‘ஈக்கான் பாராங்’ மீனின் எண்ணற்ற முள்களை உடைக்க இருபுறமும் இழுக்கின்றனர் டான்யா பிள்ளை நாயரும் அவரது அத்தை தனமும்.
இது விளையாட்டல்ல, சமையல்தான் என புன்சிரிப்போடு கூறுகிறார் டான்யா.
செட்டி மலாக்கா சமூகத்தினரின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றானது ‘ஓத்தா பிளாங்கா’. அதைத் தயாரிக்கத்தான் இந்தப் போராட்டம்.
தேசிய நூலக வாரியத்தின் ‘ஃப்ரம் புக் டு குக்’ யூடியூப் தொடரின் சமையல் குறிப்புகளில் ஒன்றுதான் ‘ஓத்தா பிளாங்கா’.
ஏப்ரல் 29ஆம் தேதியிலிருந்து தன் இரண்டாம் அத்தியாயத்திற்குத் திரும்பியுள்ளது இத்தொடர்.
‘குவே பை டீ’, ‘மீ மைதின்’, ‘புங்கா கோபிஸ்’, மூங்கிலாலான ‘சூன் குவே’, கடல் நத்தை-பப்பாயா கறி போன்ற பல்சுவையான உணவுகளின் சமையல் இத்தொடரில் காண்பிக்கப்படும்.
குறிப்பாக, டான்யா தன் அத்தையுடன் இணைந்து படைக்கும் ‘ஓத்தா பிளாங்கா’ சமையல் மே 27ஆம் தேதி வெளியாகும்.
மண்பானையில் சமையல்
வாழையிலையில் வறுத்த ‘ஓத்தா’ மீனுக்குத் தொடர்பான ‘ஓத்தா பிளாங்கா’, ‘பிலாங்கா’ எனும் இந்திய மண்பானையில் சமைக்கப்படுகிறது. மீன் தசை, தேங்காய் கறியோடு பல்சுவை உணவாக வழங்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
சென்ற ஆண்டு வெளியான ‘பெரனாக்கான் இந்தியர்களின் பாரம்பரிய உணவு: ஒரு செட்டி மலாக்கா சமையலறையில்’ எனும் நூலிலும் ‘ஓத்தா பிளாங்கா’ இடம்பெற்றது.
நூலை ஒருங்கிணைத்தவரும் ‘பெரனாக்கான் இந்தியர் (செட்டி மலாக்கா) சங்கப் பொருளாளருமான டான்யா, ‘ஓத்தா பிளாங்கா’ சமைக்க தன் அத்தை தனமிடமிருந்துதான் கற்றுக்கொண்டார்.
“என் அத்தை, 16 வயதில் சிங்கப்பூரில் தன் பாட்டி வீட்டில் தங்கியபோது ‘ஓத்தா பிளாங்கா’ சமைக்கக் கற்றுக்கொண்டார்,” என்றார் டான்யா.
சமைக்க இரண்டு மணி நேரம் எடுப்பதால், இந்த உணவைச் சிறப்பு நிகழ்ச்சிகளுக்காகவே சமைப்பதாகக் கூறினார் டான்யா. மூதாதையருக்குப் பிடித்த உணவு சமைக்கப்படும் ‘பரச்சு’ எனும் சடங்கிலும் செட்டி மலாக்கா சமூகத்தினர் சிலர் இதைச் சமைக்கக்கூடும் என்றார் டான்யா.
தன் சமையல் குறிப்பு நூலுக்குக் கிடைத்துள்ள நல்ல வரவேற்பினால் இனி சமையலோடு இணைந்த மேடை நாடகத்தையும் படைக்க விரும்புவதாகக் கூறினார் டான்யா. நூலை தேசிய நூலக வாரிய நூலகங்களில் இரவல் பெறலாம்.
தேசிய நூலக வாரியத்தின் சமையல் தொடரைக் காண https://www.youtube.com/c/NLBsg இணையத்தளத்தை நாடலாம். இத்தொடர், தேசிய நூலகத்தின் ‘பிப்லியோஏஷியா+’ வலையொளியிலும் உள்ளது.
2022ல் ஐந்து காணொளிகளாக வெளியான தொடரின் முதல் அத்தியாயம், 337,000க்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றது. 1920 ‘ரெண்டாங்’கிலிருந்து 1990களின் பாஸ்டா வரை பல உணவுகள் அந்தக் காணொளியில் உள்ளன.

