அன்னையர் தினம் என்பது கொண்டாட்டத்திற்கு உகந்த தினம் எனக் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு (64%) சிங்கப்பூரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஏப்ரல் 29 முதல் மே 2ஆம் தேதி வரை, 18 வயதுக்கு மேற்பட்ட 1,115 சிங்கப்பூரர்களிடையே ‘யூகவ்’ நிறுவனம் நடத்திய இணையக் கருத்தாய்வில் இது தெரியவந்துள்ளது.
சிங்கப்பூர் மக்களைப் பிரதிநிதிக்கும் வகையில் வயது, இடம், பாலினம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த ஆய்வு நடைபெற்றது.
பாதிக்கு மேற்பட்டோர் இவ்வாண்டு அன்னையர் தினத்தைக் கொண்டாடத் திட்டமிடுகிறார்கள் என்றும் கருத்தாய்வு கூறியது.
ஆய்வின்படி, அன்னையர் தினத்தை முறையான ஒரு தினமாகக் கருதுவோரில் வயதானவர்களைவிட இளையரே அதிகம்.
‘ஜென்ஸீ’ (GenZ) பிரிவினரில் 71 விழுக்காட்டினர் இந்நாளை முறையான தினமாக எண்ணுகின்றனர். ‘ஜென்ஸீ’, 1997ஆம் ஆண்டு முதல் 2012 ஆண்டு வரை பிறந்தவர்களைக் குறிக்கும்.
ஒப்பீட்டுக்கு, ‘பேபி பூமர்ஸ்’ (1946ஆம் ஆண்டுக்கும் 1964ஆம் ஆண்டுக்கும் இடையே பிறந்தவர்கள்) என அழைக்கப்படும் மூத்தோரில் 68 விழுக்காட்டினரும் ‘ஜென்எக்ஸ்’ (GenX) பிரிவினரில் 62 விழுக்காட்டினரும் இவ்வாறு கருதுகின்றனர். 1965ஆம் ஆண்டு தொடங்கில 1980ஆம் ஆண்டு வரை பிறந்தவர்கள் இவர்கள்.
பொதுவாக, பிறந்தநாள், திருமண ஆண்டு நிறைவைத் தவிர்த்து மற்ற நாள்களோடு ஒப்பிடுகையில் (தந்தையர் தினம், புத்தாண்டின் முதல் நாள், அன்பர் தினம், அனைத்துலக மகளிர் தினம் உள்ளிட்டு) அன்னையர் தினமே முறையான கொண்டாட்டத்திற்கு உகந்தது என சிங்கப்பூரர்கள் நினைப்பதாகவும் ஆய்வு தெரிவித்தது.
அன்னையர் தினத்தைச் சிறப்பாகக் கழிப்பதற்குப் பரிசுகள் வழங்குவதே தலைசிறந்த வழி என 48 விழுக்காட்டினர் கூறினர்.
வெளியே அல்லது வெளியூர் செல்லுதல் (46%), வீட்டில் உணவுத் தயாரித்தல் (40%), அன்னைக்குப் பதிலாக ஒரு நாள் வீட்டு வேலைகளைப் பார்த்துக்கொள்ளுதல் (35%), மலர்க்கொத்து தருதல் (28%), மனமுவந்து அட்டை வழங்குதல் (26%), ‘ஸ்பா’ அல்லது நலம் பேணும் நடவடிக்கையில் ஈடுபடுத்துதல் (21%) என மற்ற வழிகளையும் சிங்கப்பூரர்கள் முன்வைத்தனர்.
அன்னையர் தினக் கொண்டாட்டம் குறித்து தமிழ் முரசு நேர்கண்டவர்களில் ஒருவரான 56 வயது வனிதா இளஞ்சேரன், “காலையில் இறை வழிபாட்டுக்குப் பிறகு என் அம்மாவின் வீட்டுக்குச் சென்று அவரிடம் ஆசீர்வாதம் பெற்று அன்பளிப்பு தந்து பின்பு என் வீட்டுக்குத் திரும்பி என் பிள்ளைகள் எனக்காக வைத்திருக்கும் கேக்கை வெட்டுவேன். என் பிள்ளைகள் இவ்வாண்டு தங்க மூக்குத்தி வாங்கித் தந்துள்ளனர்,” என்றார்.
மற்றொருவரான கெல்வின் குணா, 30, “என் தாயார் மலேசியாவிற்குச் செல்வதால் ஃபேஸ்புக் வழியாக அவருக்கு வாழ்த்துகள் தெரிவிப்பேன்,” என்றார்.
“நானும் என் தோழரும் எங்கள் தாய்மார்களுக்கென ஒரு காணொளியைத் தயாரித்தோம். குடும்ப விருந்துக்கும் செல்வோம்,” என்றார் சுரேஷ் சுபாஷ், 39.