பண்பாடுவழி பாடம் புகட்டிய பாலபாரதம்

2 mins read
54b9cbe3-4f30-4287-92a5-6a7c9e5511c2
பாஞ்சாலி சபதத்தைச் சித்திரித்த பாலபாரதம் நாடகம், பார்வையாளர்களையும் கலந்துரையாடலில் ஈடுபடுத்தும் வகையில் சுவையாக இருந்தது. - படம்: ரவி சிங்காரம்
multi-img1 of 4

இந்தியக் காவியமான மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டது ‘டிரையேங்கல் எடியுகேஷன் கன்சல்டன்சி’ நிறுவனத்தின் ‘பாலபாரதம்’ நாடகம்.

நாடகம் மே 3ஆம், 4ஆம் தேதிகளில் குட்மேன் ஆர்ட்ஸ் செண்டரில் அரங்கேறியது.

3ஆம் தேதியன்று நாடகத்தைக் காண எட்ஜ்ஃபீல்டு தொடக்கப்பள்ளி, மோண்ட்ஃபர்ட் தொடக்கப்பள்ளி, செயிண்ட் கேபிரியல்ஸ் உயர்நிலைப்பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளிலிருந்தும் 87 மாணவர்கள் வந்திருந்தனர்.

நாடகத்தில் நடித்த பலரும் மாணவர்களே என்பது நாடகத்தின் சிறப்பு. அதுவும் இம்மாணவர்கள் குரு சித்தம் பெருங்குடில் என்ற அமைப்பிலிருந்து வில்வித்தை உட்பட்ட தற்காப்பு மற்றும் ஆன்மீகக் கலைகளைக் கற்றுத் தேர்ந்தவர்கள்.

அவர்களோடு வழக்குரைஞர், நிர்வாகி, இல்லத்தரசி, உளவியல் மருத்துவர் எனப் பலதுறையினரும் நடித்தனர்.

தெருக்கூத்து வடிவில் கட்டியங்காரர்கள் நாடகத்தை நகைச்சுவையாக வழிநடத்திச் சென்றனர். நாடகத்தின் முக்கிய அங்கங்களில் கேள்விகளையும் எழுப்பி அத்தினாபுர மக்களாக வீற்றிருந்த பார்வையாளர்களிடமிருந்து கருத்து கோரினர்.

‘ஏகலைவன் குரு தட்சணையாகத் தன் கட்டை விரலைக் கொடுத்தது சரியா’, ‘துரியோதனன் கோபமாகப் பேசியது சரியா’ எனப் பார்வையாளர்களிடம் கேள்வியெழுப்பினர் கட்டியங்காரர்கள்.
‘ஏகலைவன் குரு தட்சணையாகத் தன் கட்டை விரலைக் கொடுத்தது சரியா’, ‘துரியோதனன் கோபமாகப் பேசியது சரியா’ எனப் பார்வையாளர்களிடம் கேள்வியெழுப்பினர் கட்டியங்காரர்கள். - படம்: ரவி சிங்காரம்

நடிகர்களின் தத்ரூபமான நடிப்பு கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டியது. கண்களை உருட்டி வில்லங்கத்தனமாக நடித்த சகுனி, ஆவேசமாகப் பேசிய துரியோதனனும் துச்சாதனனும், அவர்களைப் பழி தீர்க்க கனல் தெறிக்க சபதமிட்ட பாஞ்சாலியும் பாண்டவர்களும், ஏமாற்றத்தில் தலைகுனிந்த தருமர் என அனைவரும் நாடகத்திற்கு வலுசேர்த்தனர்.

கதைமாந்தர்களின் முகத்தில் பூசப்பட்ட சாயம், ஒளியூட்டும் கனசதுரங்கள், மர்மமான இசை, அரண்மனையைக் காட்டிய திரை, உச்ச கட்டங்களில் நடனங்கள், என அனைத்தும் நாடகத்திற்கு மெருகேற்றின.

“இதை எட்டு ஆண்டுகளுக்கு முன்பு மோண்ட்ஃபர்ட் தொடக்கப்பள்ளியில் ‘மகாபாரதத்தை பாராட்டுதல்’ என்ற கருவில் தொடங்கினோம்.

“ஒவ்வோர் ஆண்டும் வெவ்வேறு கதாபாத்திரங்களை மேடையேற்றி, இன்று ஒட்டுமொத்தமாகக் காட்சிப்படுத்தினோம்,” என்றார் ‘டிரையேங்கல் எடியுகேஷன் கன்சல்டன்சி’யின் இயக்குநர் முரளிதரன் கோபால்.

அடுத்ததாக, ‘காண்டீபா’ எனும் நாடகத்தை அவர் படைக்கவுள்ளார். அதில் நடிக்க விரும்புவோர் @thinktriangle எனும் இன்ஸ்டகிராம் தளம்வழி தொடர்புகொள்ளலாம்.

சிறுவயது முதல் பெரியவர்கள் வரை நாடகத்தில் நடித்தனர்.
சிறுவயது முதல் பெரியவர்கள் வரை நாடகத்தில் நடித்தனர். - படம்: ரவி சிங்காரம்
குறிப்புச் சொற்கள்