பொழுதுபோக்கு பெற்றுத்தந்த அனைத்துலக வெற்றி

2 mins read
ca021a0c-bfb7-4e11-9233-bb9deaecd917
தென்கொரியாவில் நடந்த ஆளில்லா வானூர்தி காற்பந்துக் குழுப் போட்டியில் 29 வயது ராஜ்மனோவா (வலது) அணியினர் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றனர். - படம்: ராஜ்மனோவா சேவியர்
multi-img1 of 3

பல்கலைக்கழகப் பருவத்திலிருந்து ‘டிரோன்’ எனும் ஆளில்லா வானூர்திகளில் இவருக்கு நாட்டம் இருந்தது.

வான்வெளிப் பொறியியலில் முதுநிலைப் பட்டம் முடித்து, கடந்த ஆறு ஆண்டுகளாக ‘ஃபிளேர் டைனமிக்ஸ்’ நிறுவனத்தில் ஆளில்லா வானூர்திப் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார் ராஜ்மனோவா சேவியர், 29.

வேலையையும் தாண்டித் தன் திறன்களை வளர்த்துக்கொள்ளும் ஆர்வம், அண்மையில் அவருக்கு ஒரு முக்கிய வெற்றியைப் பெற்றுத் தந்தது.

மே 9 முதல் 11ஆம் தேதிவரை தென்கொரியாவின் இஞ்சியோன் நகரில் நடைபெற்ற அனைத்துலக ஆளில்லா வானூர்திக் காற்பந்து விழாவில் அவர் பங்கேற்றார். 20 நாடுகளிலிருந்து 400 பேருடன் உலகின் ஆகப் பெரிய ஆளில்லா வானூர்திக் காற்பந்துப் போட்டியாக இது திகழ்ந்தது.

இப்போட்டிக்கு சிங்கப்பூர் ஆளில்லா வானூர்திக் காற்பந்துச் சங்கம் மூன்று அணிகளை அனுப்பியிருந்தது.

பந்து வடிவ வேலியோடு பறக்கும் ஆளில்லா வானூர்திகளை வளையங்களுக்குள் நுழையச் செய்து ‘கோல்’ போடுவதே இப்போட்டி.
பந்து வடிவ வேலியோடு பறக்கும் ஆளில்லா வானூர்திகளை வளையங்களுக்குள் நுழையச் செய்து ‘கோல்’ போடுவதே இப்போட்டி. - படம்: சிங்கப்பூர் ஆளில்லா வானூர்திக் காற்பந்து சங்கம்
விளையாட்டு அரங்கு.
விளையாட்டு அரங்கு. - படம்: ராஜ்மனோவா சேவியர்

‘ஃபிடா (FIDA)‘ குழுச் சவாலில் ‘மெர்லயன் டைட்டன்ஸ்’ எனும் ராஜ்மனோவாவின் அணி, வெண்கலப் பதக்கத்தை வென்றது. ராஜ்மனோவா கோல்காப்பாளராகச் செயல்பட்டார்.

மற்றொரு சிங்கப்பூர் அணியான ‘ரோட்டர் ரெய்டர்ஸ்’, குழுச் சவாலில் வெண்கலப் பதக்கத்தோடு, ‘ஃபிடா’ உலகச் சவாலில் இரண்டாம் பரிசும் 5,000 அமெரிக்க டாலரும் (S$6,770) வென்றது.

சென்ற ஆண்டு மே மாதம் சிங்கப்பூர் ஆளில்லா வானூர்திக் காற்பந்துச் சங்கத்தில் சேர்ந்த ராஜ்மனோவா, அதன்மூலம் பல ஆளில்லா வானூர்திப் போட்டிகளில் பங்கெடுத்துள்ளார். கடந்த ஈராண்டுகளில் சிங்கப்பூரில் இரு போட்டிகளிலும் சீனாவில் நடந்த ஒரு போட்டியிலும் கலந்துகொண்டார்.

ஆளில்லா வானூர்திக் காற்பந்து, 2016ல் தென்கொரியாவில் தொடங்கி, மற்ற நாடுகளுக்கும் விரிவடைந்தது.

உலகின் முதல் ஆளில்லா வானூர்திக் காற்பந்து உலகக் கிண்ணம், 2025ல் தென்கொரியாவின் ஜியோன்ஜு நகரில் நடைபெறவுள்ளது.

வான்வெளிப் பொறியியலில் அண்ணா பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டமும், சிங்கப்பூரின் ‘என்டியு-டியுஎம் ஏஷியா’வில் முதுநிலைப் பட்டமும் பெற்ற ராஜ்மனோவா, ஆளில்லா வானூர்திகளில் அதிக நாட்டம் கொண்டவர்.
வான்வெளிப் பொறியியலில் அண்ணா பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டமும், சிங்கப்பூரின் ‘என்டியு-டியுஎம் ஏஷியா’வில் முதுநிலைப் பட்டமும் பெற்ற ராஜ்மனோவா, ஆளில்லா வானூர்திகளில் அதிக நாட்டம் கொண்டவர். - படம்: ராஜ்மனோவா சேவியர்
குறிப்புச் சொற்கள்