சிங்கப்பூரில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களின் வாழ்க்கைக் கதைகளைச் சித்திரிக்கும் வகையில் இம்மாதம் வெளியாகவுள்ளது ‘உழைப்பாளர் தினம்’ திரைப்படம்.
இயக்குனர் சந்தோஷ் நம்பிராஜன், 40, இப்படத்தை இயக்கி, அதில் நடித்து, படத்தைத் தயாரித்தும் உள்ளார். அவர் கடந்த எட்டு ஆண்டுகளாக சிங்கப்பூரில் வாழ்ந்து வரும் சிங்கப்பூர் நிரந்தரவாசி.
தமிழ் திரைப்பட உலகில் பிரபலமாக இருக்கும் திரைப்பட இயக்குனர் மற்றும் புகைப்பட இயக்குனர் செழியனுக்குத் துணை ஒளிப்பதிவாளராக இருந்த அனுபவம் கொண்டவர் சந்தோஷ்.
“சிங்கப்பூரில் இருக்கும் ஒவ்வொரு கட்டடத்திற்குப் பின்னாலும் ஒரு வெளிநாட்டு ஊழியரின் கதை இருக்கிறது. இந்தப் படம் உழைப்பாளர் தின மாதத்தில் வெளியிடப்படுவதால் இது வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஓர் அர்ப்பணிப்பு,” என்று சந்தோஷ் கூறினார்.
சிங்கப்பூரில் பணியாற்றும் ஒரு வெளிநாட்டு ஊழியர் மீண்டும் இந்தியாவிற்குச் செல்வாரா அல்லது சிங்கப்பூரிலேயே இருப்பாரா என்பதுதான் கதைக் கரு.
படப்பிடிப்பு சிங்கப்பூரிலும் தமிழகத்திலும் இடம்பெற்றது. திரைப்படம் இந்தியாவில் வெளியிடப்படும். வந்த புதிதில் இருந்த சிங்கப்பூரை ஒப்பிடுகையில் தற்போது சிங்கப்பூர் பெருமளவில் மாற்றம் கண்டுள்ளதாகக் கருதும் சந்தோஷ், ‘காதலிக்க நேரமில்லை’ எனும் நாடகத்திற்கும் ஒளிப்பதிவாளராக இருந்துள்ளார்.
திரைப்படத்தில் ‘அழகான சிங்கப்பூர்’ எனும் பாடல் இடம்பெற்றுள்ளது. அதில் ஒரு வெளிநாட்டு ஊழியரின் சிங்கப்பூர் வாழ்க்கை அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. திரைப்படத்திற்கு மஷ்ஹுத் ஹம்சா இசையமைத்துள்ளார்.
உள்ளூர் ஒளிப்பதிவாளர் நட்சத்திரம் பிரேம்குமார், 36, திரைப்பட ஒளிப்பதிவாளராகத் தனது பங்கை அளித்துள்ளார். சந்தோஷ் நம்பிராஜுக்கு நன்கு அறிமுகமான பிரேம்குமார் வெளிநாட்டு ஊழியர்களை மையமாக வைத்து ஒரு படத்தில் ஈடுபடுவது இதுவே முதல்முறை.
தொடர்புடைய செய்திகள்
“இந்தப் படத்திற்காக நான் வெளிநாட்டு ஊழியர்களின் தங்குவிடுதிகளுக்குச் செல்ல வேண்டியிருந்தது. அந்த அனுபவம் எனக்குப் புதிது. சில தங்குவிடுதிகளில் வசதிகள் சரியாக இல்லை என்பதால் வெளிநாட்டு ஊழியர்கள் இதுபோன்ற இடங்களில்தான் தங்குகிறார்களா என்று நினைத்து நான் கவலை அடைந்தேன். இந்தப் படம் எனக்கு உணர்வுபூர்வமான ஓர் அனுபவத்தை வழங்கியது,” என்று பிரேம்குமார் சொன்னார்.