

சிங்கப்பூர் மனிதவள அமைச்சு, சிங்கப்பூர்க் காவல்துறை, சமூக ஆதரவு, பயிற்சிக்கான வெளிநாட்டுப் பணிப்பெண் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளிலிருந்து விழிப்புணர்வு விரிவுரைகள் வழங்கப்பட்டன.

பங்கேற்பாளர்களுக்கு இலங்கைத் தூதரகமும் பங்காளித்துவ அமைப்புகளும் சான்றிதழ்கள் அளித்தன. நிகழ்ச்சியில் அனைவருக்கும் நண்பகல் விருந்தும் அன்பளிப்புப் பைகளும் வழங்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்